Tamil Sirukathaigal | Short Stories in tamil | தமிழ் சிறுகதைகள்

 மலர்கள் மலரட்டும்





தம்பி, இந்த பொன்னாத்தா கிழவியை எப்படி சரி கட்டுவது என்று

யோசித்தீர்களா என்று மேனேஜரிடம் கேட்டவர், இன்னும் சில மாதத்தில்

கட்டிடத்தை கட்டி முடித்து வரும் கல்வி ஆண்டிலேயே கல்லூரியை

துவக்கவேண்டும், ஆனால் கிழவியின் பிடிவாதத்தால் கல்லூரியின்

முகப்பழகே கெட்டுவிடும் போல இருக்கு என்று உடனிருந்த

அல்லக்கைகளிடம் கல்லூரியின் தலைவர் செந்தில்நாதன் புலம்பினார்.

தனியாகவும், நாலு ஊர் பெரிவர்களை வைத்தும் பேசிப்பார்த்தாச்சு

எதற்கும் கிழவி அசைஞ்சு கொடுக்க மாட்டேங்குது. பணத்துக்கும் மசிய

மாட்டேங்குது சார். கிழவியின் மகனைப்பற்றிதான் உங்களுக்கு தெரியுமே,

அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். நீங்களே ஒருமுறை

அவரிடம் பேசிப்பாருங்களேன் என்றார் மேனேஜர். பேசிட்டேன்யா,

சின்னப்பய என்னமா பேசுகிறான், என் அம்மா உயிரோடு இருக்கும் வரை

என்னால் ஒன்றும் செய்ய இயலாது, உங்களுக்கு உதவமுடியாது என்று

கறாராகப் பேசுகிறான். இந்த கிழவி ரெண்டு புள்ளைய பெத்து இருந்தாலும்

அண்ணன் தம்பிக்குள்ள சண்டைய மூட்டி இந்த வீட்டை எழுதி

வாங்கலாம் ஆனா கிழவியோ ஒத்த பையன இல்ல பெத்து வச்சிருக்கா.

அவனை பற்றி விசாரிச்சா, அவன் காந்தியவாதி என்று ஒட்டுமொத்தமா

முத்திரை குத்துகிறார்கள். ப்ளஸ்டூ படிக்கிற கிழவி பேரனுக்கு நம்

மெடிக்கல் காலேஜில் இலவசமாக ஒரு சீட் தருவதாக ஆசை காட்டலாம்

என பார்த்தால், அவன் அப்பனை விட புத்திசாலி, மெரிட்டில் மெடிக்கல்

சேர்ந்துவிடுவான் என்கின்றனர். நாலா விதத்திலும் யோசிச்சுப் பார்த்தாச்சு,

கிழவியை வீட்டை விட்டு காலி செய்ய ஒரு வழியும் தெரியவில்லை

என்று கையைப் பிசைந்தார் செந்தில்நாதன்.


அண்ணே, பேசாம கிழவியை போட்டுத்தள்ளிடலாமா என்ற

அல்லக்கைகளிடம். ஏண்டா இதை முதலிலேயே செய்திருக்கமாட்டேனா,

அந்தப் பாவத்தை யாருடா சுமக்கிறது என்றார். பணத்துக்காக நீங்கள்

செய்யாத அக்கிரமங்களா? என்று மனதுக்குள் சிரித்தபடி, இறுக்கமான

முகத்தோடு செந்தில்நாதனை பார்த்தார் மேனேஜர். என்னப்பா ஏதோ

சொல்ல வராப்ல தெரியுது என்றவரிடம் ஒன்றுமில்லை சார் எதற்காக

இந்த கிழவிக்கு மட்டும் இவ்வளவு கரிசனம் காட்டுகிறீர்கள்,

தயங்குகிறீர்கள் என்று கேட்க வந்தேன் என்றான்.

எல்லாம் நன்றிக்கடன்தான்யா, தலைமுறை தலைமுறையா

கிழவியோட குடும்பத்தார் எங்க குடும்பத்துக்காக உழைத்துள்ளனர்.

என்னுடைய முப்பாட்டனார் தான் இவங்களுக்கு வீடுகட்டிக்க இந்த

இடத்தை இனாமாக கொடுத்தார். நான் இங்கு கல்லூரி கட்டப்போகிறேன்

என்று கூறி, சிறு தொகையை கொடுத்து எல்லோரையும் காலிசெய்து

விட்டேன். ஆனா, கிழவியோட பையந்தான் சட்டம் பேசுகிறான். அவனிடம்

அதிகம் பேசினால் காலி செய்தவர்களையும் மறுபடி கொண்டுவந்து

விடுவானோ என்று யோசிக்கிறேன். எனக்கும் கிழவி மேல் ஒருவித பாசம்

உண்டு, ஏனென்றால் சிறு வயதில் என்னை வளர்க்க அம்மாவிற்கு

துணையாக இருந்திருக்கிறாள். அதனால்தான் கிழவிகிட்ட இதுவரை நான்

நேரில் பேசாது, பையனிடம் பேசினேன், கடவுள் தான் வழி

காட்டவேண்டும் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

மல்லிகா, ஏன் உன் பிள்ளைகள் எல்லாம் உன்னைப்போல் பூக்க

மாட்டேங்கறாங்க? என்று கேட்டபடி மல்லிச்செடிகளுக்கு தண்ணீர்

ஊற்றிக்கொண்டிருந்தவளை, அவ்வழியே போய்க் கொண்டிருந்த

உறவுக்கார கிழவி சரோஜா, ஏண்டி பொன்னாத்தா செடிங்ககிட்ட போய்

அதுகளுக்கு உயிர் இருக்கிற மாதிரி பேசிக்கிட்டிருக்க என்று கேட்டாள்.


உன்னைபத்தி நாலுபேர் சொல்லும்போது, அதை நான் நம்பல, ஆனால்

இப்ப நானே நேர்ல பார்த்த பிறகுதான் நம்பறேன். மல்லிகா, பிள்ளைகள்னு

அந்த மல்லிச்செடி கூடவா பேசின? என்று நமுட்டுச் சிரிப்போடு

கேட்டவள் வந்து திண்ணை மேல உக்காரு, அஞ்சாறு மாசமாச்சிடி

உன்னைய பார்த்து என்றாள். செடி கொடிங்க கிட்ட பேசி பேசி நீயும்

மரக்கட்டை ஆகிவிட்டாயோ என்று நினைச்சேன். மணி ஒன்பதாகப்போது

ஏதாவது சாப்டியாடி என்று கேட்டவளுக்கு, செடிகொடிகளைக் காட்டி என்

பிள்ளைகளுக்கு தண்ணீர் ஊற்றி அவங்க பசியை போக்கிட்டுத்தான் நான்

சாப்பிடுவேன் என்றாள்.

இந்தாடி சரோஜா என் கையால ஒரு சொம்பு கூழ் குடி என்று

உள்ளே சென்ற பொன்னாத்தாவின் கையை பிடித்து ஏண்டி செடிகளுக்கு

எல்லாமா பேரு வச்சி கூப்பிடுவ என்று சரோஜா கேட்டாள். ஆமாண்டி

பாசத்துல கூப்பிடுவேன், என் வூட்டுக்காரு நினைவா இந்த

மல்லிச்செடியை நட்டேன். பிறகு அதிலிருந்து பதியம் போட்டு நாலு

செடிய நட்டேன். அம்மாக்காரி, பூத்து குலுங்குவா, அவ பிள்ளைங்க நாலும்

பூக்கவே மாட்டேங்கறாங்க, வெய்ய காலம் வந்தா கனகா பூத்துகுலுங்குவா

பாரு, அவ அழகே அழகுதாண்டி. ரெண்டு மூணு நாளைக்கு அவ மேல

கையையே வைக்கமாட்டேன். கூடவே அவ சக்களத்தி மஞ்ச கனகாவும்

போட்டி போட்டு பூப்பா, என்று பொன்னாத்தா பூரிப்பாக

சொல்லிக்கொண்டே போக சரோஜா வாய்விட்டு சிரித்தாள்.

அரளி என்னைவிட உசரமா வளர்ந்து நிக்குது அதனால அதை

அண்ணா என்பேன், ரோஜாவும் அதற்கு போட்டியாக வளருவா அதனால

அவளை அக்கா என்பேன் என்ற பொன்னாத்தா இவங்களுக்கு எல்லாம்

தாய் பாஞ்சாலி தான் என்று செம்பருத்தியை காட்டினாள். செம்பருத்திப்பூ


நடுவுல மெல்லிசா உசந்து நிற்கிறா பாரு அவதான் திரெளபதி, அவள

சுத்தி அஞ்சு இதழ்கள் இருக்கே அவங்கதான் பஞ்சபாண்டவர்கள் புரியுதாடி

என்று பொன்னாத்தா கேட்க அவளை வியப்போடு பார்த்தாள் சரோஜா.

பொன்னாத்தா நாங்க எல்லாரும் வீட்டை காலி செஞ்சு ரெண்டு

வருஷம் ஆச்சு, நீ மட்டும் ஏண்டி இன்னும் புடிவாதமா இங்கயே தனியா

இருக்கிற? உன் பொண்ணுக்காக தோட்டம் வெச்சு அவளை

சந்தோஷப்படுத்தின, அதுல நாலு காசு பாத்து பையனையும் படிக்க வைச்சு

ஆளாக்கின, மகளும் போயிட்டா, மகனும் கூட இல்லை மவன்தான் பணம்

அனுப்பறானே,, இன்னும் ஏண்டி வயசான காலத்துல இந்த தோட்டத்தை

கட்டிக்கிட்டு ஒத்தையிலே, கஷ்டப்படுற என்று சரோஜா கேட்டாள்.

முதலாளி தம்பியும் உனக்கு நிறைய பணம் கொடுக்கிறேன்னு

சொல்லுதாமே, வாங்கிகிட்டு மவன்கூட போய் இரு, இல்லனா எங்ககூட

வந்துடுடி ஏன் வீணா புடிவாதம் புடிக்கிறாய் என்றாள்.

சரோஜா, எம்பொண்ணும், வூட்டுக்காரரும் உசிர விட்ட இந்த

இடத்துலயேதான் என் உசுரும் போவனும்கிறது தான் என்னோட ஆசை,

பணம் காசு வேண்டாமடி, என்னைய வெட்டிப்போட்டாக்கூட இந்த

இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றாள் பொன்னாத்தா. ரொம்ப வீராப்பு

பேசாதடி, நீ சொன்ன மாதிரியே வீட்டை பிடுங்க அவங்க உன்னை என்ன

வேணாலும் செய்வாங்க பாத்து நடந்துக்கடி என்று சொன்னபடியே

எழுந்தாள் சரோஜா. வயசான காலத்துல ஒரு பர்லாங்கு நடந்து போய்

தண்ணி எடுத்து வந்து இந்த செடிகளை வளர்க்கிறாயே, முதல்ல உன்

உடம்பை பாத்துக்கோடி, பொறவுதான் உன் பூந்தோட்டம் என்று சரோஜா

விடைபெற்றாள்.


மணி பத்தாகும் போல இருக்கே என்று நினைத்தபடி, ரெண்டு

குடத்தை எடுத்துக்கொண்டு கிணற்றை நோக்கி நடந்தாள். பொன்னாத்தா.

அவள் கால்கள்தான் முன்னோக்கி நடந்தன, ஆனால் மனமோ பின்னோக்கி

கடந்தகால சம்பவங்களை அசை போட்டது. அண்ணன் தம்பி என மூன்று

பேருடன் பிறந்த ஒரே மகள் பொன்னாத்தாவை செல்லமாக வளர்த்து

அவள் தாய்மாமன் மகனுக்கே திருமணம் செய்து வைத்தனர். பிறந்த

வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி காட்டுவேலை, கழனிவேலை

எதற்கும் அவளை அனுப்பியதில்லை. மாமாதான் பொன்னாத்தாவை, தன்

எஜமான் வீட்டு தோட்டத்தையும், தொழுவத்தையும் பராமரிக்கும்

வேலையில் சேர்த்துவிட்டார். பொன்னாத்தா கையால் வைத்தால் எந்த

செடியும் செழிப்பாக வளர்ந்து, பூக்கும், காய்க்கும் அப்படிப்பட்ட ராசி

அவளுடைய கைகளுக்கு என எஜமானியம்மா அவளை புகழ்வார்.

எஜமானியம்மாவிற்கு பிள்ளைகளை வளர்ப்பதில் உதவியாக இருந்து

காலப்போக்கில் அவருக்கு உற்ற தோழியாகவும் மாறிப்போனாள்

பொன்னாத்தா.

பொன்னாத்தாவிற்கு ஆணொன்று, பெண்ணொன்று கொடுத்த கடவுள்,

மகள் சுந்தரியை மட்டும் பேசாமடந்தையாக படைத்துவிட்டார். அதனால்

அவளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. என்னதான் பெற்றவர்கள்

பாசமாக வளர்த்தாலும், அவர்களுக்கு தானும் உதவ வேண்டும் என்று

எண்ணிய சுந்தரி, வீட்டை சுற்றி பூச்செடிகளை நட்டு வளர்த்தாள். படிப்பு

வாசனை அறியாமல் போனாலும், சுந்தரி பூக்களின் வாசத்தை உணர்ந்து

மகிழ்ந்தாள். செடிகளை எப்படி பராமரித்து வளர்க்கவேண்டும், எந்த

செடிக்கு என்ன உரம் போடவேண்டும் என்று அறிந்து கொண்டாள்.

நன்றியாக பூச்செடிகளும், அவள் முகமும், மனமும் மலர தாராளமாக


பூத்துக்குலுங்கின. பூந்தோட்ட வருமானம், அவள் கைசெலவுக்கும்,

அண்ணன் படிப்புக்கும் உதவியது, பெற்றவர்கள் சுமையை குறைத்தது.

அவள் வீட்டை பூக்காரி பொன்னாத்தா வீடு என்று ஊர்மக்கள்

அழைக்குமளவிற்கு சுந்தரி பூந்தோட்டத்தை விரிவுபடுத்தினாள்.

அவர்களுடைய குடும்பத்திலேயே, முதன்முதலாக பட்டப்படிப்பு படிக்க

கல்லூரிக்குள் காலடி வைக்கப்போவது பாண்டிதான் என்பதால்

பொன்னாத்தா குடும்பம் ஆனந்த கூத்தாடியது. வேண்டுதலை நிறைவேற்ற,

நாளைக்கு தோட்டத்து பூக்கள் எல்லாவற்றையும் மாலையாக தொடுத்து

மலைமேல் இருக்கும் சாமிக்கு சாத்த கொடுக்க வேண்டும் என்றாள்

சுந்தரி. விடிகாலையே எழுந்த பொன்னாத்தா மகளை எழுப்பி, சுந்தரி

பூவையெல்லாம் பறித்து மாலை கட்டி வை, எஜமானியம்மா வீட்டுக்கு

சென்று சீக்கிரம் வருகிறேன் என்று புறப்பட்டாள்.

பொன்னாத்தா கிளம்பும்போதே பாண்டியும், அவன் அப்பாவோடு

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச புறப்பட்டான். வேலையை முடித்துவிட்டு

வேகவேகமாக வீட்டிற்கு ஓடிவந்த பொன்னாத்தா தோட்டத்து கதவு

திறந்திருப்பதை பார்த்து, இன்னுமா சுந்தரி பூ எடுக்கிறாள் என்று கோபமாக

மகளை சத்தமாக கூப்பிட்டபடி தோட்டத்துக்குள் நுழைந்தாள். மகள்

சுந்தரியோ, பறித்த பூக்கள் எல்லாம் மேலே கொட்டிக்கிடக்க வாயில்

நுரைதள்ளியபடி செடிகளுக்கு நடுவில் விழுந்து கிடப்பதை பார்த்து

ஓவென கதறி அழுதாள். பொன்னாத்தாவின் ஒப்பாரி கேட்டு

அக்கம்பக்கத்து வீட்டார் தோட்டத்துக்கு ஓடிவந்தனர். பூ வாசத்திற்காக

தோட்டத்துக்குள் நுழைந்த நாகம்தான் சுந்தரியை தீண்டியிருக்க வேண்டும்

என்றார்கள்.


எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் இறந்துபோன எம்பொண்ணோட

ஆத்மா இந்த பூந்தோட்டத்தில்தான் உலவிக்கொண்டிருக்கிறது என்று

பொன்னாத்தா புலம்பிக்கொண்டிருந்தாள். போடி பைத்தியக்காரி இந்த

பூச்செடிகளால்தான் உன்மக உயிரே பறிபோச்சு அதனால இந்த

பூந்தோட்டத்தை அழித்துவிடு என்றனர். பாண்டியின் அப்பாவும் சொல்லிப்

பார்த்து முடியாமல் போனதால் பொஞ்சாதி சந்தோஷம்தான் முக்கியம்

என்று ஊரார் அறிவுரையை உதறிவிட்டார். மகன் பாண்டி படிப்பை

முடித்து வேலையில் சேர்ந்தவுடனே அவனுக்கு கல்யாணம் கட்டி வைத்து,

பேரனையும் பார்த்த கையோடு மேலேபோய் மகளோடு சேர்ந்து வானத்து

பூக்களோடு இணைந்து விட்டார். தள்ளாத வயதிலும் பொன்னாத்தா

பூச்செடிகளை எல்லாம் தன் சொந்தங்களாக நினைத்து இன்றுவரை

தோட்டத்தை பராமரித்து வருகிறாள். பொன்னாத்தா காலி குடத்தோட

கிணத்தை தாண்டி போறய உன் நினைப்பு எங்க இருக்கு என்று ஒருத்தி

கேட்டபோதுதான் பொன்னாத்தா சுயநினைவுக்கு வந்தாள்.

கீரையை கிள்ளிக்கொண்டிருந்தபோது பொன்னாத்தாவின் செல்

சிணுங்கியது. பையனைத்தவிர நம்மை யாரு கூப்பிடப்போறாங்க என்று

நினைத்தபடியே செல்லை எடுத்து வாஞ்சையோடு பாண்டி சொல்லுப்பா

என்றாள். அம்மா! என்ற மகனின் குரலைக் கேட்டதும் பொன்னாத்தாவின்

கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அம்மா இந்த முறை

லீவுக்கு ஊருக்கு வரமுடியவில்லை, பையனுக்கு கோச்சிங்கிளாஸ்,

போதாதற்கு அங்கு வந்தால், வீட்டை கேட்டு தினமும் யாராவது வந்து

பேசுவானுங்க என்று சொல்லிவிட்டு செல்லை துண்டித்துவிட்டான்.

ஆத்தாகிட்டயே மகன் கணக்கு பார்த்து பேசுறானே என்று வருத்தமானாள்.

தோட்டத்துக்குள் சென்ற பொன்னாத்தா, செல்லங்களா இனிமே

என்னால உங்களுக்கு ரெண்டு வேளை தண்ணி ஊத்த முடியுமா


தெரியவில்லை என்றாள். மல்லிகாவும், கனகாவும் வேகமாக அசைவதை

பார்த்து, ஏண்டி தலைய ஆட்டுறீங்க புரியுது மூணு வேளையும் நீ மட்டும்

கொட்டிக்கிற, எங்களுக்கு ரெண்டு வேளை தண்ணி ஊத்த முடியாதோ

என்று கேட்கிறீர்கள் அப்படித்தானே என்றாள். அப்போது வேகமாக காற்று

வீசு மக சுந்தரிதான் கோபமாக திட்டுகிறாள் என்று நினைத்தாள். தள்ளாத

வயதிலும் இரண்டு குடம் தண்ணி கொண்டுவந்து தோட்டத்தில்

வைத்துவிட்டுத்தான் இரவு தூங்கப்போவாள் பொன்னாத்தா.

கல்லூரிவளாகத்தில் தோட்டத்து செடிகளுக்கு பூச்சி மருந்து

அடித்துக்கொண்டிருந்தனர். தோட்டக்காரனிடம், தண்ணீர் தீர்ந்துவிட்டது

இன்னும் கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என மருந்தடிப்பவன் கேட்க,

மோட்டார் ரிப்பேராகிவிட்டது தண்ணீர் கொண்டு வர ரொம்ப தூரம்

போவனும், இருட்டாகிவிடும் பேசாம பொன்னாத்தா கிழவி தோட்டத்துக்கு

போய் குடத்திலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள் என்றான், தோட்டக்காரன்

சோம்பலாக, அந்தி வேளையில் கிழவிக்கு கண்ணு தெரியாது என்று

நினைத்தபடி ஸ்பிரேயர் டாங்கில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு வந்த

மருந்தடிப்பவன் தோட்டம் முழுதும் மருந்தடித்துவிட்டு வீட்டிற்கு

சென்றுவிட்டான்..

மறுநாள் காலை அவ்வழியே சென்றவர்கள், பூந்தோட்டத்தில்

வாயில் நுரை தள்ளியபடி பொன்னாத்தா விழுந்து கிடப்பதை பார்த்தனர்.

அவ மகளை தீண்டியதைப்போல இவளையும் பாம்பு தீண்டிவிட்டதா?

இல்லை முதலாளி ஆட்கள் விஷம் வைத்து கொன்று விட்டனரா? என்று

ஊராரும் உறவினரும் கிசுகிசுப்பாக ஒருவரை ஒருவர் கேட்டுக்

கொண்டனர்.


கல்லூரி வளாகத்தில் வேலை செய்பவர்களை அழைத்த

செந்தில்நாதன், பொன்னாத்தா கிழவி எதற்குமே அசராத சிங்கமடா,

என்னை சந்தோஷப்படுத்த நீங்க யாரோதான் அவளை ஏதோ

செய்திருக்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டார். போலீஸ்

இங்கேயும் வந்து விசாரிக்கும் எனக்கு உண்மை தெரிந்தால் தான்

அவர்களை சமாளிக்க முடியும் உங்களையும் காப்பாற்ற முடியும் என்றார்.

மருந்தடிப்பவனும், தோட்டக்காரனும் அவர் காலில் விழுந்து தங்களை

காப்பாற்றும்படி கதறினர். டாங்கில் தண்ணீர் ஊற்றி மருந்தை

கலக்கும்போது கொஞ்சம் மருந்து பொன்னாத்தா கிழவி குடத்தில்

கலந்துவிட்டது, கிழவி தண்ணிய செடிக்குதானே ஊத்தப்போகிறாள் என்று

நினைத்தோம், ஆனால் அவள் அந்த தண்ணியை குடித்துவிட்டாள் போல

இருக்கிறது என்றனர்.


போலீஸ் கேட்டால், பொன்னாத்தா கிழவி அவ தோட்டத்து

செடிகளுக்கு ஊற்ற ரெண்டு குடம் தண்ணீர் தாங்க என்று கேட்டது,

செடிகளுக்குதானே கேட்குது என்று மருந்து கலந்த கையோடு தண்ணீர்

எடுத்து கொடுத்தோம் எங்களுக்கு வேறெதுவும் தெரியாது என்று

சொல்லிவிடுங்கள் என்றார் செந்தில்நாதன்.

அவருக்கு பொன்னாத்தா மறைவு ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும்

மறுபுறம் மனதில் ஒரு நெருடல் இருந்து கொண்டேயிருந்தது. தன்னை

சிறுவயதில் வளர்த்த பொன்னாத்தா வாழ்ந்த வீட்டையும்,

பூந்தோட்டத்தையும் வளைத்து கல்லூரியை கட்டிமுடித்தவர் அவள்

வாழ்ந்த வீடு இருந்த இடத்தில் ஒரு கோவில் கட்டினார்,

கோவிலைச்சுற்றி பெரிய பூந்தோட்டம் அமைத்து பராமரிக்கச் செய்தார்.

கல்லூரிக்குள் நுழையும் போதெல்லாம் தவறாமல் அந்த கோவிலுக்குச்

செல்வார். பொன்னாத்தா, கடவுள் சிலைக்கு பதிலாக, அங்கு நீதான் என்


கண்களுக்கு தெரிகிறாய். நீ உயிரோடு இருந்திருந்தால் இன்னும் ஒரு

பத்து வருடம் இருந்திருப்பாயா. ஆனால் இப்போது நீ வாழ்ந்த வீடு ஒரு

கோவில். பலதலைமுறைகள் உன்னை சாமியாக நினைத்து கையெடுத்து

கும்பிடும். உன் பூந்தோட்டமும் நன்றாக பராமரிக்கப்படும் என்று

கையெடுத்து கும்பிடுவார். வானத்து பூக்களோடு சேர்ந்து விட்டாலும்,

பொன்னாத்தாவின் ஆன்மா கல்லூரி தோட்டத்துக்குள்ளேயே வட்டமிட்டுக்

கொண்டிருக்கிறது என்று அவருக்கு எங்கே தெரியப்போகிறது!


"மலர்களோடு மனங்களும் மலரட்டும் மணம் பரவட்டும்".


மீனாட்சி அண்ணாமலை 

சென்னை 

Post a Comment

0 Comments