family short stories in tamil | தமிழ் சிறுகதைகள்

 


இப்படியும் ஒரு தண்டனை






“அப்புறம் எப்படி இந்தியாவுல சட்டம் ஒழுங்கை யாரும் சரியா கடைப்பிடிக்க மாட்டாங்கன்னு சொன்னீங்க?” 


இந்தியாவில் ஏன் அவ்வளவு விபத்து நடக்குது என்று எப்போதோ மகன் கெளதம் கேட்டதற்கு நான் சொன்ன பதில் இப்படியோர் இக்கட்டானத் தருணத்தில் எனக்கே திரும்பும் என நினைத்தேனா? அவனது கேள்விக்குப் பதிலளிக்கும் நிலையில் நானோ, என் கணவரோ இல்லை. அண்ணன் கேட்பது சரிதானே என்பதைப்போல சுனந்தா என்னைப் பார்த்தாள். காரை நான் ஓட்டிச் செல்வதுபோலப் பார்வையைச் சாலையில் பதிய வைத்தேன்.


“அந்த மாட்டுக்கு என்ன ஆச்சோ?”


“இதுவே சிங்கப்பூரா இருந்திருந்தா இப்படிச் செஞ்சிருப்பீங்களா?”


அப்பா திரும்பிப் பார்த்து முறைப்பதைக் கண்டுகொள்ளாமல் “ஆக்சிடென்ட் பண்ணிட்டு நிக்காம போறோம். இது கொஞ்சங்கூட மனிதாபிமானமற்ற செயல்” என்று சுனந்தா சொன்னாள்.


கணவரின் தலை மறுபடி பின்னால் திரும்ப, அமைதியாக இருக்கும்படி பிள்ளைகளிடம் சைகைக் காட்டினேன். மனம் சுருங்கியவர்களைக் காண விரும்பாத இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டனர். சற்று முன்பு அடிபட்டிருந்த கார் முக்கல் முனகலோடு முன்னோக்கிச் சென்றது.


மீனம்பாக்கம் விமான நிலையைத்தைவிட்டு வந்தபோது, அந்த நள்ளிரவிலும் பிரகாசமான கண்களோடு பலர் விமான நிலையத்தின் வாயிலை நோக்கிக் காத்திருந்தனர். தேடல் நிறைந்த விழிகளோடு காத்திருக்கும் அப்பாவைக் காணாதது எனக்குச் சிறிது வருத்தத்தை கொடுத்தது. திடீரென வயிறு சரியில்லாமல் போனதால் எங்களை அழைக்க ஏர்போர்ட்டுக்கு வர அவரால் முடியவில்லை. கெளதம் சுட்டிய திசையில், அப்பா வாட்சப்பில் அனுப்பிய போட்டோவிலிருந்த டிரைவர் கையில் கணவரது பெயரைத் தாங்கிய அட்டையுடன் நின்றிருந்தார். நாங்கள் அவரைப் பார்த்ததும் ஒரு சம்பிரதாயமானப் புன்னகையுடன் எங்களை நோக்கி வந்தார். என்னிடமிருந்த டிராலியை பெற்றுக்கொண்டு கார் நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி அவர் செல்ல, நாங்கள் பின்தொடர்ந்தோம்.


பொழுதெல்லாம் வாட்டியெடுத்த சென்னையின் அனலை, மார்கழியின் ஈரம் கலந்த காற்று விழுங்கியிருந்தது. காரில் ஏறியவுடனே, தாத்தா ‘சிம் கார்ட்’ கொடுத்தனுப்பினாங்களா என கெளதம் கேட்டான். டிரைவர் சட்டைப்பையிலிருந்து எடுக்க, “அதை முதல்ல கொடுங்க” வார்த்தைகள் துள்ளின. அடுத்த சில நிமிடங்களில் பிள்ளைகள் இணையத்தில் இணைந்துவிட சிறு வேதனை என் மனத்தைக் கீறியது.


“டிரைவர் சோமு நல்லா தெரிஞ்ச பையன்தான். என்ன ஒண்ணு தாராளமா பேசமாட்டான். ராத்திரி நேரங்கிறதால பேச்சுக் கொடுத்துட்டே வாங்க” என அப்பா சொல்லியிருந்தார்.


ஐந்தாண்டுகளுக்கு மேலாக வாடகை வண்டியை ஓட்டி வந்ததாகவும், தன்னுடைய நெடுநாளையக் கனவான இந்த வண்டியை வாங்கி ஓராண்டுகூட ஆகவில்லையெனவும் சோமுவிடமிருந்து கணவர் வார்த்தைகளைப் பிடுங்கியிருந்தார். கறு மையைப்போலச் சாலையில் வழிந்து கிடந்த இருளை விலக்கிக்கொண்டு சீரான வேகத்தில் கார் கடலூரை நோக்கிச் சென்றது.


“பொறுமையாகவே போங்க சோமு, களைப்பா இருந்தா டீ குடிக்கலாம்.”


“ஓகே சார். கொஞ்ச நேரமாகட்டும்.”


“இந்நேரத்தில டீயா?”


இப்போதைய பயணத்துக்குச் சிறு ஓய்வு நல்லது எனப் பிள்ளைகளிடம் சொன்னேன். எங்களுக்கு எதுவும் வேணாமென ஏககாலத்தில் குரல் கொடுத்தனர். தொழில், அரசியல்போக்கு, சினிமா என நினைத்து நினைத்து சோமுவிடம் கணவர் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார்.


‘அவர்தான் விழித்திருக்கிறாரே... எங்களைக் கொஞ்சம் இணைய விடமாட்டாயா?’ வினா தொடுத்த விழிகளுக்கு நான் இசையவிருந்த தருணத்தில் ஒரு மாடு சாலையின் குறுக்கே வருவது தெரிந்தது.


‘என்ன இது? நடு ரோட்டுல இந்த மாடு இவ்வளவு நிதானமா வருதே?’


அப்போது வேன் ஒன்று எங்களது காரை முந்திக்கொண்டு சீறியதில் அதன் வேகத்தைக் கண்டு என் வயிற்றில் பயம் சுருண்டது. அந்த மாடு...! அவ்வண்டியிலிருந்து நூலிழையில் தப்பிய அந்த மாட்டின் முகம் எங்கள் வண்டிக்கு எதிரே.... நடக்கப்போகும் விபரீதம் அறியா அதன் கண்கள்... கடவுளே என்ன இது...? மாட்டின் முழு உருவமும் எங்கள் வண்டிக்கு முன் அடைத்துக்கொண்டு தெரிந்த அந்தக் கணத்தில்... “க்ட்டக்த்!!”  எல்லாருமே முன்பக்கமாக முட்டிக்கொண்டிருந்தோம்.


அதிர்ச்சியிலிருந்து முதலில் மீண்ட கணவர் “மாட்டைப் பாத்தப்பவே வேகத்தைக் குறைச்சிருக்கணும்” என்றார்.


“அது... அது அந்த வேன்ல மாட்டும்னு நினைச்சிட்டேன்” சோமுவின் சொற்கள் நடுக்கத்துடன் விழுந்தன.


“அதில் மாட்டியிருந்தா நிலமை இன்னும் மோசமாகியிருக்கும். நல்லவேளையா நம்ம பின்னாடி எந்த வண்டியும் வரலை” என்று கணவர் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டார். வாழ்க்கையில் முதல் முறையாக நேருக்கு நேர் விபத்தை சந்தித்த என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.


“இப்படிப் பொறுப்பில்லாம நடந்துக்குறீங்களே?”


கௌதமின் குரலால் நினைவிலிருந்து மீண்டேன். வேகத்துடன் தன்னுடைய ஒளியையும் இழந்திருந்த கார், முன்னே செல்லச் சிரமப்படுவது தெரிந்தது.


‘ராத்திரி நேரத்துப் பயணம் வேணாம்மான்னு அப்பா சொன்னதைக் கேட்டேனா? ஒரு நாள் லீவு வீணாயிடும்பான்னு எப்படில்லாம் சொல்லி அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது.’


“கொஞ்சம் தள்ளிப்போய் நிறுத்திடறேன்” நூலிழையில் மரணத்தை எட்டிவிட்டுத் திரும்பியதை சோமுவின் குரல் காட்டியது. முன்புறமிருந்து பொங்கும் புகையுடன் சம்பவம் நடந்த பகுதியிலிருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீட்டரைக் கடந்த பிறகு கார் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. எங்களை உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு, சோமுவும் கணவரும் இறங்கினர். இருவரது முகத்திலும் அதிர்ச்சி அதிகரிப்பதைக் காண முடிந்தது. சோமுவின் கண்களிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றதைப் பிற வாகனங்களின் உதவியால் பார்த்த பிறகும் உட்கார்ந்திருக்க முடியுமா?


காரின் முன்பக்கம் பள்ளமாகியிருக்க, ஹெட்லைட்டுகள் இருந்த இடத்தில் நெளிந்த வடிவங்களே இருந்தன. ஒடுங்கிப்போய்க் காணப்பட்ட சோமு “இங்கிருந்து உடனே கிளம்பிடணும்” என்றார்.


“போன வாரத்துல தெரிஞ்சவர் ஒருத்தரோட வண்டியில இப்படித்தான் ஒரு ஆட்டுக்குட்டி மாட்டிடுச்சி. வண்டிய நிறுத்திட்டு என்னாச்சின்னு பாக்குறதுக்குள்ள வந்த சனங்க என்ன ஏதுன்னு இல்லாம வண்டியோட அவரையும் போட்டுப் பொரட்டி எடுத்துட்டாங்க. வண்டி போன வெசனத்துல மனுசன் பித்துப் புடிச்சவராட்டம் ஆயிட்டார்” முன்பு யோசித்து யோசித்துப் பேசிய சோமு படபடவெனப் பொரிந்தார்.


இன்னும் கொஞ்சம் முன்னாடி போயிடலாமா என்ற அவரது கெஞ்சலுக்குச் செவிசாய்க்காமல் இருக்க முடியவில்லை. தெம்பை இழந்திருந்த வாகனம் மிகுந்த பிரயாசையுடன் நகர, “இப்படிப் போறது எவ்வளவு ஆபத்து தெரியுமா?” என்றான் கெளதம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பிரச்சினை செய்தால் இன்னும் மோசமாகிடும் என்றேன். நான் சொன்னதைப் பிள்ளைகள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. தூக்கம் இருந்த இடம் துடைத்து வைத்ததைப்போலாக உள்ளும் புறமும் இருந்த கனத்த இருளில் அடுத்து என்ன என்பதைப்பற்றி யோசிக்கக்கூட இயலா நிலையில், அங்கே சில நிமிடங்கள் மெளனம் ஆட்சிபுரிந்தது!


“அந்த மாட்டுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே?” என் மனத்தில் நிரடிக்கொண்டிருந்த கேள்வி சுனந்தாவிடமிருந்து வெளிப்பட்டது. கணப்பொழுது எதிரே தெரிந்த அந்த மாட்டின் கண்கள் என்னை இம்சித்தன.


காரில் ஏறியவுடன் ‘நல்லா ஸ்மூத்தா போகுதே’ என்று கணவரால் வர்ணிக்கப்பட்டிருந்த வாகனம் கருங்கல் ஜல்லிகளை அறைப்பதைப்போலச் சத்தம் கொடுத்தபடிச் சென்றது. நிறுத்திவிடலாமே என்று உள்ளுக்குள் எழுவதைச் சொல்லவும் முடியவில்லை. கிலியை விழுங்கிக்கொண்டு மேலும் ஒரு கிலோமீட்டரைக் கடந்தோம். காருக்கு இன்சூரன்ஸ் இருக்கிறதா என்ற கணவரது கேள்விக்கு, இருப்பதாக சோமுவின் பதில் வலியுடன் வந்தது. இன்சூரன்ஸ் இருந்தாலும் அந்தத் தொகை உடனே கிடைத்துவிடப் போகிறதா என்ன?


கார் நிறுத்தப்பட எங்களை இறங்க வேண்டாமெனச் சொல்லிவிட்டு கணவரும் சோமுவும் இறங்கினர்.


“போலீஸ், கேசுன்னு போனா அந்த டிரைவருக்கும் பிரச்சினையாகும்னு அவர் பயப்படுறார். அதனால் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மாயிருங்க” என்று பிள்ளைகளிடம் சொன்னேன்.


 “சோமு வேறு வண்டிக்கு ஏற்பாடு செய்யுறார் கிடைச்சிட்டா அதில் கிளம்பலாம். அதற்குள் வேறேதேனும் வண்டி கிடைச்சாலும் போயிடலாம் அதில் கொஞ்சம் ரிஸ்க்கும் இருக்கு” என்று என் கணவர் சொன்னார்.


சாலையோரத்தில் நின்றுகொண்டு காலியாய் ஏதேனும் வாகனம் வராதா எனப் பார்த்தார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் எவ்விதமான ஆரோக்கியமான தகவலும் கிடைக்காத நிலையிலேயே கழிந்தது. கெளதம் கைபேசியில் கண்ட டிராவல்சுக்கெல்லாம் போனடித்து ஓய்ந்தான். வேறு வண்டி கிடைக்குமென்ற நம்பிக்கைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குப் போக, ‘கிட்டத்தட்டப் பதினைஞ்சி நிமிஷத்துக்கு மேலா சோமுவையும் காணலையே’ என்பது தாமதமாகவே உறைத்தது. காலி வாகனத்தைத் தேடுவதை விட்டுவிட்டுக் கண்கள் சோமுவைத் தேடின. நடந்ததைப்பற்றி அப்பாவிடம் சொல்லாமலிருப்பது தவறோ?’ எனப் புதிதாக ஒரு குழப்பம் என்னைக் கெளவியது. மேலும் கொஞ்ச நேரம் கழித்து வந்த சோமு, அரைமணியில ஒரு வண்டி வந்துவிடும் என்று நம்பிக்கையளித்தார்.


‘இந்நேரத்துல இவர் எங்கே போயிட்டு வர்றார்? இவர் எப்படிப்பட்டவர்னு தெரியலையே?’ எந்நேரமும் குதறத் தயாராயிருந்த விலங்கைப்போல அச்சம் நெஞ்சு முழுக்க விரவியது.


“ச்... அந்த மாட்டுக்கு என்னாச்சின்னு தெரியலையே” சுனந்தா சொன்னாள்.


“இப்ப அங்கதான் போயிட்டு வந்தேன். ஓடிடுச்சிபோல அங்கே காணோம்...” என்ற சோமுவின் வார்த்தைகள் மனத்திற்கு இதமாய் இருந்தன.


நேரம் ஊர்ந்துகொண்டிருந்த சமயத்தில் போக்குவரத்துக் காவலர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் அங்கே வந்துகொண்டிருந்தனர். “ஐயோ... இப்ப இவங்க வேறவா? சார் நான் அவங்களைச் சமாளிச்சுக்கிறேன்... நீங்க எதுவும் சொல்லாதீங்க... ப்ளீஸ்... தம்பி எதுவும் பேசிடாதப்பா...” சோமுவின் குரல்வளையை யாரோ இறுகப் பிடித்ததைப்போல வார்த்தைகள் மிகவும் மென்மையாய்க் கசிந்தன.


அதிகாரத்தின் நெடி அங்குச் சூழ, டார்ச்சினால் இருளைத் துரத்திய காவலர் “என்னாச்சு?” என்றார்.


“சாரி சார்... நின்னுக்கிட்டிருந்த லாரிமேலத் தெரியாமக் குத்திட்டேன்... என்னோட தப்புதான்.”


“வேறொண்ணும் பிரச்சினையில்லையே...?” கேட்டுக்கொண்டே வண்டியிலிருந்த எங்களின்மீது அவர்களது பார்வை விழுந்தது.


“இல்லை சார், ஃபிரண்டுகிட்டே வண்டிக்குச் சொல்லியிருக்கேன். இப்ப வந்துடும்.”


“சரி, இங்க நிக்கவேணாம். சீக்கிரம் கிளம்பிடுங்க.”


காவலதிகாரிகள் போனவுடன் சோமுவின் பெருமூச்சில் வண்டி சூடானது. “லேடீஸ் இருக்கவும்தான் பிரச்சினை இல்லாமப் போயிடுச்சி... இல்லைன்னா இன்னும் குடைச்சல் தந்திருப்பாங்க” என்று சொல்லிவிட்டு முழுப் பாட்டில் தண்ணீரை விழுங்கினார். ரகசியத்தைத் தன்னுள் ஒளித்து வைத்திருந்த வாகனம் அமைதியாய் நின்றது. இப்போதே வரட்டுமா என்று கேட்பதைப்போல மழை மிரட்டியது.


சாலையில் வரும் வாகனங்கள் ஒவ்வொன்றும் சோமு சொன்ன வண்டியாக இருக்கக்கூடாதா என்ற எதிர்பார்ப்பைக் கூட்டின. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவார் என்னும் பதிலையே அவர் ரொம்ப நேரமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். இதுவரை பொறுத்திருந்ததே பெரிது என்பதைப்போலத் தூறல் மண்ணை வந்தடைந்தது. காற்றும் அதிகரிக்க, நிலைமை மோசமாவதையும் அதிலிருந்து மீள முடியா தவிப்பும் சேர்ந்துகொண்டதில் பயம் என் பாதத்தின் நுனிவரை வழிந்தது. வேறு வழியின்றி, வழியில வண்டி ரிப்பேரானதால் வீட்டுக்கு வர நேரமாகும் என்று அப்பாவிடம் சொன்னேன்.  


“வேற ஒண்ணும் பிரச்சினை இல்லையேம்மா?” எனக் கலவரத்துடன் கேட்ட அப்பாவிடம், “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. வீட்டுக்கு வர்றதுக்கு கூடக் கொஞ்ச நேரமாகும் அவ்வளவுதான்” என்று சமாதானப்படுத்தினேன்.


பிள்ளைகள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். “தாத்தா தனியா இருக்காங்களே” என்றேன். பிள்ளைகளின் அங்கமாயிருக்கும் கைபேசி அவர்களிடமிருந்து பிரிந்திருந்தது.


ஒருவழியாக சோமு சொல்லியிருந்த வண்டி குரல் கொடுத்துக்கொண்டே வந்தது. “என்னாச்சி?” என அந்த வண்டியின் டிரைவர் கேட்டுக்கொண்டே வண்டியிலிருந்து கயிற்றை எடுத்தார்.


‘இதைக்கொண்டு காரை இழுப்பதா?’


“இந்தக் கயிறுதான் வீட்ல இருந்திச்சிப்பா.”


“கயிறு நல்லா நீளமாதான் இருக்கு. அப்படியே முறுக்கிடலாம்”, என்று கணவர் சொன்னார். நிமிடத்தில் கணவரும் புதிய டிரைவரும் சேர்ந்து, அந்த இழைக்கயிற்றை தாம்புக் கயிறாய் ஆக்கினர்.


“செங்கல்பட்டுவரை என்னைக் கொண்டு வந்து விட்டுட்டு கிளம்பிடுங்கண்ணே” என்று சோமு சொன்னார்.


ஊனமுற்றிருந்த வாகனம் கயிற்றில் கைகோர்த்து நகரத் தயாரானது. “ரெண்டு பேர் இந்த வண்டியிலும், ரெண்டு பேர் அந்த வண்டியிலுமா வாங்க” எனப் புதிய டிரைவர் சொன்னார்.


வெறுப்பிலிருந்து வெளியே வந்திருந்த பிள்ளைகள் அடுத்து என்ன என்கிற ஆர்வத்தில் இருந்தனர். கணவரும் மகளும் புதிதாக வந்த வண்டியில் ஏறிக்கொண்டனர். கம்பளியைப் போர்த்தியதைப்போல இருள் கவிந்திருந்த சாலையில், கையாலாகாத வாகனம் முன்னதன் அதிகாரத்துக்கு அடிபணிந்தது.


“ஐயோ... இவ்ளோ வேகமா போறாரே...!” என்ற சோமுவின் கலக்கம் என்னையும் தொற்றியது.


‘மெதுவாவே போங்கண்ணே என்ற சோமுவின் வார்த்தைகளை அந்த டிரைவர் மறந்துட்டாரா என்ன?’


“மேடம்.... மழை பேஞ்ச ரோடா இருக்கு... அந்த வண்டியக் கொஞ்சம் மெதுவா போகச் சொல்லுங்க. என்னால இப்பப் பேச முடியாது.”


கைபேசி  எங்கேயென கெளதம் அப்போதுதான் தேடினான். நடந்த களேபரத்தில் கீழே விழுந்த கைபேசியை சுனந்தாதான் எடுத்து தன் கைப்பையில் வைத்தாள். அவளுடனேயே அது போயிடுச்சே! முன்னதன் வேகத்திற்கு எங்களது வண்டி ஈடுகொடுக்கச் சிரமப்படுவது நன்றாகத் தெரிந்தது.


‘கடவுளே... மறுபடி என்னாகப் போகுதோ? இந்தக் குளிரிலும் வியர்க்குமா?’


சோமுவின் போனை கெளதம் வாங்கினான். “அங்கிள் அவர் பேரை எப்படி சேவ் பண்ணியிருக்கீங்க?”


“சேவ் பண்ணல. இப்போ பழக்கமானவர்தான். என்ன இந்த மனுசன்...? இப்படிப் பண்றாரு...?”


“இவர்கிட்டதான் கடைசியா பேசினீங்களா?”


“ம்... இல்லயில்ல... அதுக்கப்புறம் வண்டி கிடைச்சிடுச்சின்னு இன்னும் ரெண்டு பேருகிட்டச் சொன்னேனே...!”


சோமுவிடம் நொடிக்கு நொடி பயம் உயர்ந்தது. அந்த டிரைவரின் எண்ணை மனத்திற்குள் கொண்டு வருவதற்கு அவர் திண்டாடுவது புரிந்தது. நிலைமையைப் பார்க்கப் பார்க்க என்னாகுமோ என எனக்கு நடுக்கம் கூடியது. சோமு கொடுத்த விவரத்தின் அடிப்படையில் கௌதம் போனடித்தான். அந்த டிரைவரின் எண்ணாக அது இருக்க வேண்டுமே எனக் கடவுளைத் துணைக்கு அழைத்தேன்.


“சொல்லுப்பா...”


போன் ஸ்பீக்கரில் போட்டிருக்க சோமு, “அண்ணே... கொஞ்சம் மெதுவா போங்க...” என்று சொல்லி முடித்தார். ஒருவழியாக செங்கல்பட்டை அடைந்தோம். சோமுவுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாயும் வீட்டுக்கு வந்தபின் மீதியைக் கொடுத்துக்கலாமென்றும் அப்பா சொல்லியிருந்தார். கணவர் பணத்தை கொடுக்கவும் சோமு ஒருவிதத் தயக்கத்துடனே வாங்கினார். அவரை அங்கே விட்டுவிட்டு, எங்களது பயணம் தொடர்ந்தது.


சாலை மருங்கைப் பெருமளவில் அடைத்துக்கொண்டு நின்ற லாரிகள், பாயத் தயாராயிருக்கும் கருஞ்சிறுத்தைகளைப்போலவே எனக்குத் தெரிந்தன. கணவரும் பிள்ளைகளும் நித்திராதேவியின் ஆதிக்கத்தின் கீழிருந்தனர். வண்டி எதன் மீதோ போய் முட்டிக்கொள்ளுமோ என்ற எண்ணம் என்னை அலைக்கழித்தது. “நேரமானால் பரவாயில்லை மெதுவாவே போங்க” என்று அந்த டிரைவரிடம் சொல்லிச்சொல்லி ஓய்ந்தேன். சொல்லும்போது சரி என்பவர், சற்றுப் பொறுத்து வேகத்தைக் கூட்டினார்.  ‘இதென்ன...? வண்டி எங்கே போவுது? இந்த நேரத்தில் இவர் வேற தூங்குறாரே...!’


வேறு வழியின்றி, “இது கடலூருக்குப்போற வழி மாதிரி தெரியலையே...” என்றேன்.


“எங்கிட்ட பாண்டிச்சேரி பர்மிட் இல்லாததால இப்படி வர வேண்டியதாயிடுச்சி. போயிடலாம்மா ஒண்ணும் கவலைப்படாதீங்க.”


‘இந்த ஆள் எங்கே போறார்னு தெரியலையே...? ஆமாம்... நடுவில் கொஞ்சநேரம் சோமு எங்கோ போயிருந்தாரே!’ பயம் ஆட்டுவிக்க, கணவரை எழுப்பினேன்.


“வீட்டுக்கு வந்துட்டோமா?”


நான் பதிலளிக்கு முன், “இன்னும் இல்ல சார்... வேற வழியா வர்றதால பயப்படுறாங்க...” டிரைவர் சிரித்துக்கொண்டே சொல்ல எனக்கு என்னவோபோலானது.  ஆதவன் அசமந்தமாய் எழுந்த பின்னே கடலூருக்குள் நுழைந்தோம். மதுரமான மார்கழியில் வாசல்கள் வண்ணக் கோலங்களின் ஆக்கிரமிப்பில் மிளிர்ந்தன. எங்களைக் கண்டவுடன் அப்பா நிம்மதியானார். “என்னாச்சு மாப்பிள்ள? ஏம்மா இவ்ளோ நேரம்?”


“முதல்ல என்னை அனுப்புங்க.”


பணத்தை எடுத்து நீட்ட, அதைப் பிடுங்கிக்கொண்டு, “இதோ வந்துட்டே இருக்கேன்” போனில் சொல்லிக்கொண்டே டிரைவர் வண்டியைக் கிளப்பினார்.


‘அடுத்த சவாரிக்காகத்தான் அவ்வளவு அவசரமோ?’


“கார் அவ்ளோ வேகத்துல மோதிச்சி. அப்புறம் எப்படிங்க அந்த மாட்டால அங்கிருந்து ஓடியிருக்க முடியும்?” என் மனத்தில் அரித்துக்கொண்டிருந்த கேள்வியைக் கணவரிடம் கேட்டேன்.


“அது... அப்படித்தான். இத்தோட இந்தப் பேச்ச விட்டுடு.”


திருப்பரங்குன்றத்தை தரிசித்துவிட்டு வரும்போது, “அவ்ளோ தூரமிருந்து வந்தும் சாமிய ஒழுங்கா கும்பிட முடியலை” என்று கணவர் சொன்னார்.


“ஏங்க?”


“சாமி கும்பிடுறதுக்கு முன்ன எதேச்சையா எதிர்ப்புறமா திரும்பினேனா... சொன்னா நம்பமாட்டே... அந்த நந்தியோட முகம் அப்படியே அன்னைக்கு ஆக்சிடெண்ட்ல சிக்குன மாட்டோட முகமா தெரிஞ்சது. அதுவும் அந்தக் கண்ணு... நான் அப்படியே வெலவெலத்துப் போயிட்டேன்” பதற்றம் குறையாமலும் அதே சமயம் மற்றவர்களுக்குக் கேட்காத வண்ணம் சொன்னார்.


‘கடவுளே.... இவருக்குமா?’ என்னுடல் நடுங்கியது!


மணிமாலா மதியழகன்



Post a Comment

0 Comments