தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories

 மாலாவின் மாற்றம்







      மாலை எழுந்ததிலிருந்து மனதிற்குள் சற்று பதட்டமாகவே இருந்தாள் தான் உடுத்தும் ஆடைகளிலும் ஒப்பனைகளிலும் சற்று கூடுதலாகவே சிரத்தை எடுத்துக் கொண்டாள். நேரம் ஓட ஓட அவளது இதயத் துடிப்பின் வேகமும் இரண்டு மடங்கானது. இன்று 32 சி பேருந்து பிடித்தாக வேண்டும். 

       அந்தப் பேரு‌ந்து பிடித்தால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தார். 10 மணிக்கு தான் கல்லூரி. 32 சி பேருந்தில் சென்றால் 9 மணிக்குச் சென்றுவிடலாம். அவளது கால்கள் வீட்டில் நிலை கொள்ளவில்லை. அவளது மானம் கல்லூரியைச் சுற்றி வட்டமிட்டது. அவளது ஆசையும் கனவும் நிறைவேறும் வகையில் பேருந்தும் கிடைத்தது. உலகிலுள்ள மொத்த சந்தோஷமும் ஒருசேர அனுபவித்தது போல் மகிழ்ச்சி பொங்கியது.

   கல்லூரியில் நூலகம் சென்று ஏதோ புத்தகம் ஒன்றை எடுத்து வைத்தாள். அப்போதும் அவளது கண்கள் ஜன்னல் வழியாக எதையோ யாரையோ தேடிக் கொண்டிருந்தது. ஒரு இடத்தில் நிலைபெற்றது. இதழில் புன்னகை மலர்ந்தது. எதிர்ப்புறம் அதே மகிழ்ச்சி. அவள் மனதை முழுவதும் கொள்ளை கொண்ட பாலா  அங்கு நின்றிருந்தான்.

   மாலா  வெளியே வந்தவுடன், “பவுடர் அதிகமா இருக்கு!” என்று கிண்டலடித்தான். அவனது சொற்கள் மாலாவிற்குத்  தேவாமிர்தம் போல செவிக்குள்  இறங்கி நெஞ்சுக்குள் புகுந்தது.

  “நானே உன்னைப் பார்க்கணும்னு நினைச்சேன். டவுன்ஹால் போகணும். கிளாஸ் முடிஞ்சதும் எனக்காக காத்திரு. சீக்கிரம் போயிராதே!” என்று சொல்லிவிட்டு எதிர் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.

   மாலா இரண்டாம் ஆண்டு வேதியல் மாணவி. பாலா மூன்றாம் ஆண்டு விலங்கியல் மாணவன். மாலா கல்லூரியில் சேர்ந்த ஆண்டு முதலே மாலாவின் மனதைக் கொள்ளை அடித்தவனாக இருந்தான் பாலா. இருவருக்கும் வகுப்புகள் வேறு வேறு கட்டடத்திலிருந்திருந்தன.

 காலை மதியம் மாலை என்று நூலகத்திலும் உணவு விடுதியிலும் சந்தித்நூலகத்திலுமார்கள். முதலாண்டு வரவேற்பு விழாவில் வேதியல் மூன்றாமாண்டு மாணவன் குணா, பாலாவை அறிமுகம்  செய்து வைத்தான்

  அன்று முதல் பாலாவும் மாலாவும் ஒத்த உணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.  இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள்.  இருப்பினும் இருவரும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவே இல்லை.

     ‘இன்று எப்படியாவது ஒரு நேரத்தை உருவாக்கி   சொல்லிவிட வேண்டும்’ என்று முடிவு செய்து வந்திருந்தாள். பழம் நழுவி பாலில் விழுந்தது போல இரு‌ந்தது  மாலாவிற்கு.

    வகுப்பில் யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஒவ்வொரு வகுப்பும் முடியும்போதும் கிடைக்கும் இடைவேளையில் பாலாவுடன் பேச வேண்டிய செய்திகளை ஒத்திகை பார்ப்பதில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தாள்.

  “மாலா!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தவளுக்கு ஒரு பேரின்பம் காத்திருந்தது. மதிய உணவு இடைவேளையில் சற்றும் எதிர்பாராமல் பாலா அவளது வகுப்பறை பக்கம்  வந்திருந்தான். 

   “ மாலா! ஈவ்னிங்  கொஞ்சம் லேட்டாகும். நீ லைப்ரரியில் இரு. வெளியே ரொம்ப நேரம் வெயிட் பண்ற மாதிரி ஆயிரப் போகுது. அது சொல்லத்தான் வந்தேன் ,” என்று  பாலா கூறிக் கொண்டிருக்கும் போதும் மணி ஒலித்தது.

   “சரிமா! நான் ஈவ்னிங்  பார்க்கிறேன்,” எனச் சொல்லிவிட்டு வேகமாக நடந்தவன வச்சக்கண்ணு வாங்காம பார்த்துக்கொண்டே இருந்தாள் மாலா. 

     மாலை  பாலா சொன்னபடி மாலாவை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையம் வரை  நடந்துச் சென்றான். இருவரும் வழியில் ஏதேதோ பேசிக்கொண்டு சென்றனர்.   சொல்லிவிட  வேண்டும் என்று மாலா வாய் திறக்கும் நேரத்தில் டமார் என்று ஏதோ ஒரு சத்தம் கேட்டது. சப்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தபொழுது இருசக்கர வாகனம் ஒன்று மரத்தில் மோதி விழுந்திருந்தது. அருகில் மகேஸ்வரி விழுந்து கிடந்தாள்.

  “மகேஷ்!” எனக் கூறிக்கொண்டே பாலா ஓடினான்.  அவன் பின்னால் மாலாவும்  சென்றாள். அருகில் உள்ள மருத்துவரிடம் அவளைக் காண்பித்து விட்டு ஆட்டோவில் ஏற்றி விட பாலா முயன்றான்.  அடி பலம் என்பதால்  அவளுடன் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பாலாவுக்கு  ஏற்பட்டது. பெருந்தன்மையுடன் வழியனுப்பினாள் மாலா. என்னதான் இருந்தாலும் அவள் மனம் அடைந்த ஏமாற்றம், ஆட்டோ கடந்த பின் கண்ணீராக வெளி வந்தது.  தனது ஏமாற்றம் அனைத்தையும் கடந்த பின் சமாதானம் ஆகாமலேயே வீட்டையும் அடைந்தார்.

  மறுநாள் ‘பாலாவைப் பார்த்தே ஆக வேண்டும். கண்டிப்பாக தனது காதலைச் சொல்லிவிட வேண்டும்’ என்று பலவாறு முயற்சி செய்தாள்.

  “மாலா! கல்லூரியில் NACC  கமிட்டி வேலைகளிலும் துறை பேராசிரியர் பாலாவைச் சேர்த்திருக்காங்க.  இன்னும் ஒரு மாதக் காலம் ஐயாவ  கையிலேயே  பிடிக்க முடியாது” என்று  கௌரி கூறிவிட்டு சென்றாள்.

  அந்த ஒரு மாத காலமும் மாலாவிற்கு இரவும் பகலும் பெரும் வேதனையாகக் கழிந்தது. NACC கமிட்டி  வந்துட்டு போனதுக்கப் பிறகும் பாலாவை  ஒரு வாரம் பார்க்கவே  முடியல.  ‘இன்னைக்குக் கண்டிப்பா பார்த்தே ஆகணும்’ என்று எண்ணியவள் மதிய உணவு இடைவெளியில் பாலாவின் வகுப்பறைக்குச் சென்றாள். 

    கௌரி, “  ஏய் மாலா!  அவன் இப்ப தான் உன்னைப் பார்க்க  உனது வகுப்புக்கு வரேன்னு சொல்லி இருந்தான்,”  என்று கௌரி முடிப்பதற்கு முன் ஓட்டமும் நடையுமாய் கட்டடத்தில் இருந்து இறங்கும் போது அவள் கண்ட காட்சி மனதில் பெரிய இடி இறங்கியது போல இருந்தது.

   பாலாவின்  கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் மகேஸ்வரி.   மாலா வருவதைக் கவனிக்காமல் இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். தனது உள்ளத்து உணர்வுகளை முழுவதும் அடக்கிக் கொண்டு  அவ்விடத்தைக் கடக்க முயன்றாள்.  

  “ மாலா!”    என்று பாலா கூறியதும் மாலாவிற்குக்  காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. தனது உணர்வுகளை மறைத்து சிரிப்பின் முகமூடி அணிந்து கொண்டு அங்கு நிற்க முடியாதவளாய் ஏதேதோ பேசிவிட்டு கடந்தாள். 

    அடுத்து வந்த நாட்களில் எல்லாம் எங்கு பார்த்தாலும் பாலாவுடன் மகேஸ்வரி   இருந்தாள். அவர்கள் இருவரும் காதலிப்பதாக இவளின் காதில் விழுந்ததும் மற்றவர்கள் கூறுவதைக் கேட்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் மாலா. 

   வீட்டிற்குச் சென்று தொலைபேசியில் ஆண்கள் விடுதிக்குத் தொடர்பு கொண்டு பேசினாள்.  பாலா,  “ஹலோ!”  என்றவுடன் மனதில் பூட்டி வைத்த அனைத்து உணர்வுகளும் அழுகையாக மாறியது. அதனை அடக்கிக்கொண்டு பேசினாள். 

    “ இப்ப எல்லாம் உங்கள பாக்கவே முடியல. அதான் கூப்பிட்டேன்,” என்றாள்.

 எந்த உணர்வுகளும் அற்ற  நிலையில் “அப்படியா! சரி சொல்லு! என்ன விஷயம்?” என்றான்.

   உணர்ச்சியற்ற சொற்கள் மேலும் அவளால் தொடர முடியவில்லை.

   “மாலா! லைன்ல இருக்கியா?” என்று பாலாவே தொடர்ந்தான்.

   “உங்களுக்கும் மகேஸ்வரிக்கும்  நல்ல ஜோடி பொருத்தம்,”  என்று தான்  கேள்விபட்டதை  மறைமுகமாகக் கூறினாள்.

   “ஆமாம்! இது தான் எல்லோரும்  சொன்னாங்க. மகேஸ்வரி போன்ற ஒரு பிள்ளையை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை..............” என்று தொடர்ந்து கொண்டிருந்த அவனது எந்த சொற்களும் அவள்  காதில் விழவில்லை. எப்ப போன வைக்கலாம் என்று  நினைத்தாள்.

   “மாலா! நான் ரொம்ப நேரம் பேசிட்டேன். நீ போய் படி!” என்று கூறியவாறு தானே இணைப்பைத் துண்டித்து விட்டு சென்றான்.

   மாலாவின் மனதில் எரிமலை குழம்பு பொங்கி தீப்பிழம்பாய் அவளது கண்களிலும் அவளது நெஞ்சத்தில் வெடித்தது. 

  “எப்படி இந்த பசங்களால்  நேரத்திற்கு நேரம் மாற முடிகிறது,” என்று தனது ஏமாற்றத்தை தனக்குள் கொட்டிக் கொண்டிருந்தாள். 

   அடுத்தடுத்த நாட்களில் பாலாவும் மகேஸ்வரியும் அவளது கண்களில் படும்போது அவளால் சமாதானமாகவே முடியவில்லை.


வாழுற நேரம் செத்திரலாம்  என  முடிவு செஞ்சாள்.

   வீட்ல  அம்மா ஒரு பக்கம் அழுதுட்டே இருந்தாள். அவளைப் பார்த்ததுமே இவளுக்குத் தூக்கி வாரி போட்டது. அவளது சித்தி பொண்ணு கயல்விழியும் ஏதோ காரணத்துக்காக பூச்சிமருந்து குடித்து விட்டாளாம். அதைக் கேட்டவுடனே சித்தி மயங்கி விழுந்துட்டாள் . இன்னும் எழவே இல்லையாம். சித்தப்பா தனிமரமாய் உட்கார்ந்து இருக்காங்களாம்.  அவளது அழுகையும்  ஆர்ப்பாட்டமும் மாலாவின் மனதில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.

   “யாரோ ஒருவனுக்காக, சிறிது காலம் நம் மனதில் இருந்தவனுக்காக, நம்மை ஒரு பொருட்டாக மதிக்காதவனுக்காக, எனது கண்ணீரும் வேதனையும் தெரியாதவனுக்காக, என்னோட அம்மாவ அப்பாவ கலங்க வெச்சுட்டு, இருபது வயசுல எதுக்கு சாகணும்?” 

   “அம்மாவாலும் அப்பாவாலும் கண்டிப்பாக என்னுடைய இழப்பைத் தாங்கவே முடியாது.  சித்தி பெண்ணுக்கு நடந்ததையும் சித்திக்கு நடந்ததையும் நினைச்சு அம்மா இவ்வளவு கவலைப் படுறாங்க. நான் இல்லைனா?  எப்படி இருப்பாங்க? ஐயோ! என்னால அத நினைச்சு கூட பார்க்க முடியலையே!” என்று பலவாறு தனது எண்ண அலைகளால் அன்று இரவு முழுவதும் கட்டுண்டு கிடந்தாள்.

   அம்மாவும் அப்பாவும் விடியும் முன்  சித்தி வீட்டிற்குக் கிளம்பி விட்டார்கள். இவள் தனியாக அமர்ந்திருந்தாள்.   

    “யாரோ ஒருவருக்காக தனது வாழ்வைப் பாழாக்கி கொள்ள வேண்டாம். நான் கண்டிப்பாக கல்லூரிக்குச் செல்வேன்.  நான் அடைய  வேண்டிய லட்சியங்கள் பல உள்ளன.  எந்த கனவுடன் நான் கல்லூரியில் சேர்ந்தேன்? அதை அடைந்தே தீருவேன். படப்பிடிப்பிலும் இலக்கியங்களிலும் என்னை நிலைத்துக் கொண்டிருப்பேன்,” என்று உணர்வுகளுடனும் புதிய தோற்றத்துடனும் மாலா அன்று கல்லூரிக்குச் சென்றாள்.

முனைவர் அ.இராஜலட்சுமி 

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்


Post a Comment

0 Comments