தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | short stories in tamil

இடம் பெயர்வு





துவக்குச் சூட்டுச் சத்தம் எங்கேயோ கேட்கத் தொடங்கியபோதே எல்லோரும் கிளம்பத் தொடங்கிவிட்டார்கள். இயக்கம் வந்து போகச் சொல்லும் வரை நாங்கள் கிளம்பவில்லை. அந்த நேரத்தில்தான் அருணகிரியர் குடும்பமும் நாங்களும் ஒன்றாக இணைந்தோம். வீதியில் ஒருவர்கூட இல்லை. அந்த நேரத்தில் பயணமே சந்தோசம் தந்தது. ஆனால் அம்மாவிடமிருந்துதான் அடிக்கடி திட்டு வாங்கவேண்டியிருந்தது.

மீரா அக்காவின் சிபாரிசுடன் ஒரு வீட்டில் இரவு தங்கினோம். அதாவது வீட்டுக்கு வெளியில். விடிந்தவுடன் கிளம்பிப் போய்விடவேண்டும் என்ற நிபந்தனையுடன். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. வீடு முழுவதும் ஆட்கள். வெளியிலும் ஆட்கள். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடினார்கள். கிழவிகள் காலை நீட்டி அமர்ந்திருக்க> குமரிகள் உடலை பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் கிடைத்த இடத்தில் சாய்ந்துகொண்டார்கள். அப்போதும் ஆண்கள் குழுக்குழுவாக அமர்ந்து தங்களுடைய அரசியலறிவைப் பட்டைதீட்டிக்கொண்டிருந்தார்கள். 

இரவில் சாப்பாடு இல்லை.

“தேத்தண்ணியைக் குடிச்சிட்டுக் கிடவுங்கோ” என்றாள் அம்மா.

பெண்களுக்கு மட்டும் உள்ளே இடம் கிடைத்தது. ஆண்களுக்குப் பாய்கூட இல்லை. அப்பாவின் பழைய சறத்தை விரித்துவிட்டுப் படுத்தேன். மேலே மரக்கிளைதான் கூரை. அருகில் மகிந்தன் படுத்திருந்தான். (அருணகிரியரின் மகன்) கிளைகளின் இடைவெளியால் தெரிந்த வானத்தைப் பார்த்தேன். உண்மையிலேயே மனம் சந்தோசமாக உணர்ந்தது. அது சந்தோசமா துயரமா? எல்லையில்லாத வானத்துக்குக் கீழே நானும் ஒரு துறவியைப் போலப் படுத்திருக்கிறேன். 

மனது முட்டி முட்டி அழுகையாக வந்து பொங்கியது. விசும்பவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. இருட்டானதால் மகிந்தன் அறிய வாய்ப்பில்லை. இருட்டு எவ்வளவு வசதி. எதையோ ஒன்றை இழந்தது போலோர் உணர்வு. என்னிடமிருந்து பிரிந்து சென்ற அதனை இனி மீட்கவே முடியாது. என்ன அது? எல்லோரும் இழப்பார்களா அதனை? 

யாரோ வானொலியைப் போட்டார்கள். மின்கலம் சரியான தட்டுப்பாடு. எங்களிடமும் ஒன்று இருந்தது. அம்மாதான் வைத்திருக்கவேண்டும். மின்கலத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உறிஞ்சுவோம். இறுதி எல்லையில் வெயிலில் காயவைப்போம். அதற்கடுத்து கதவிடுக்கில் வைத்து நசிப்போம். ஒரு மின்கலம் எங்களிடம் வந்தால் படுகிற பாடு. நடுவிலிருக்கும் உருளைக் காபன் துண்டு உடையாமல் நசிக்க வேண்டும். உடைந்தால் மின்கலம் படுத்துவிடும். 

“வண்ணம் கொண்ட வெண்ணிலவே. வானம் விட்டு வாராயோ”

எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. யார் இந்தப் புண்ணிய ஆத்மா? இந்த வானொலிக்குச் சொந்தக்காரன் எங்கிருந்தாலும் நிறைவாக வாழவேண்டும். சொந்த வீட்டிலிருந்து இடம்பெயராத வரம் கிடைக்கவேண்டும்.

அகல்யாவின் ஞாபகம் வந்தது. இப்போது எங்கே இருக்கிறாளோ தெரியாது. என்னையும் அவளையும் வைத்து உருவான வதந்திகள். அதற்குப் பூச்சூடிப் பொட்டு வைத்து அழகு பார்த்த சக மாணவர்கள். தங்கமணி அக்காவிடம் படிக்க வந்தவர்கள். 

அடுத்த பாடல்:

“நீல வான ஓடையில் நீந்துகிற வெண்ணிலா”

பாடல்கள் ஒவ்வொன்றும் நினைவுப் பெட்டகங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் வெவ்வேறு ஞாபகங்களை எழுப்பும். சொல்லவே முடியாத ஏதோ ஒன்று இந்தப் பாடலுக்குள் ஒளிந்திருக்கிறது. அது வரைக்கும் இந்தப் பாடல் சலிக்காது. இந்தப்பாடலை முதன்முதலில் கேட்டபோதே முன்பே கேட்ட உணர்வு தோன்றியது ஏன்? என் முன்ஜென்ம ஞாபகங்களா? நான் முன்பே அறிந்த ஒன்றை இது மெல்லத் தொட்டுச் செல்கிறதா? விவரிக்கவே முடியாத பரிதவிப்பால் என் மனம் துவள்வது ஏன்? இந்தப் பாடல் என்னை எங்கேயோ அழைத்துச்செல்கிறது. முற்றிலும் தனியனாக நிற்கிறேன். மேலே வானம். கீழே பூமி. நடுவில் நான் மட்டும். மூச்சுத் திணற வைக்கும் எண்ணங்கள்.

விடிந்தால் எங்கே போவதென்று எவருக்கும் தெரியாது. அம்மா என்ன நினைத்துக்கொண்டு படுத்திருப்பாள்? நான் திடீரென்று பெரியவனாகிவிட்டேனோ? பெண்களின் அருகாமை என்னை ஏன் துடிதுடிக்கச் செய்கிறது? அவர்களின் நளின விரல்கள்> முன்சரியும் கூந்தல்> விழி தொடும் எல்லைகள்> பாவாடையைத் துடைத்தபடி அமரும் அழகு> விழி நோக்குகையில் ஏற்படும் மெல்லிய பதைப்பு> மூங்கில் கரங்கள்> 

தோள் உரச அருகில் அமரும் அகல்யா. பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று என்னைத் தொட்டு மீளும் விழிகள்.

தொடையைக் கிள்ளினால்> “என்ன பழக்கம்?” என்று கோபித்துக்கொள்ளும் பாங்கு.

இன்னொரு தடவை கிள்ளாயோ என்ற ஏக்கம்.

“கண்ணைப் பொத்தி கிண்ணைப் பொத்தி இவர் யார்?”

“நிசா”

என் இடதுகை அகல்யாவின் கண்களைப் பொத்தியிருக்கும். வலது கையால் அவளது வலது கையைத் தூக்குவேன். தவறாகவே சொல்வாள்.

“விசராயிருக்கு” என்றபடி என் முதுகைக் குத்துவாள்.

“ஏன்?”

“நாளைக்குப் போகவேணும்”

“அடுத்த லீவுக்கு வரலாம்தானே?”

“இன்னும் மூண்டு மாசம் இருக்கே?”

“அது டப்பெண்டு போவிடும்”

“உமக்கு விசராயில்லையா?”

“ம்”

“அதை ஏன் யோசிச்சுப் போட்டுச் சொல்லுறீர்?”

இப்போது என்னைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பாளோ?

அம்மா முகத்தில் தண்ணீர் தெளித்தபோதுதான் விழிப்பு வந்தது.

“கெதியாய்ப் பல்லை மினுக்கு”

“குளிக்கேலாதோ?”

“குளிப்பொண்டுதான் இல்லாத குறைச்சல்”

வெளியே வீதிக்கு வந்து நடந்தோம். அப்பா சைக்கிளை உருட்டினார். விதம் விதமான பொட்டலங்கள்> பானைகள் பிதுங்கும் உரப்பைகள்.

“எங்கே போறது?” என்று கேட்டார் அப்பா.

“இப்பிடியே சுடலைக்குப் போனாலும் நல்லது” என்றாள் அம்மா.

“என்ன பேச்சுப் பேசிறியள்? எல்லாம் ஆண்டவன் கைவிடமாட்டான்” என்றார் கிரியர். குடும்பத்துக்கு ஏழுப்படி பதின்நான்கு உருப்படிகள். முச்சந்தி வந்ததும் நின்றோம்.

அருணகிரியர் ஒரு கிழவரை விசாரித்தார்:

“ஐயா இது எந்த இடம்?”

கிழவர் துண்டை எடுத்து கமக்கட்டைத் துடைத்தபடி> “கைதடி” என்றார்.

“ஆ”

“எங்கே போறியள்?”

“அதுதான் தெரியயில்லை”

“சொந்த பந்தங்கள் இல்லையோ?”

“சொந்த பந்தத்துக்கே போக இடமில்லை”

“எங்கேயிருந்து வாறியள்?”

“அதைச் சொல்லப் போனா ரண்டு நாள் செல்லும். சரி. நடப்போம். வாறோமையா”

“நில்லுங்கோ. உவன் முருகனைக் கூட்டியாறேன். டேய்”

“……”

“கூகூகூகூ”

“என்ன?”

“இஞ்சை வாடா. அங்கை இருந்து பறையாமல்”

முருகன் சண்டிக்கட்டோடு வந்தான். இடுப்பக்கு மேலே உடையில்லை. 

“இஞ்சே இவையள் இருக்க இடமில்லாமல் இருக்கினம். எங்கன்ரை வைரவ கோயிலைத் திறந்துவிடு”

“வாங்கோ” என்றான் முருகன்.

வைரவ கோவில் பனங் காட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அம்மா உள்ளே வராமல் வெளியில் அமர்ந்தாள். நாங்கள் மூட்டைகளை இறக்கினோம்.

“ஏன்ரா பொத்துப்பொத்தெண்டு போடுறாய்?  நான் சொன்னனானல்லோ ஆண்டவன் விடமாட்டான் எண்டு” என்றார் கிரியர்.

கிழவர்> “நீங்கள் எவ்வளவு நாளெண்டாலும் இஞ்சை தங்கலாம்” என்றபடி வந்தார்.

“மெத்தப் பெரிய உபகாரம்” என்றார் கிரியர். 

“சமையலுக்குச் சட்டி பானையள் ஏதேன் தேவையோ?”

“ஒண்டும் வேண்டாம். கேட்டதே சந்தோசம்”

“அரிசி சாமான் மரக்கறி கொண்டரச் சொன்னனான். காலமைக்கும் சாப்பாடு வருகுது”

“எதுக்கு? இதே பெரிய விசயம்”

“பரவாயில்லை. சொன்னாச்சு இப்ப வருகுது”

“உங்களைக் கண்டதே முற்பிறப்பிலை செய்த புண்ணியந்தான்”

“பிள்ளை ஏன் வெளியிலை இருக்கிறா?”

 “அவா வருவா”

யாரோ ஒருவன் சைக்கிளில் வந்தான். அம்மாவிடம் வந்து சேட்டுப் பொக்கற்றிலிருந்து ஐந்நூறு ரூபாத்தாளை எடுத்து நீட்டினான்.

“செலவுக்கு வைச்சுக்கொள்ளுங்கோ”

“இல்லை. பரவாயில்லை. எங்களிட்டை இருக்கு” என்றாள் அம்மா. அவன் உதவி ஏற்றுக்கொள்ளப்படாத சங்கடத்துடன் திரும்பிச் சென்றான்.

ஓடி வந்தபோது வீட்டோடு விட்டுவிட்டு வந்த பொருட்களை நினைத்து அம்மா கவலைப்பட்டாள். தைலா> கருங்காலிக் கட்டில்> அலுமாரி> பித்தளை வெற்றிலைத் தட்டு> அம்மி> குளவி> ஆட்டுக்கல்> கல்லுரல்> மரஉரல்> தைலாவுக்குள்ளிருந்த ஓலைச்சுவடிக் கட்டு> றங்குப்பெட்டி> மாபிளால் ஆன ஊறுகாய்ச் சாடிகள் இரண்டு> கொத்தளக்கும் முகவை> இன்னும் ஏராளம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகக் கைமாறப்பட்டது. நிரந்தரமாக ஓடுவோம் என்று யார் நினைத்தார்? 

நாய் சாப்பாட்டுக்கு என்ன செய்யுமோ தெரியாது. புறப்படும்போது கொஞ்சதூரம் பின்னால் வந்தது. அம்மாதான் எறிந்து கலைத்தாள்.

“எங்களுக்கே வழியில்லை. அதிலை உன்னைக்கொண்டு போய் என்ன செய்யிறது?”

ஆடு> மாடுகளை அவிழ்த்துவிட்டுத்தான் வந்தோம். எங்கெங்கு அலையுமோ? தண்ணீரைத் தேடிக் குடிக்கத் தெரியாது. கள்வர்கள் யாராவது கொண்டு போயிருக்கலாம். அவற்றில் ஒன்று பிள்ளைத்தாச்சி மாடு. அம்மா அடிக்கடி சொல்லிப் புலம்புவாள். 

‘வாற பறுவத்துக்குக் கண்டு போடும் எண்டுதான் நினைச்சனாங்கள். இப்பிடிப் பெண்டிலைத் திண்டிட்டுக் குழறுவார் செய்வினம் எண்டு ஆர் கண்டது?”

புலம்பல் ஓயாது. ஒருநாளுக்கு ஒருதடவையாவது பாடிவிடுவாள். அப்பா தன்னுடைய பாட்டுக்குப் பேசாமல் இருப்பார்.

“எனக்கு வந்ததும் அது. வாய்ச்சதும் அது” என்பாள் அம்மா.

அருகிலிருந்த பனைமரக்காடுதான் மலசலகூடம். காடு என்று சொல்வது மிகை. பனந்தோட்டம் என்று சொல்வதே சரி. எப்படி இருந்தாலும் இருட்டோடு இருட்டாகப் போய் வந்துவிடுவதுதான் நல்லது. 

“இப்பிடி எத்தினை நாளைக்கு நாங்களும் இப்பிடியே ஓடிக்கொண்டிருக்கிறது. வயித்துப்பாட்டுக்கும் வழியில்லை” என்றாள் அம்மா.

“அதுக்குத்தான் சொல்லுறேன். வன்னிக்குப் போறதுதான் நல்லது. அங்கையெண்டா தோட்டமும் செய்யலாம். இனி பிள்ளையளின்ரை படிப்பையுமல்லே பாக்கவேணும்” 


கிரியரின் தம்பி வன்னியில் இருந்தார். கல்வீடு கட்டி நன்றாக வாழ்வதாகவும்> எங்களுக்கும் வீடு கட்டித் தோட்டம் செய்ய இடம் பார்த்துத் தருவதாகவும் கிரியர் சொன்னார்.

 “இவையளும் உதவி செய்யாட்டி நடுறோட்டிலைதான் நிண்டிருப்போம்”

நாங்கள் வந்த மறுநாள் கோவிலில் பொங்கினார்கள். மணி அடிக்கத் தொடங்கியதுமே சிறுவர்கள் குழுமிவிட்டார்கள். விபூதி> சந்தனம் கொடுத்து முடித்ததுமே கிழவர் சிறுவர்களை விரட்டினார்.

“இண்டைக்குப் புக்கை வாழைப்பழம் ஒண்டுமில்லை. எல்லாம் இடம்பெயந்து வந்தாக்களுக்குத்தான்”

சிறுவர்கள் மறுபேச்சுப் பேசாமல் தொங்கிய முகத்துடன் கிளம்பிவிட்டார்கள். கிரியர்தான் ஓடிச் சென்று கூப்பிட்டு மறித்தார். சிறுவர்கள் கிழவரைப் பார்த்துத் தயங்கி மெதுவாக நடந்து வந்தார்கள். யார் முன்னே செல்வதென்ற தவிப்பில் ஒருவர் பின் ஒருவராக இடம் மாறினார்கள்.

“என்னையா நீங்கள்? முதல்லை சின்னாக்களுக்குக் குடுங்கோ. நாங்கள் சாப்பிடாமலும் இருப்போம். எங்கன்ரை பிள்ளையளும் வந்து நில்லுங்கோ”

ஆளுக்கொரு வாழையிலைத் துண்டில் சுடச்சுடப் புக்கை. வாழையிலைத் தாண்டி வந்த சூட்டில் கைகளை மாற்றிக்கொண்டார்கள். அவசரப்பட்டு விரலை உள்ளே செலுத்தியவர்கள் சூடு தாங்காமல் ஊதிக்கொண்டார்கள். சூட்டோடு வாய்க்குள் வைத்தவர்களின் நாக்குகள் நடனமாடின. வீசியெறிந்த இலைகளில் நாய்களுக்கென்று எதுவுமில்லை. ஆனாலும் அவை வாலாட்டுவதை நிறுத்தவில்லை. கால் நகங்கள் வாழையிலையைக் கிழித்து ஏமாந்தன.

இரவில் உள்ளே படுக்க இடம் மட்டுமட்டுத்தான். நானும்> மோகனும் அருகருகே. அம்மா> “அப்பனே வைரவா” என்றபடி சரிவாள். நிசாவுக்கு நல்வாய்ப்பு. அம்மாவுக்கருகில்> போர்வையைப் பங்கிட்டபடி சுருண்டுகொள்வாள். இரவில் படுத்தபிறகும் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். கிரியர் பேசிக்கொண்டிருக்கும்போதே அப்பாவின் குறட்டையொலி கேட்கும். “அவர் இந்த உலகத்திலை இல்லை” என்பாள் அம்மா. மழைக்குக் குறைவில்லை. தூவானம் இலேசாகப் படும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

மெல்லிய தூறல் ஏன் அகல்யாவை ஞாபகப்படுத்துகிறது? தொடாமலே தொடும் தூறலின் ஈரலிப்பு. மயிர்க்கால்கள் ஈட்டி போல் குத்தி நிற்கும். யாரோ என்னிடம் இரகசியம் சொல்வார்கள். மெல்லிய குளிர் காற்றில் எனக்கான சேதி ஒளிந்திருக்கிறது. எவ்வளவு கேட்டும் என்ன என்பதில் தெளிவில்லை. உறக்கம் நெருங்கும் கணத்தின் மயக்கம் போல தெளிவற்ற ஒன்று. என்னைத் தொடரும் தெய்வங்களின் காலடிகள். என்றோ ஒருநாள் மீண்டும் அவளைப் பார்ப்பேன்; என்ற எண்ணம் தரும் பரவசம். இந்த துயரம் இனியது. அது வரப்போகும் மகிழ்ச்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. வால்கட்டையைப் பிடுங்கியது போல் பெருமூச்சொன்று எழும்.

கோவில் என்பதால் மச்சம் மாமிசம் கிடையாது. அதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட எவருமில்லை. எங்களது வயிறு காயாமல்தான் இருந்தது. கிழவர் நல்ல உதவி. ஒவ்வொரு நாளும் இரண்டு தடவையாவது வந்துவிடுவார். நான் காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தால் அம்மா முறைப்பாள். நான் மடக்கிக் கொள்வேன். கிழவர் கிரியரோடு கொஞ்சம் பேசுவார். முருகன் விறகு கொண்டு வந்து போடுவான். கிழவர் கிளம்பும்போது> “உலவப்படாமல் என்னெண்டாலும் கேளுங்கோ” என்றபடி கிளம்புவார்.

எங்களது விளையாட்டுக்கும் குறைவில்லை. அண்ணனைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஒளித்துப் பிடித்து விளையாடுவதற்கு ஏற்ற இடம். கெந்தித்தொட்டு> எட்டுப்பெட்டி> குழைகுழையா முந்திரிக்காய்> கிள்ளுப்பிறாண்டி> டாக்டோக்டீக் என்று வகைதொகையாக விளையாடினோம். ஓரம்மா கடைக்குப் போனாளையும் விடவில்லை. அவ்வளவு சுவாரசியமான விளையாட்டென்று சொல்லமுடியாது. இருந்தாலும் போகாத பொழுதை என்ன செய்வது?

“ஓரம்மா கடைக்குப் போனாள். அங்கே ஒரு டசின் பென்சில் வாங்கி வந்தாள். அதன் நிறம் என்ன?”

“மஞ்சள்”

இனியும் தாங்க முடியாது என்ற கட்டத்தில் கிளம்பினோம். ஒரு கூட்டமே திரண்டு வழியனுப்ப வந்தது. 

“பிரச்சினை எல்லாம் தீந்தா இஞ்சால் பக்கம் ஒருக்கா எட்டிப் பாருங்கோ” என்றார் கிழவர்.

“இனி எங்கை? உயிரோடை இருக்கிறோமோ இல்லையோ? நீங்கள் தருணத்திலை செய்ததுகளை மறக்கேலாது”

“ஒருத்தருக்கொருத்தர் செய்யிறதுதானே”

“ஆண்டவன் புண்ணியத்திலை ஒரு நாளைக்குத் திரும்பி வருவோம்” என்றார் கிரியர்.

அம்மாவால் கண்ணீரை மறைக்க முடியவில்லை. 

“அழாதை பிள்ளை. எல்லாம் நல்லபடியாய் நடக்கும். தப்பி ஒட்டி இருக்கிறதே பெரிய விசயம்”

கிளம்ப முன் கோவிலை விழுந்து கும்பிட்டோம். 

கிழவர்> “சந்தோசமாய்ப் போவிட்டு வாங்கோ” என்றார்.

…………………………………………………………………………………………………………………………...

“இந்தக் கோயிலைப் பாக்கிறதுக்கா இவ்வளவு தூரம் வந்தனாங்கள்?” என்று கேட்டாள் அகல்யா. அதே வைரவர் கோவில். கட்டிட அமைப்பு எதுவும் மாறவில்லை. திருநீறை எடுத்துப் பூசினேன். தென்புறத்தில் மிகப் பெரிய வேப்பமரம். அதன் நிழலைத் தொடும்போதே இதமான குளிர் உடலைத் தழுவியது. வேம்படி வைரவர் என்றுதான் அழைப்பார்கள் என்று கேள்விப்பட்ட ஞாபகம். இருபத்தைந்து வருடங்கள். மீண்டும் மீண்டும் பழைய முகங்களை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். ஒரு முகமும் மனதில் திரளவில்லை. ஆனால் நேரில் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்வேன். 

“என்ன அமைதியாயிட்டிங்கள்?” என்று அகல்யா மீண்டும் கிண்டினாள். பதில் சொல்லத் தோன்றவில்லை.

“என்ன பக்திப் பரவசமா?” நான் அகல்யாவைப் பார்த்துப் புன்னகைத்தேன். கோயிலுக்கு அருகிலிருந்த பனங்காட்டைக் காணவில்லை. ஒரு பனை கூட இல்லை. முன்னிருந்த நிலத்தில் புகையிலை நட்டிருந்தார்கள். இடுப்பளவு உயரத்தில் முற்றிய இலைகளுடன் வெட்டுவதற்குத் தயாராக நின்றிருந்தது தோட்டம். தோட்டத்திற்கு நடுவில் ஒருவன் மண்வெட்டியோடு நின்றிருந்தான். நான் கிழவரைப் பற்றி அவனிடம் விசாரிக்கப் போனேன். புதியவருக்குக் கொடுக்கும் மரியாதையைத் தவிர அவனிடமிருந்த உருப்படியான தகவல்கள் எதையும் பெற முடியவில்லை. அருகிலிருந்த வீடுகளுக்குச் சென்று விசாரித்தேன். 

“சிவலிங்கம் எண்டு பேர். உந்த வைரவ கோயிலுக்குப் பொறுப்பாயிருந்தவர். தெரியுமா?”

எவருமே கிழவரை அறிந்திருக்கவில்லை. ஒருவர் கூடவா இல்லை?  ஒருவேளை இறந்திருப்பாரா? மகன் வெளிநாட்டுக்குப் போயிருக்கலாம். அல்லது காணாமல் போயிருக்கலாம். எவ்வளவோ சாத்தியங்கள்? 

திரும்பி வைரவர் கோவிலைப் பார்த்தேன். ஏக்கப் பெருமூச்சொன்று எழுந்தது. சிறு வயது ஞாபகங்கள். இனிய துயரம். மீளமுடியாத காலங்கள். அகல்யா கிளம்பலாம் என்று நச்சரித்துக்கொண்டிருந்தாள். வேறு வழியில்லாமல் மோட்டார் சைக்கிளை இயக்கினேன். அகல்யா தொற்றிக்கொண்டாள். வழியில் அகல்யா முதுகைச் சுரண்டினாள்.

“அப்பா?”

“என்னம்மா?”

“ஐஸ்கிறீம் வாங்கித் தாறிங்களாப்பா?” என்று கேட்டாள் என் செல்ல மகள் அகல்யா.


தங்கராசா செல்வகுமார்

நாவற்கிணற்றடி,



Post a Comment

0 Comments