Women Short Stories In Tamil

சிங்கப் பெண்ணே... 






         மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடம் அது...சென்னையில் அப்படியொரு அடுக்கு மாடிக் கட்டிடம் காண்பது அத்தனை புதிதுதல்ல ஆனந்த் க்கும்... கீழே இருந்து அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியைப் பார்த்தான்... 


மனதில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் , ஆண்களுக்கே உரிய தைரியத்துடன் மாடிப்படிகளில் ஏறினான்... படிகள் ஏறி மூன்றாவது மாடியை அடைந்தவன், அங்கிருந்த இரண்டாம் எண் வீட்டின் கதவின் மணியோசை அடிக்க, கதவு திறக்கப்பட்டது...      


கதவினை திறந்து , அதன் வாசலில் நின்றிருந்தாள் ஷக்தி.... அவனைப் பார்த்தவளின் கண்களில் சிறிய ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி இரண்டும் இருக்கத் தான் செய்தது... சற்று சுதாரித்துக் கொண்டு, அவனை உள்ளே  அழைத்தாள் ஷக்தி... 


கல்லூரி பருவத்தில் தன் கண்களுக்கு தேவதையாக தெரிந்தவள் இன்று முப்பது வயதினை எட்டி அதற்கேற்ற அழகுடன் இருந்தாள்... வயதின் லேசான சுருக்கங்கள் அவள் முகத்தில் இருக்கத் தான் செய்தன... உள்ளே சென்றவன் எதுவும் பேச இயலாமல்,  அவள் கூறியபடி  அந்த   வீட்டின் முகப்பு அறையில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்...   


அவனை அமர வைத்து விட்டு, சமையலறைக்குள் சென்றவள், தனது கைகளால் அவனைக்கு தேயிலை கலந்து எடுத்து வந்தாள்... அவனுக்கு காஃபி யை விட தேயிலை அருந்த பிடிக்கும் என்பதை அவள் இன்றும் ஞாபகம் வைத்திருந்தாள்... அவன் கண்களுக்கு முன்பு , அந்த தேயிலை குவளையை நீட்ட, ஆனந்த் தின் எண்ணங்கள் சற்று  பின்னோக்கி சென்றன... 


அவள் கைகளால் தேயிலை அருந்த வேண்டும் என்பது ஒரு காலத்தில் அவனுடைய மிகப் பெரிய ஆசையாகவே இருந்திருந்தது..  ஆனால் அது இந்த சந்தர்ப்பத்தில் ஏற்படும் என்பதை அவன் அன்று சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டான்... 


கைகளில் தேயிலை குவளை யை வாங்கியவன், அவளைப் பார்த்து,  உனக்கு ஞாபகம் இருக்கா ?? என்று கேட்க, அவள் லேசாக புன்னகைத்தாள்...  


அவன் எதிரில் இருந்த , இருக்கையில் அமர்ந்தாள் ஷக்தி... ஆனந்தின் கண்கள் அவளைப் பார்த்து பின்  அந்த வீட்டினை சுற்றிப் பார்த்தது...  சுற்றி திரிந்த கண்கள் ஓரிடத்தில் நிலைபெற்று நிற்க, அங்கு ஷக்தி யின் கணவனின் புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டு அதற்கு மாலை அணிவிக்கப் பட்டிருந்தது... அங்கு நிலைபெற்று நின்ற அவனது கண்களை அவளும் கவனிக்க தவறவில்லை...   


பல நாட்கள் பழகிய முகம் என்றாலும் இன்று பார்த்தவுடன் பேச இருவருக்கும் தோன்றவில்லை... அத்தனை அமைதி இருவருக்குள்ளும்... அன்றைய நாட்களில் , பட்டு பாவாடை தாவணி அணிந்து தலை நிறைய பூ சூடி , கல்லூரி முழுவதும் பட்டாம் பூச்சியாக பறந்து திரிந்தவளின் நெற்றியில் இன்று பொட்டு இல்லை.. தலையில் பூ சூட்டும் நிலையில் அவள் இல்லை... ஆனாலும் அவள் முகத்தில் அதே  புன்னகை இருந்தது...   அவனை அன்றைய தினங்களில் மயக்கிய அதே புன்னகை... அதனை பார்த்து இன்று அவனது கண்களில் கண்ணீர் துளிகளும் அரும்பத் தொடங்கியது...   


அவனால் எதுவும் பேச இயலவில்லை என்று அறிந்தவள்,  அவளாகவே பேச ஆரம்பித்தாள்... 


எப்படி இருக்க ஆனந்த் ... என்று அவள் கேட்க அதற்கு அவன் வாய் திறவாமல் ம்ம்ம் என்று கூறினான்... வீட்ல எல்லாரும் என்று அவள் கேட்க, அதற்கும் தலையசைத்தான்.... உனக்கு எப்படி என் வீடு தெரியும்... என்று கேள்வியை தொடுக்க, அவன் பிரியா கிட்ட கேட்டேன் என்று பதில் கூறினான்... 


தேயிலை யை அருந்தியவன், அந்த குவளை யை கீழே வைக்க முயல , வேகமாக எழுந்து அதனை தனது கையில் வாங்கினாள் ஷக்தி... மீண்டும் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு , குவளை யை எடுத்துக் கொண்டு , சமையறையின் உள்ளே சென்றாள்... 


தான் உருகி உருகி காதலித்தவளின் உலகம் இடிந்து போனதை கண்டவனின் மனம் வலியினை உணர்ந்தது... ஏதோ எண்ணியவன், அவள் சென்ற வழி பின்பற்றி சமையறையின் உள்ளே சென்றான்... உள்ளே சமையல் வேலையை சற்று கவனித்துக் கொண்டிருந்தவளின் பின்புறம் இருந்து அவளது கையினைப் பிடித்து , அவன் புறம் மெதுவாக இழுக்க, சட்டென அவனது கையினை தட்டி விட்டு, விலகினாள்... அவளது கோபப் பார்வை யே அவனிடம் கேள்விகள் கேட்க, அதற்கு அவன், 


ஷக்தி ... இது ஒன்னும் தப்பு இல்ல... நான் ஆனந்த்... ஷக்தி... உன்னோட ஆனந்த்... இப்பவும் அதே ஆனந்த் என்றான்... 


ஷக்தி வேகமாக அவனைத் தள்ளி விட்டு , சமையறையிலிருந்து வெளியே வீட்டின் முகப்பு அறைக்கு வந்தாள்... அவள் தன்னை தள்ளி விட்டு நிகழ்விலிருந்து ஆனந்த் வெளியே வர சில நொடிகள் தேவைப்பட்டது...  


வெளியே வந்தவனிடம், ஆனந்த் தயவுசெய்து வெளியே போ... என்று கோபத்தின் சாயலோடே பேசினாள்... 


ஷக்தி... சந்தர்ப்ப சூழ்நிலை நம்மள பிரிச்சிடுச்சு... ஆனா இப்போ நம்ம அன்னிக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முடியும்... இந்த நாலு சுவத்துக்குள்ள  நம்மள கேட்க யாரும் இல்ல... ஏன் புரிஞ்சிக்க மாட்ற... என்று தனது மனதிலிருந்த அனைத்து வார்த்தைகளையும் கூறி  முடிக்க, அவளது கோபம் இன்னும் அதிகமானது... 


வெடித்து சிதறத் தொடங்கினாள்... இதுக்காக தான் என்னைப் பாக்க வந்தியா... உன்னை காதலித்தேன் னு நினைக்கும் போது எனக்கு கேவலமா இருக்கு ஆனந்த்.. என்று கத்த, அவனது பதில் இப்பொழுதும் அமைதியாக தான் வந்தன... 


ஷக்தி இந்த உலகத்துல ஒரு பொண்ணு தனியா இருக்க முடியாது.. என்னால உன்னை பார்த்துக் கொள்ள முடியும் ... என்றான்..... 


ஷக்தி யின் கோபம் இப்பொழுது எல்லை மீறின.... ஆனந்த்... இப்போ இந்த நாலு சுவத்துக்குள்ள யாரும் இல்ல னு தான நினைக்கிற...  நல்லா சுத்தி பாரு இந்த நாலு சுவற்றை...


ஆனந்த் தின் கண்கள் சுற்றிப் பார்த்தன... 


அவளது பதில் இன்னும் முடியவில்லை...  


நல்லா பாரு... இந்த நாலு சுவத்துக்குள்ள தான் , உன்னை நம்பி உன் கையைப் பிடித்த உனக்கா ஊர்ல காத்திருக்கிற உன் மனைவியோட   நம்பிக்கை இருக்கு... இந்த நாலு சுவத்துக்குள்ள தான் உன்னை தகப்பனா உன்னை அவனோட வாழ்க்கை வழிகாட்டியாக நினைக்கிற உன் குழந்தை உன் மேல வச்சிருக்கிற மரியாதை இருக்கு... இந்த நாலு சுவத்துக்குள்ள தான் என் குடும்ப மரியாதை இருக்கு... 


இந்த.நாலு சுவத்துக்குள்ள தான் இறந்து போன என் கணவனோட மரியாதை இருக்கு.... இந்த நாலு சுவத்துக்குள்ள தான் பள்ளிக்கூடத்துக்கு போன என் நாலு வயசு பையனோட எதிர்காலம் இருக்கு...     இந்த நாலு சுவத்துக்குள்ள இருக்குற வாழ்க்கையில தான்   என் பெண்மையோட மகத்துவமே இருக்கு... என்று அவள் கோபத்தில் தழல் நெருப்பாய் கொந்தளிக்க, அவளது பதிலைக் கேட்டு, அமைதியாக அந்த வீட்டினை விட்டு வெளியேறினான் ஆனந்த்...  


அவன் சென்ற பின்பு , ஷக்தி சற்று அமைதியடைந்தாள்.... 


உண்மையில் அந்த நாலு சுவற்றிக்குள் தான் நமது நாட்டின் கலாச்சாரமே இருக்கிறது... யாரும் இல்லாத நேரம் கூட தன்னையும் கலங்கப்படுத்தாமல், தனது குடும்ப மரியாதையும் கலங்கப்படுத்தாமல், பாரத தேசத்தின் பாரம்பரியத்தினையும் கலங்கப்படுத்தாமல் , தாய்மையைப் போற்றும் ஒவ்வொரு  பெண்ணும் இந்திய தாயின் சிங்கப்பெண்களே...     



 🖋 குட்டிமா தேவி ஸ்ரீ... 🥰

விருதுநகர்...


Post a Comment

0 Comments