குடும்ப சிறுகதை | Family Short Story - சர்வமும் சிவமயம்

 கோடி கௌரவர் கூடி நிற்கும்






               " நீங்க என்ன சொன்னாலும் சரி! என்னால இதை ஒத்துக்கவே முடியாது சார்"


               "நோ .... நீங்க இன்னும் பதினேழாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்துட்டு இருக்கீங்க மேடம்!"


                "தப்புன்னா தப்புதான்!  அது எந்த நூற்றாண்டா இருந்தாலும் சரி!"


                 "ஒண்ணு புரிஞ்சுக்குங்க. ஒரு காலத்துல தப்பா பார்க்கப்பட்ட பல விஷயங்கள் இன்று சரியா தெரியுது"


                  "கடவுளே வந்து சொன்னாலும் நான் இதை தவறு என்று தான் சொல்லுவேன்!"


                  "மேடம்!  இதன் ஆதி மூலமே உங்க கடவுள் கிட்டேயிருந்து வந்த சோம பானம் தான்!"


                    அலுவலக உணவு இடைவேளை நேரத்தில் நடந்த விவாதம் இதுதான். குடிப்பழக்கம் ஒன்றும் மகா பாதகம் அல்ல. அது இன்றைய சூழலில் மிகவும் சாதாரணமான ஒரு பழக்கம்தான். தினமும் 9 மணிக்கு மேல் 'ரிலாக்ஸுக்கு' நான்கைந்து மிடறு குடிப்பதில் எந்த குடியும் முழுகி விடப்போவதில்லை.


                 "இட் இஸ் சோசியல் ட்ரிங்கிங். நாலுபேர் சேரும்போது மகிழ்ச்சிக்காக ஒரு பழக்கம்."


                 "எங்க ஃபேமிலில நானும் என் மனைவியும், என் தம்பியும் அவன் மனைவியும், ஏதா செலிப்ரேஷன் பண்ணனும்னா முதல்ல தண்ணி பார்ட்டி தான். அது ப்ரைவேட்டா நடக்கும்."


                 "குட்டிச்சுவரா போச்சு! அப்ப அந்த நேரத்தில உங்க குழந்தைகள் என்ன செய்யும்?"


                 "அதெல்லாம் அவங்க ஸ்கூல் போற நேரத்துல,  நாங்க பெரியவங்க மட்டும் டூர் போகும் போதுதான்!"


                 "அப்ப மறைச்சு மறைச்சு செய்யற வேலைன்னா அது தப்பு தானே!" மடக்கினாள்  டெஸ்க் கிளார்க் லதா.


                 "இல்லப்பா! பசங்க வளர்ந்து பெரியவங்க ஆனாங்கன்னா ... அப்ப அவங்க குடிக்கலாம் .... எங்கள மாதிரி!"


                  "இது உருப்படற வகையா தெரியல!" பொருமினாள் ஷகிரா பானு.


                   அலுவலகத்து ஆண்கள் எல்லாம் ஒரு பக்கமாக சேர்ந்து கொண்டு குடிப்பழக்கத்தை எப்படி எல்லாமோ நியாயப்படுத்தினர். ஆனால் ஒரே ஒரு பெண்மணி கூட குடிப்பழக்கத்தை ஒத்துக்கொள்ளவில்லை. சென்ற வருடம் அலுவலக 'பாஸு' டன் பம்பாய் சென்றி ருந்தபோது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த கூத்தைச் சொல்லியதும் பெண் ஊழியர்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. குடிபோதையில், விளையாட்டாக கணவன்-மனைவியாக வந்திருக்கும் தம்பதியர் தத்தம் கார் சாவிகளை டேபிளில் போடுவார்களாம். அதில் யார் எந்த சாவியை எடுக்கிறார்களோ, அந்த காருக்கு உரியவர் மனைவி,  சாவியை எடுத்த வருடன் அன்றைய இரவைக் கழிக்க வேண்டுமாம். அதிர்ஷ்டம் பாக்யம் என்ற விளையாட்டாம்!   தம்பதியராக குடிப்பதால் இதிலெல்லாம் மனைவிகளுக்கும் உடன்பாடாம்! ச்சீ! நாய் ஜென்மங்கள்! கேட்கவே அருவெறுப்பாக இருந்ததை பெரிய ஹாஸ்யம் போல் ஆண்கள் ரசித்துச் சிரித்ததைக் கண்டு,  பத்ரகாளிகளாகவே ஆகிவிட்டனர் பெண் ஊழியர்கள்.


                 பாவிகளா! உங்களை இதுகாறும் நல்லவர்களென நினைத்தோமே! எல்லாருக்குமே குடிப்பழக்கம் உண்டா!தமக்குள் பேசிக்கொண்டனர் பெண்மணிகள்.  அலுவலகத்தில் எப்போதும் இருந்த கலகலப்பு கனவாய்ப் போனது. இதில் "வாய்ப்பு கிடைக்கும்வரை தான் மேடம்,  ஆண்கள் இராமன்கள். இதுல நீங்கல்லாம் கோவிச்சுக்கிட்டு எங்க கிட்ட பேசாமல் இருப்பது நல்லாவா இருக்கு?" என்று விஸ்வம் மேசை மேசையாய் போய்ப் பேசினாலும் அங்கு இதுகாறும் நிலவிவந்த பண்பானதோர் ஆண் - பெண் நட்பு,  விரிசல் விழுந்த கண்ணாடி ஆனது.


                       நவராத்திரிக்காக தொடர் விடுமுறை வந்தது. விஸ்வத்தின்  மனைவியும் இரண்டு மகள்களும் சொந்த ஊர் சென்றனர். 'என் பொண்டாட்டி ஊருக்கு போயிருச்சு' என இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் தீர்த்தக் கச்சேரி இப்போதெல்லாம் ஏழு மணிக்கு ஆரம்பித்து விடிய விடியத் தொடர்ந்தது.


                   ஒரு நாள் இரவு, எதிர் வீட்டு மீனா பாப்பாவின் அம்மா,  தனது ஸ்கூட்டி ரிப்பேர் ஆகி விட்டதால் விசுவின் மனைவியின் ஸ்கூட்டியை ஷெட்டில் நின்றிருந்ததை கடன் கேட்க வந்தாள். அழைப்பு மணியை அழுத்தியவள், விஸ்வம் வந்து கதவைத் திறந்ததும்,  அங்கு நிலவிய வாடையில் முகம் சுளித்து ஏதும் கேட்காமல் திரும்பிட முயன்றாள். 


                  "இல்லை மீனாம்மா! உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க .... உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன்!" என உளற ஆரம்பித்தான் விஸ்வம்.


                   "இல்லை!  நான் வரேன்!" என திரும்பிட முயன்றவள்,


                  "மீனம்மா, மீனம்மா, கண்கள் மீனம்மா,  தேனம்மா தேனம்மா உன் நெஞ்சம் தேனம்மா!"  என்று அவன் குடிபோதையில் பாடியதும்,  திடுக்கிட்டாள்.


               "மிஸ்டர்!  மரியாதையா பேசுங்க!" என்று சீறினாள்.


               "மரியாதைக்குரியவளே .... மனதிற்கு இனியவளே .... காலையும் நீயே ... மாலையும் நீயே ...." பாட்டு பாடிக் குளறினான் விசுவம். அதற்குள் மீனாவின் புருஷன் விக்னேஷ், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முகவராக வேலை பார்ப்பவன், வந்துவிட்டான். அவனையும் விடவில்லை விசுவம்.


                 "யோவ்! எல்ஐசி ! பாலிசிக்கு லோலோன்னு அலயறத விட்டுட்டு ரதி மாதிரி இருக்கற  பொண்டாட்டிய பாருய்யா லூசு! "தள்ளாடிக்  குழறினான்.


                  "ராஸ்கல்! என்ன திமிர் உனக்கு!" என விசுவத்தின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான் விக்னேஷ். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு பாஷா பாயும், அவனது விதவைத் தங்கை ஆராவும் வெளியே வந்தனர். பால்கனியிலிருந்து "ஏன்! என்ன ஆச்சு?" என்று பாஷா கேட்டதும், "வாய்யா! வா! இவ்வளவு அழகான ஆராவை நீ பொத்திப் பொத்தி வச்சா ....அவ அழகு எனக்குத் தெரியாம போயிடுமா? அவ கண்ணே இவ்ளோ அழகா இருக்கே ... "என விசுவம் இழுத்ததும்,.  


                    "படவா ராஸ்கல்!" என விக்னேஷ் விசுவத்தை ஒரு அறை அறைந்து கீழே தள்ளினான். அந்த காலனியில் இருந்த அமைதியான வீடுகளில் படபடவென வாசல் விளக்குகள் போடப்பட்டு எல்லோரும் திபுதிபுவென வெளியில் வந்தனர்.


                 குடிபோதை விசுவத்தை முழுவதுமாக குடித்திருந்தது. என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் அவன் மதி மயங்கியது.


                "டேய் முட்டாப் பசங்களா! உங்க வீட்டு பொம்பளைங்க எவ்ளோ அழகுன்னு ரசிக்கத் தெரியாத பசங்களா!  நம்ம வைதேகி மாமிய பாருங்க ... அவங்க பாதம் மட்டுமே செக்கச் செவேர்னு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்டேட் பாங்க் சுஜாதா ஸ்கூட்டி ஓட்டிட்டு போற அழகு இருக்கே ..... ச்சூ .. ச்சூ ... ச்சூ  என விசுவம் அந்த காலனியில் இருந்த பெண்களை விவரித்துக் கொண்டே போக,  உயர் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த அந்தக் காலனி வாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். விசுவத்தின் போதை உச்சிமலை ஏறியது.


                 "தோ பார்!  நம்ம பால்கார பாப்பம்மாலேந்து எங்க ஆபீஸ் டீம் லீடர் ரீடா மேடம் வரைக்கும்,  அவங்க அழகை ஆராதிச்சு நான் வடித்த கவிதைகள்!" என தன் வீட்டு 'ஸிட்-அவுட்' டில் பழைய பேப்பர் களுக்கு நடுவில் இருந்து ஒரு கருப்பு டைரியை உருவி ஒரு பக்கத்தை விரித்தான் விசுவம்:


       வைகறையில் வைதேகி போட்டாளொரு

                                                         கோலம் 

        என் ஆண்மனம் ஆனதே

                                        ‌   அலங்கோலம்!



விதிர் விதிர்த்துப் போனாள் மார்கழியில் பாசுரம் பாடி பிரம்மமுகூர்த்தத்தில் கோலம் போடும் வைதேகி மாமி.


                  "அதென்னமோ எனக்கு ரெண்டு பெக் போட்டாலே பொம்பளைங்க ஞாபகம்தான் வருது ... உங்களுக்கு பாஸ்?" என்று எதிரில் நின்ற மேனன் சாரின் தோளை பற்றியதும்,  அவர் ஒரு மிலிட்டரி உதை விட்டார் விசுவத்தை.


                 ஒவ்வொரு நாளும் அவன் குடிக்கும் போது  சேர்த்து வைத்திருந்த மன அழுக்குகள்,  அன்று ஒட்டுமொத்தமாக வெளிவந்து விட்டன.  விஷம், விஷம் தான். ஒரு துளி ஆனாலும் சரி ஒரு வட்டில் நிறைய இருந்தாலும் சரி.  குடி மனித மனத்தில் விழும் விஷம். அது என்னென்ன எதிர்வினைகளை எப்போது ஏற்படுத்தும் என சொல்லமுடியாது. மனித மனம் இருக்கிறதே! அதை முறையாக வைத்துக் கொள்வதில்தான் அதன் மகிமையே இருக்கிறது. அது பாசி படர்ந்து பாழும் கிணறானால், அதில் விஷப் பாம்பும்,  தேளும்,  பூரானும் நெளியும். அல்லது தளும்பத் தளும்ப குளிர் நீரோடு , அல்லியும்,  அனிச்சமும்,  ஆம்பலுமாய் தெளிந்து காணப்படலாம். நல்லொழுக்கம், நேர்மை, இன்சொல், கனிவு, நற் சிந்தனைகள், உயர்ந்த இலட்சியம் ... இவற்றை பயிரிட்டு பசுமையாய் வைத்துக்கொள்ளலாம். இல்லை,  கெட்ட பழக்கங்கள்,  தீய எண்ணங்கள், ஒழுக்கமின்மை,  வக்கிரம்,  காமம்,  பொய்மை இவைகளை வளர்த்து மனத்தை ஒரு சாத்தான் கூடமாய் ஆக்கலாம். இந்த மதுப்பழக்கம் ஒன்று இருந்தால் போதும், மற்ற அனைத்து கெட்ட பழக்கங்களும் தன்னைப் போல வந்து சேர்ந்து, உயிரையும் நிம்மதியையும் உறிஞ்சும் அட்டைகளாய் பல்கிப் பெருகும். கோடி கௌரவர் கூடி நிற்கும் கொடிய சமுதாயம் இது. இதில் எவன் எப்போது துரியோதனனாகவும்,  துச்சாதனனாகவும் மாறுவான் என்பது தெரியாது.


                  எழுபது வயதைத் தாண்டிய ராஜாமணி தாத்தா போகிற போக்கில் பேசி விட்டுப் போனார்:


                 "இந்த மாதிரி கண்றாவிக்கெல்லாம் அணை போடத்தான், அப்போதெல்லாம் பெரியவங்க வருஷமானா புனித யாத்திரை,  குலதெய்வ கோயிலுக்கு போறது,  மாசமானா விரதம், கெழமையானா கோவிலுன்னு,  மனசுங்கற முரட்டுக் குதிரைக்கு கடிவாளம் போடற மாதிரி பண்ணி இருந்தாங்க. இப்போ எந்தக் குழந்தை தாய் தகப்பனோட கோவிலுக்குப் போகுது?  படையல் வைக்குது? இல்ல அம்மா அப்பாதான் கண்டிசன் பண்ணி கூட்டிட்டு போறாங்களா?  எல்லாம் 'வாட்டர் பார்க்கிலே' கும்மாளம் போடுறதுக்கும்,  சேர்த்து வச்ச காசை வாரி இறைக்கிறதுக்கு 'மாலு'க்கு போகவுமா தானே சரியா இருக்கு?"


                கேட்டுக்கொண்டிருந்த காலனி வாசிகளுக்கு 'சொரேலென' உறைத்தது. சரி, உண்மை என்றுதான் இனித்தது?


               யார் ஃபோன் போட்டார்களோ விசுவம் மனைவி மக்கள் எப்படி வந்தார்களோ?  மறுநாள் போதை தெளிந்த விசுவத்தை, காலனியே காரித் துப்பியது. சாக்கடையில் நெளியும் புழுவை விட கேவலமாகப்  பார்க்கப்பட்டான் விசுவம். அவன் வீடு இழவு வீடு போல் ஆனது. விசுவத்தின்  மனைவி தூக்கில் தொங்கப் போனாள். இரு பெண் பிள்ளைகளும் அவள் காலை பிடித்துக் கூக்குரலிட,  ஓடிவந்து அவளை இறக்கினர். மீனாம்மா தான் அவளைக் கூட்டிக்கொண்டு போய் காப்பி கொடுத்து ஆறுதல் சொன்னாள். மறுநாள் விஸ்வத்தின் வயதான மாமியார், மாமனார், மச்சினி, விஸ்வத்தின் தங்கை, தங்கை புருஷன் என ஒரு பட்டாளமே வந்து இறங்கியது. கதவு ஜன்னல்களை அடைத்து கொண்டு பெரிய பஞ்சாயத்து நடந்தது நடுவில், காலனி வக்கீல் ஒருவர் ஒரு போலீஸ்காரரை அழைத்து வந்தார்.


                

 

ஐந்தாவது நாள் விசுவம் தன் வீட்டு கேட்டைத் திறந்து வெளியே வந்தான். தெருவில் வந்து நின்றான். ஆள் பார்ப்பதற்கு நிலை குலைந்து போயிருப்பது தெரிந்தது. பால்கார பாப்பம்மா டிவிஎஸ் ஃபிப்டியில் வந்து பால் கேனில் இருந்து, மாமி வீட்டிற்கு பால் அளந்து ஊற்றிக்கொண்டிருந்தாள். இஸ்திரி வண்டி முனியன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்து வீட்டு பாஷா பாயின் தங்கை ஆரா,  மொட்டை மாடியில் துவைத்த துணிகளைக் காயப் போட்டுக் கொண்டிருந்தாள். வைதேகி மாமி அன்று வெள்ளிக்கிழமையாதலால், வாசலில் இருந்த துளசி மாடத்திற்கு சாம்பிராணி காட்டிக்கொண்டிருந்தாள்.

                 விசுவம் சடாரென நடுரோட்டில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.

                "எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க! நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்தப் பாவமும், பழியும் தீராது. இனி இந்த மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். இன்னியிலிருந்து நான் திருந்திட்டேன். தாயாகவும்,  தங்கையாகவும், மகளாகவும் பார்க்கவேண்டிய உங்களையெல்லாம் நான் இந்த குடிங்கிற சனியனாலே,  தப்பாப் பாத்துட்டேன்.  இந்தக் கருமத்த இனிமேல நான் கையால கூட தொட மாட்டேன். மீனாம்மா, வைதேகி மாமி,  ஆரா தங்கச்சி! ரொம்ப ரொம்ப 'ஸாரி' கேட்டுக்கிறேன். தயவு செஞ்சு எல்லாருமா சேர்ந்து இந்த பாவிய .... இந்தப் பாவிய ... " என பாப்பம்மா கழட்டி வைத்திருந்த ரப்பர் செருப்பாலேயே படீர் படீர் என தன் தலையில் அடித்துக் கொண்டான் விசுவம். ஓடிவந்து தடுத்தவன் மீனாம்மா புருஷன் விக்னேஷ்தான்.

          

               "ஏன் சார் இப்படி எல்லாம்!"  என்றான். வாக்கிங் போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்த மேனன், "தப்பை உணர்ந்திட்டீங்கல்ல தம்பி!  அதைத் திருத்திக்கலாம்" என்றார்.

                  

               முப்பத்தேழு வயது ஆண் பிள்ளை,  குழந்தையாய் அழுதவாறே, மதுபாட்டில்களை அள்ளிக்கொண்டு வந்து உடைத்து,  தெருவோரம் போட்டு, கீழ்த்தரமான அந்த கருப்பு டைரி அசிங்கத்தையும் போட்டு நெருப்பைப் பற்ற வைத்தான். திகுதிகுவென நெருப்புப் பற்றி எரிந்தது. அத்தனை அழுக்கும் சாம்பலாயின.  வெந்து தணிந்த மனதுடன் தலை முழுக வீட்டுக்குள் சென்றான் விசுவம்.


பாண்டியன்மாதேவி 

(எ)


திருமதி தேவிகா குலசேகரன்


Post a Comment

0 Comments