பசி - pasi short story in tamil | சர்வமும் சிவமயம்

 பசியே என்னை பார்க்காதே




 

காய்ந்து போன பயிர்களுக்கும் வற்றி போன ஆற்றிற்கும் இடையே இருந்த ஒற்றை வழி சாலையில் வயிற்றை பிடித்துக்கொண்டு பரிதி நடந்துக்கொண்டிருந்தான்.கிராமமும் நகரமும் கலந்துப்போன சிறுநகர சாலைகளில் பரிதி பசியோடு உலாவி கொண்டிருந்தான்.அவன் வயது குழந்தைகள் புத்தக பையை மாட்டிக்கொண்டு ஒரு கையில் உணவு கூடையை தூக்கி கொண்டு செல்வதை கண்டால் அவன் கண்ணில் வாழ்க்கை குறித்த ஏக்கம்தான் வரும்.இப்போதும் கூட நீங்கள் வீட்டிற்கு வெளிவந்து பார்த்தாள் அதே பரிதி பசியோடு வேறு பெயரில் உலாவி கொண்டுதான் இருப்பான்.

 

பசி எனும் அரக்கன் பிடியில் அவன் மட்டுமல்ல அவனோடு அவன் தந்தையின் தாயும் மாட்டி தவிக்கின்ன்றாள்.தாத்தா வின் பென்சனில் வாழ்க்கையை பாட்டியும் பேரனும் ஒட்டி வந்தனர்.அந்த 1200 பென்ஷன் பணத்தை கூட திரும்பவும் அரசு மதுக்கடைக்கே கொடுப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த தந்தை அவர்களின்  உணவிற்கு இடையூறாக இருந்தான். தாயில்லை அவளில்லாததால் படிப்பும் இல்லை.

ஆதலால் பரிதி ஒரு அங்கீகரிக்கப்பட்ட குழந்தை தொழிலாளி.

 

பதின் வயதில் பசியோடு அலைவது கொடுமையிலும் கொடுமை.

பரிதி இதற்கு முன் ஒரு மெக்கானிக் செட்டில் வேலை செய்தான்.அந்த பணம் இருவருக்கும் இரண்டு வேலை உணவையாவது ஏற்பாடு செய்து கொடுத்தது.அந்த சம்பள பணத்தையும் குடிகார தந்தை பறித்து விட்டு போக பரிதி வேறு வழியில்லாமல்.மெக்கானிக் செட்டில் சிதறி கிடந்த குப்பை இரும்புகளை திருடிவிட்டான்.பசிக்குதான் கண் தெரியாது ஆனால் அவன் முதலாளிக்கு கண் தெரியும் என்பதை அவன் மறந்து போனான்.பரிதி வேலையை விட்டு விரட்டியடிக்கப்பட்டான். இப்போது வேறு வேலை தேடி தெரு தெருவாக அலைந்து கொண்டிருக்கிறான்.

 

 

வயிற்றில் பசி கிள்ள அவன் நடப்பதை நிறுத்தினான்.அவனால் மேற்கொண்டு நடக்க இயலவில்லை.தொண்டையில் தண்ணீர் வற்றி தொண்டையே இறுக தொடங்கியது தூக்கில் மாட்டினார் போல். பரிதி தள்ளாடியபடி உட்கார எத்தனிக்க அவன் கண்களில் ஒரு குழாய் அகப்பட்டது.அதில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது.அதை கண்டதும் பரிதி பாய்ந்து குழாயை திறந்து தண்ணீரை குடிக்க தொடங்கினான்.நீர் தான் அதுதானே இலவசமாக கிடைக்கும் சில நாட்கள் கழித்து அதுவும் கிடைக்காது என்பதை அறிந்தவன் போல் வயிறு நிரம்ப குடித்தான்.அப்போது தொலைவில் தேங்காய் உடைக்கப்படும் சப்தம் கேட்டது.பருதி நிமிர்ந்து பார்க்க அவன் எதிரே ஒரு பிள்ளையார் கோவில் அங்கு நவநாகிரீக உடை அணிந்து ஒரு நடுத்தர வயது ஆள் தேங்காயை உடைத்து கடவுளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தான்.

 

பரிதி கீழே கிடந்த தேங்காயை கண்டான்.அது அவனுக்கு பல நகைச்சுவை காட்சிகளை நியாபகப்படுத்தினாலும் இப்போது அவனுக்கு பசியைத்தான் நியாபக படுத்தியது.அதனை எடுப்பதற்காக அந்த ஆள் போகும் வரை பரிதி காத்திருந்தான்.

அந்த ஆள் பயபக்தியோடு கடவுளை வணங்கி நெற்றியில் திருநீறு இட்டு அவன் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்தான்.அது பணத்தால் உப்பியிருந்தது.அதில் இருந்து அவன் பணம் எடுக்கையில் பரிதி வாய் பிளந்தான் அவன் எடுத்தது நூறு ரூபாய் நோட்டு.அதை பார்த்ததும் பரிதி இதை வெச்சு பத்து புரோட்டா வாங்கலாம் இந்தாளு என்ன அசால்ட்டா உண்டியல்ல போடுறான் என அவனை பார்த்து  அதிசயமும் பொறாமையும் பட்டான்.

 

அவன் பணத்தை போட்டுவிட்டுட்டு பின் அவனின்  பின்பாக்கெட்டில் பர்ஸை சொருக திடீரென அவன் பணப்பை கீழே விழுந்தது.அதில் இருந்து பண மழையாக கொட்டியது.அவன் பணப்பையில் தான் வங்கியே இருக்கிறது என்பது போல் அவன் பணப்பையில் இருந்து ஆயிரம் இரண்டாயிரம் நோட்டுகள் கீழே சிதறி ஓடின.அந்த காகிதப் பணங்கள் சாலையில் சிதறி கிடப்பதை கண்டதும் பரிதிக்கு அது பணமாக தெரியவில்லை மூன்று சட்டி பருக்கையை கீழே கொட்டி வைத்தார் போல் ஒரு பிம்பம் அவன் பசி கண்ணிற்கு தெரிந்தது.ஓடி சென்று அதனை அள்ளி பாட்டியிடம் கொடுத்து அவள் பசியாற்ற வேண்டும் என அவன் மனம் துடித்தது.

 

ஆனால்,கண நேரத்தில் மூன்று சட்டி சோறும் அவன் பாக்கெட்டுக்குள் சென்றது.பின் அவனும் அவனின் இரு சக்கர வாகனைத்தை எடுத்துக்கொண்டு சென்றான்.பரிதி மனதில் சிறு கலக்கம் அவனின் பணம் கீழே விழும் போதே அதனை எடுத்துவிட்டு ஓடியிருக்கலாம் என தோன்றிற்று.பின் வாய்ப்பை தவறவிட்ட அவன் மனதை மாற்றி கீழே விழுந்து கிடந்த தேங்காய்களை பொறுக்கி சாப்பிட்டான்.சில துண்டுகளை எடுத்து பாக்கெட்டிலும் போட்டு கொண்டான்.

 

 

 

 

 

 

 

 

தேங்காயை உண்டபடி ஆங்காங்கே இருந்த சிறு தொழிற்சாலைகளில் வேலை கேட்டு ஏமாற்றத்துடன் உழன்று கொண்டிருந்தான்.

 

அவன் நடக்கும் பாதையில் சிறு குறு  தொழிற்சாலைகள் மட்டுமே.வீடுகள் அவ்வளவாக இருக்காது.அந்த பாதையில் ஆட்கள் நடமாட்டமும் குறைவு.சரக்கு ஏற்றி செல்லும் குட்டி யானைகளும்,லாரிகளும் மட்டுமே அந்த பாதையில் செல்லும்.

அத்தகைய பாதையில் பரிதி நடந்து கொண்டிருக்கும் போது அவன் கண்களுக்கு எதிரே ஒரு அதிசயம் மூன்று சட்டி சோற்றை பாக்கெட்டில் வைத்துவிட்டு போனான் அல்லவா அந்த கோயிலுக்கு அருகாமையில்.

 

அவனேதான் அந்த நவநாகரீக மனிதனே தான் அவன் இப்போது பரிதியின் கண்ணிற்கு எதிரே வண்டியை ஒரு புறம் நிப்பாட்டிவிட்டு சாலையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அலைபேசியில் ஏதோ ஒரு பெண்ணிடம் கலகலப்பாக  பேசிக்கொண்டிருந்தான்.அவனை பார்த்ததும் பரிதிக்கு ஆச்சர்யம் ஆனால் அதன் கூடவே அவன் மனதில் சிறு கலக்கம்.சென்ற முறை பொறுக்க தவறியதை இந்த முறை கடவுளே பறிக்க சொல்லி வாய்ப்பு தருகிறார் என நினைத்தான்.

 

பரிதியின் கைகள் அவனை அறியாமல் நடுங்கின.அவன் குறுக்கும் நெடுக்கும் நடக்கும் போது அவன் பின்னால் இருந்த பணப்பை என்னை எடுத்துக்கொள் என சொல்வது போல் புடைத்து கொண்டு நின்றது.அதை கண்டதும் பரிதியின் தொண்டை குளறின.பசி க்கு கை முளைத்து அது அவனின் வயிற்றை நெறிப்பது போல் ஓர் உணர்வு அவனுள் ஏற்பட்டது. 

 

 

இதே போன்ற உணர்வு சென்ற முறை வேலை செய்த இடத்திலும் ஏற்பட்டது.அதனால் தான் இன்று சாலையில் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதை பரிதி அறிவான்.அதனால் கண்களை மூடிக்கொண்டு அவனை கடக்க எத்தனிக்கையில் அவனால் முடியவில்லை.அவன் வயிறு பசியில் அலறியது.அதோடு அவன் பாட்டி பசியில் துடிக்கும் சப்தம் வேறு அவன் மூளைக்குள் ரீங்காரமிட்டது.பசி... பசி.. என உடல் முழுக்க யாரோ கொடூரமாக கத்துவது போல் ஓர் எண்ணம்.

 

அவனால் இயலவில்லை.அவன் அந்த நவநாகரீக மனிதனை பார்த்தான்.அவன் புவியை கவனிக்காமல் அலைபேசியில் திளைத்திருந்தான்.பரிதி தைரியத்தை வரவழைத்து கொண்டு அவன் அருகே சென்றான்.அவன் பரிதிக்கு முன்னே அவன் முதுகை காட்டியபடி நடக்க வேகமெடுத்த பரிதி சட்டென அவனை மெல்ல இடித்து அதே நொடியில் அவன் பின்பக்கத்தில் இருந்த பணப்பையை அவன் இருவிரல்களில் லாவகமாக தூக்கினான்.இடித்ததிற்கு கூட அவன் கவலைப்படவில்லை அந்த அளவிற்கு அலைபேசியில் அவன் மூழ்கி கிடந்தான்.

 

பரிதி வேகமாக உள் ஜட்டிக்குள் பணப்பையை சொருகி அவ்விடம் விட்டு விரைவாக நீங்க வேகமாக நடந்தான்.எங்கே அவன் தன்னை கவனித்து விட போகிறானோ எனும் பயத்தோடு அவன் இருந்த திசை நோக்கி  திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நடந்தான்.

 

அப்போது அவன் எதிரே சர்..டூர்... எனும் சப்தத்துடன் இருசக்கர வாகனம் வர பரிதி பயந்துபோய் நகர.வண்டியில் வந்தவனும் நகர அந்த இருசக்கர வாகனம் படாரென பரிதி மேல் மோதியது.பரிதி கீழே விழுந்தான்.

 

***

 

 

 

 

பெருத்த சப்தம் அந்த நவநாகரீக மனிதனின் காதுகளில் விழ.அவன் அலைபேசியை விட்டுவிட்டு சாலையை காண அவன் கண்களுக்கு எதிரே பரிதி வலியால் துடித்து கொண்டிருந்தான்.அவனுக்கு அருகே அரும்பு மீசை கூட முளைக்காத ஒருவன் விலையுயர்ந்த வண்டியை ஓட்ட தெரியாமல் ஒட்டி பரிதி மேல் விட்டதை கண்டதும் அவன் வேகமாக பரிதியை நோக்கி ஓடி அவனை தொட்டு தூக்கினான்.

 

வலியால் துடித்து கொண்டிருந்த பரிதியின் மங்கலான விழிகளில் அந்த நவநாகரீக மனிதனை கண்டதும் அவன் இதயம் வலியையும் தாண்டி பயம் கொண்டு துடிக்க தொடங்கியது.அந்த நவநாகரீக மனிதன் பரிதியை தொட்டு பார்த்து ஒரு தாயை போல துடித்து "அடிபட்டுருச்சா தம்பி அடிபட்டுருச்சா" என கேட்டதும் அவனுக்கு உயிரே போனது.பரிதி பயத்தில் அவன் ஜட்டிக்குள் இருந்த பணப்பை மீது கையை வைத்து அடைக்க.அப்போதுதான் இருவரும் கவனித்தனர் பரிதியின் முட்டியில் காயம் அந்த காயத்தில் ரத்தம் வழிந்தோடியது.

அதை கண்டதும் அந்த நவநாகரீக மனிதனுக்கு கோபம் பொங்கிற்று அவன் சட்டென பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து அதனை பரிதியின் காலில் கட்டி ரத்தத்தை தடுத்தான் பின் அன்பாக "ஒண்ணும் ஆகாது தம்பி கவலைப்படாத ஹாஸ்பிடல் போனா சரியாயிடும்" என்றான்.அவன் அப்படி செய்ததும் பரிதிக்கு உயிரே இல்லை இப்பேற்பட்ட நல்லவனின் பணத்தை திருடிவிட்டோமே என கூனி குறுகினான்.பின்,அந்த நவநாகரீக மனிதன்  சட்டென எழுந்து வண்டி ஒட்டி வந்த இளைஞனை வசை பாட தொடங்கினான்.

 

"டே உனக்கு அறிவில்ல.ரோட்டு மேல வண்டி ஓட்ட சொன்னா மனுசங்க மேல வண்டி ஓட்டிட்டு இருக்க." என அந்த இளைஞனை நோக்கி கத்தினான்.

 

அந்த இளைஞன் பதட்டத்தில் தலையில் கை வைத்து கொண்டு "அண்ணா அண்ணா தெரியல ணா ஸ்பீடா வந்ததுல திருப்ப முடியல" என அலறினான்.

 

நவநாகரீக மனிதன் "டே ஸ்பீடா வரதுக்கு இது என்ன ஹை வேஸ்ஸா இல்லை ரேஸ் கோர்ஸா.முதல உன்கிட்ட லைசன்ஸ் இருக்கா எடு முதல பன்னாடை" என கோபத்தில் பொங்கினான்.

 

அந்த வசைபாடலை கேட்டதும் அந்த இளைஞனுக்கு சுர்ரென்றது "யோ இந்த பன்னாடை கின்னாடைன்னு மரியாதையை இல்லாம பேசுனா மரியாதை கேட்டுரும்.நான் யார் தெரியுமா..எங்க அப்பா யார் தெரியுமா" என வரலாறை கூற எத்தனிக்க.

 

அந்த நவநாகரீக மனிதன் "டே குழந்தையை இடிச்சு ரத்தம் வர வெச்சுருக்க.உங்கப்பன் யாருன்னு நான் தெரிஞ்சுக்கணுமா" என கேட்டதும் கீழே அந்த மனிதனின் கர்ச்சீப்பில் ரத்தத்தை தடுத்து கொண்டிருந்த பரிதிக்கு கண்கள் குளமாகின.அவன் மனசாட்சி அவன் இதயத்திற்கு சூடு போட்டது.யாரென்றே தெரியாதவருக்கு உதவி செய்யும் ஒரு உன்னதமானவிடம் இருந்து பணத்தை களவாடிவிட்டோமே என வருத்தம் கொண்டான்.இந்த பணத்தை மன்னிப்பு கேட்டாவது அவரிடம் திருப்பி தர வேண்டும் என மனதில் எண்ணம் கொண்டான்.

 

 

அவர்களின் வாக்குவாதம் முற்றியது.

அந்த இளைஞன் "சின்ன காயம் தான இதுக்கு என்ன மூடிட்டு கிளம்புங்க" என கூற.

 

"சின்ன காயாமா இதுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா.ஒழுங்கா பணத்தை எடுத்துரு" என கூறிவிட்டு அவன் வண்டியையும் வண்டி எண்ணையும் புகைப்படம் எடுக்க துவங்கினான்.

 

அந்த இளைஞன் "எடுங்க எடுங்க... போலீஸ் கிட்ட தான கொடுக்க போறீங்க.எடுங்க நான் எங்க அப்பாவை வெச்சு பேசிக்கறேன்" என தெனாவெட்டாக பேசினான்.

 

அந்த நவநாகரீக மனிதன் வாய் விட்டு சிரித்தான்.அவன் சிரித்து கொண்டே அவன் பாக்கெட்டினுள் இருந்து ஒரு அட்டையை எடுத்து காண்பித்து "போலீஸ் கிட்ட போ மாட்டேன் ராஜா போலீஸே நான்தான்" என கூற அந்த இளைஞன் திடுக்கிட்டு போனான்.அவன் மட்டுமல்ல கீழே படுத்து இருந்த பரிதியும் தான்.போலீஸிடமே பிக் பாக்கெட் அடித்து தவறு செய்துவிட்டோமே நம் நிலை என்னவாகும் என பரிதி பதறி போனான்.

 

 

அவன் போலீஸ் என கூறியதும் அந்த இளைஞன் பதறிப்போய் வழிக்கு வந்தான்.

"சாரி சார் சாரி சார் ஸ்டேஷன் கிஷன் ன்னு கொண்டு போயிராதிங்க சார் எங்கப்பா க்கு தெரிஞ்சா தோலை உரிச்சுருவாரு" என அவன் நடுங்கினான்.

 

நவநாகரீக மனிதன் "தெரியுது ல ஒழுங்கா அந்த பையன ஹாஸ்பிடல்ல இல்லை இல்லை நான் அவனை ஹாஸ்பிடல்க்கு கொண்டு போய்க்கிறேன்.நீ பணத்தை எடு அவனுக்கு வைத்தியம் பாக்க" என அதட்டினான்.

 

அந்த இளைஞன் வேறு வழியின்றி அவன் பின் பக்கம் இருந்து பர்ஸை எடுத்தான்.நவநாகரீக மனிதன் அதனை வெடுக்கென பிடுங்கி உள்ளிருந்து அனைத்து பணத்தையும் எடுத்தான்.

 

அந்த இளைஞன் "சார் அதுல ரெண்டாயிரம் இருக்கு சார்" என கத்தினான்.

 

நவநாகரிக மனிதன் "அந்த பையனுக்கு என்ன ஆச்சு எவ்வளவு செலவாகும்ன்னு தெரியல.மீதி காசை நான்தான் போடணும் போல.கேஸ் இல்லாம காசோட போச்சுன்னு நினைச்சுக்க இனிமே இந்த மாறி வண்டி ஓட்டற வேலை வெச்சுக்காத ஒழுங்கா லைசென்ஸ் எடு" என அவனை திட்டினான்.பின் அவனிடம் காலி பர்ஸை கொடுத்து "ஓடுடா" என கத்த அவன் தனது வண்டியை தூக்கி கொண்டு பறந்தான்.

 

 

கீழே இருந்த பரிதி அந்த நவநாகரீக மனிதனின் பணத்தை அவன் பாக்கெட்டில் அவனுக்கே தெரியாமல் வைத்துவிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்டு கொடுத்துவிட வேண்டும் என மனதிற்குள் நினைத்தான்.

 

அந்த நவநாகரீக மனிதன் பரிதியை கை தாங்களாக தூக்கினான்.பரிதி வெட்கி தலை குனிந்தான்.அவன் கட்டிவிட்ட கர்ச்சீப் ரத்தத்தில் நினைந்து இருந்தது.பரிதியை அவன் அவனின் வாகனம் வரை "வா தம்பி பாத்து வா" என பண்பாக அவனை அழைத்து செல்ல.

 

பரிதி ஜட்டிக்குள் கைவிட்டு அவன் பர்ஸை வெளியெடுத்து அவன் பாக்கெட்டிலே சொருக முடிவெடுத்தான்.பரிதி மெல்ல அவன் பாக்கெட் அருகே பர்ஸை கொண்டு செல்ல அந்த நவ நாகரீக மனிதன் சட்டென திரும்பினான்.பரிதி பயந்து போய் பர்ஸை பின்பக்கம் மறைத்தான்.

 

 

அந்த நவநாகரீக மனிதன் அந்த இளைஞனிடம் இருந்து பறித்த பணத்தை எண்ணிக்கொண்டே பரிதியின் காலை பார்த்து "சின்ன காயம்தான் தம்பி தானா சரியாகிடும்.அந்த கர்ச்சீப் எனக்கு வேணாம் நீயே வெச்சுக்க" என கூறிவிட்டு எண்ணிய பணத்தில் இருந்து ஒரு இருநூறு ரூபாயை எடுத்து பரிதியின் முகத்திற்கு நேரே நீட்டினான்.

 

பரிதி ஏதும் புரியாமல் வினோதமாக பார்க்க.

அவன் சிரித்து கொண்டே "என்ன தம்பி அப்படி பாக்குற நான் போலீஸ் எல்லாம் இல்லை.அது சும்மா வெத்து கார்டு போலீஸ் கிட்ட இருந்து தப்பிக்க இந்த மாறி எவனாவது இளிச்சவாயன் சிக்குனா ஏமாத்த வெச்சுருக்கன்"

என அவன் கூறியதும் பரிதி அதிர்ந்து போனான்.

 

"உன்னை இடிச்சதுக்கு எல்லாம் இல்லை.பையன் ஐ மாடல் வண்டி வெச்சிருந்தான் கண்டிப்பா மிரட்டுனா நாலு காசு தேறும்ன்னு மிரட்டினேன்.கிடைச்சுருச்சு என்ன இருந்தாலும் உன்னால தான எல்லாம் முடிஞ்சது அதான் இந்த  200 வாங்கிக்க" என கூறி அவன் கையில் பணத்தை திணித்தான்.

 

பின் அவனிடம் "அப்படியே நடந்து போயிக்க தம்பி காயம் எல்லாம் ஒண்ணும் ஆகாது" என்றான்.அதை கேட்டதும் பரிதிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.இருந்தும் சமாளித்து கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

 

 

அந்த நவநாகரீ மனிதனின் அலைபேசி ஒலித்தது.அதில் அவன் காதலி. அலைபேசியை காதில் வைத்து பணத்தை மீண்டும் ஒருமுறை எண்ணி விட்டு அவன் பர்ஸில் வைக்க பாக்கெட்டில் கையை விட்டான்.அதிர்ச்சி அவன் பாக்கெட்டில் பர்ஸை காணவில்லை.

அவன் பதறி போய் நிமிர்ந்து பார்க்க அந்த சாலையில் யாருமில்லை.


நன்றி 


ஆசிரியர் :- தமிழ்மதி

 

Post a Comment

0 Comments