தமிழ் சிறுகதைகள் | tamil short stories about life

 அருந்தவப்புதல்வன்         

 



 

          “சின்னம்மா! அம்மா திடீர்னு மலங்க, மலங்க முழிக்குது. கண்ணு மேலகுத்துனாப்புல நிக்குது. எனக்கு பயமாயிருக்கு. சீக்கிரம் வாங்களேன்” செல்போனில்  சுசீலாவிடம் பதற்றத்துடன் பேசினான் சிவக்குமார்.

 

        கேஸ் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த முருங்கைக்காய் சாம்பாரை அப்படியே மூடி வைத்துவிட்டு கேஸை அணைத்துவிட்டு அவசரமாக வெளியே வந்தாள் சுசீலா.

 

        “என்னங்க, ஒங்க அண்ணன் பொஞ்சாதி சீரியஸா இருக்காம்: குமாரு போன் பண்ணினான். சீக்கிரம் வண்டிய எடுங்க: போயிப்பார்ப்பம்.” திண்ணையில் அமர்ந்திருந்த சுப்புனியுடன் தெருவின் மறுகோடியில் இருந்த கற்பகத்தின் வீட்டைநோக்கி விரைந்தாள் சுசீலா.

 

        கட்டிலில், கிழித்துப் போட்ட நாராய்க் கிடந்தார் கற்பகம். கட்டிலின் ஓரத்தில் சோகமாய் சிவக்குமார். தாயின் மெலிந்துபோன வலது கையை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டிருந்தான். அந்தக்கை மூன்றாண்டுகளாய் செயலிழந்து சுருங்கிப்போய் கிடக்கிறது.

 

       “குமாரு! என்னாச்சு?” கேட்டுக்கொண்டே வந்தாள் சுசீலா. சுப்புனியும் உடன் வந்தார். அண்ணியின் கால்மாட்டில் சிறிதுநேரம் நின்று பார்த்துவிட்டு, வாசலில் போய் உட்கார்ந்து கொண்டார்.

 

       “அக்கா, அக்கா” அழைத்தாள் சுசீலா.

   

      கற்பகத்தின் விழிகள் லேசாக இடமும், வலமுமாக சுழன்றன. ஆனால் சுசீலாவின் அழைப்பை மூளைக்குள் உள்வாங்கியதாகவோ, அதற்கு பார்வையில் பதிலளிப்பதாகவோ தெரியவில்லை.

 

      “என்னப்பா குமாரு! மூச்சு ஓடுது. கண்ணுரெண்டும் நெலகுத்தி நிக்கிறதப்பாத்தா, ரொம்ப நாள் தாங்காது போலிருக்கே! எப்பவேணா, என்னவேணா நடக்கலாம். ஒங்கம்மாவுக்கு சாவுற வயசு இல்ல. ஆனா, எத்தனை நாளைக்குதான் நீ இப்புடி படுக்கையிலேயெ வச்சிக்கிட்டு செஞ்சிக்கிட்டு இருப்ப? அந்த லலிதாம்பிகைதான் காப்பாத்தணும். இப்பவும்  சகஸ்ரநாமம் படிக்கிறியா குமாரு?”

 

      “படிச்சிக்கிட்டுதான் இருக்கேன் சின்னம்மா, அம்மா என்னை விட்டுட்டு போயிடாதில்ல!” கவலையுடன் கேட்டான்.

 

       “ஒன்னும் புரியலையே குமாரு. எதுக்கு இப்புடி மலங்க, மலங்க முழிக்குதுன்னு தெரியலியே! இரு கொஞ்சம். பால் எடுத்தாறேன். வாயில ஊத்திப்பாரு”

 

        டம்ளரில் சுசீலா கொடுத்த பாலை சிறிதளவு அம்மாவின் வாயில் ஊற்றினான் சிவக்குமார். பால் உள்ளே சென்றது. சுசீலா தன் பங்குக்கு கொஞ்சம் பாலை ஊற்றினான். அதுவும் உள்ளே சென்றது. “என்னங்க நீங்க கொஞ்சம் பால் ஊத்துங்க” வாசலில் இருந்த சுப்புனிக்கு குரல் கொடுத்தாள் சுசீலா.

 

      “அதெல்லாம் ஒன்னும் இப்போதைக்குப் போவாது. அதுக்குள்ள எதுக்கு பால் ஊத்துறீங்க?  அண்ணன்களுக்கு போன் பண்ணிட்டியா குமாரு?” கேட்டுவிட்டு வாசலிலேயே அமர்ந்து கொண்டார் சுப்புனி.

 

         “குமாரு! அண்ணனுங்களுக்கு போன் பண்ணிச் சொல்லிடு. இப்ப சொன்னாதான், நாளைக்கி காலையிலாவது வருவாங்க. அதுவரைக்கும் தாங்குமான்னு தெரியல. எதுக்கும் பணமெல்லாம் எடுத்தாந்து வச்சுக்க. தைரியமா இரு. சாம்பாரை அடுப்புல வச்சிட்டு வந்தேன். நான் வீட்டுக்கு போயிட்டு, அப்புறமா வர்றேன்” இருவரும் புறப்பட்டனர்.

 

        சுசீலா சுப்புனியிடம்,” பாவங்க குமாரு! இன்னும் இருவத்தஞ்சு வயசு கூட ஆகல; சாவை நேர்ல பார்த்திருக்கவே மாட்டான் அதான் ரொம்ப பயந்துட்டான்” என்றாள்.

 

          அம்மாவைப் பார்த்துக்கொண்டே பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனான் சிவக்குமார்.

       

          சிவக்குமார் பன்னாட்டு ஐ.டி. கம்பெனியில்   கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி. மைசூருவில்  பயிற்சியில் இருந்தான். அண்ணன்கள் இருவரும் சென்னையில் ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரிந்தனர். இருவருக்கும் அப்பா உயிருடன் இருந்தபோதே திருமணமாகிவிட்டது. அம்மா மட்டும் தனியாக திருமீயச்சூரில் இருந்தார்.

 

          ஒருநாள், காலை எட்டுமணியிருக்கும். சிவக்குமார் பயிற்சிக்கு புறப்பட்டபோது சித்தப்பாவிடமிருந்து போன் வந்தது. ”குமாரு, அம்மா ராத்திரி திடீரென மயக்கம்போட்டு விழுந்திருக்கு. யாருக்குமே தெரியல. காலைல பால்காரர் வந்து கூப்பிட்டபோதுதான், எதுவுமே அரவமில்லையேன்னு அக்கம்பக்கத்துல சொல்லியிருக்கார். கதவை ஒடச்சி உள்ளே போயி பார்த்தா, அம்மா கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கு. பேச முடியல. வாயை இழுத்திருக்கு. வலது கையும், வலது காலும் வெளங்கல. அம்மாவை  திருவாரூர் மெடிக்கலுக்கு ஆம்புலன்ஸ்ல அழைச்சிக்கிட்டு போறோம். நீ ஒடனே புறப்பட்டு வா குமாரு”

 

         “பயிற்சியில் விடுப்பு தரமாட்டார்கள். என்ன செய்வது?” ஒரு நொடி யோசித்தவன், “நடப்பது நடக்கட்டும். அம்மாவைவிட வேலை முக்கியமில்லை” என்று முடிவெடுத்து, விடுப்பு சொல்லாமலே புறப்பட்டான். கிடைத்த பஸ்ஸில் ஏறி வீடு வந்து சேர்ந்தபோது, மறுநாள் பொழுது விடிந்திருந்தது. அண்ணன்கள் இருவரும் முன்னரே வந்திருந்தனர்.

 

        கற்பகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், “எல்லாமே கைமீறி போய்விட்டது” என்று கூறிவிட்டனர். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் வைத்திருந்துவிட்டு, வீட்டுக்கு அழைத்து வந்தனர். நல்ல வேளையாக பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் பாதிக்கப்படவில்லை. அம்மாவின் வாழ்க்கை படுக்கையில் நிரந்தரமானது.

 

        அம்மா நல்லா இருக்கும்போது, அடிக்கடி சொல்லுவார். “பொம்பளைங்க பூவும் பொட்டுமா, புருசனுக்கு முன்னாடி போய்ச் சேர்ந்துடணும்: இல்லன்னா ஒரு பொண்ணயாவது பெத்திருக்கணும்.. கொஞ்சமாவது பாவப்பட்டு அம்மாவாச்சேன்னு செய்யுங்க; அதுவும் இல்லன்னா கெடக்காம, கொள்ளாம பொசுக்குன்னு உயிர் போயிடணும். இந்த மூனுக்குமே கொடுப்பினை இல்லன்னா, பொம்பளைங்க பாவப்பட்ட ஜென்மங்கதான்” என்பார்.

 

       “இப்ப அதுதான் நடந்திருக்கு. பொம்பள புள்ளைக்கி ஆசப்பட்டுதான், ரெண்டு ஆம்பளப்பயலுகளுக்கு அப்புறம் ஏழு வருசம் கழிச்சி என்னப் பெத்திருக்காங்க. நானும் ஆணாகவே பொறந்ததில் அம்மாவுக்கு ரொம்பவே வருத்தம். நான் என்ன செய்வது? நான் எப்படி பொம்பளப்புள்ள மாதிரி எல்லா பணிவிடைகளையும் செய்ய முடியும்? அம்மாவ குளிக்க வைக்கணும். உடை மாற்றி விடணும். இயற்கை உபாதைகளைக் கழிக்க உதவி செய்யணும். அம்மாவைப் பாத்துக்க ஒரு நர்ஸை நியமிக்கலாமா?. நர்ஸை மட்டுமே நம்பி பகலில் அம்மாவை விட்டாலும், இரவில் என்ன செய்வது? உணவு சமைத்துக்கொடுக்கணுமே! அதற்கு ஒரு ஆள் வேண்டுமே!. “உள்ளவங்க இல்லன்னா ஒரு மொழம் கட்ட”ன்னு பழமொழி சொல்லுவாங்களே! எத்தனைப் பேரை வேலைக்கு வைத்தாலும் அவர்களைக் கண்காணிக்கணுமே? அதை யார் செய்வது?” பலவாறு சிந்தனைகள் ஓட “அண்ணன்கள் இருவரும் என்ன சொல்லுகிறார்கள் பார்ப்போம்” என்று அமைதியாக இருந்தான் சிவக்குமார்.

 

      அண்ணன்கள் மேகநாதனும், சரவணனும் அவரவர் மனைவிகளுடன் நாள் முழுவதும் பேசினர்; ஆனால் ஒரு முடிவுக்கும் வரவில்லை. இரவு தலையணை மந்திரங்களைக் கேட்ட பின்னர் மறுநாள் காலையில், “அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டுவிடலாம் என்றும், வீட்டில் வைத்து பராமரிக்க முடியாது என்றும்” ஏகோபித்து  முடிவு எடுத்தனர். சிவக்குமாரிடமும் தெரிவித்தனர்.

 

      “என்ன சொல்லுறீங்க?” அதிர்ந்தான் சிவக்குமார். “முதியோர் இல்லத்துல விடுறதுல எனக்கு கொஞ்சங்கூட உடன்பாடு இல்ல. நம்ம அம்மாவ நம்மாலயே பாத்துக்க முடியலன்னா, மத்தவங்க எப்படி பாத்துப்பாங்க? நான் இப்பதான் டிரெயினிங்கில் இருக்கேன். வேலைக்குப் போனால்தான் கல்யாணம் செய்யுறது பத்தி யோசிக்க முடியும். அப்படி செய்யுறச்ச வேணுமின்னா வேலைக்குப் போகாத பொண்ணா பாக்கலாம். வீட்டுல ஒரு நர்ஸ் போட்டுப் பார்த்துக்கிறதுக்கும் நம்மவங்க கண்காணிப்பு வேணுமில்ல. அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் அம்மாவுக்கு பொறுப்பெடுத்துக்குங்க. அண்ணிய வேலயவுட்டுட்டு வீட்டுல இருக்க சொல்லுங்க. அம்மாவ நர்ஸ் போட்டு பாத்துக்குங்க” தீர்மானமாகப் பேசினான் சிவக்குமார்..

 

     அதுவரை பேசாமலிருந்த பெரியண்ணி சட்டென உள்ளே புகுந்தார். “இதபாரு குமாரு. நீ ஒன்னால என்ன செய்ய முடியும்னு மட்டும் சொல்லு. எங்களுக்கு யோசனை சொல்லுற வேலையெல்லாம் வச்சுக்காத; ஒங்க அம்மாவுக்காக, லட்சம் ரூபா வர்ற வேலயவுட முடியுமா? நாளைக்கி எங்க புள்ளைங்களுக்கு நாங்க ஏதாவது சேர்த்து வைக்கணும்னா, இப்பவே சம்பாதிச்சாதான் உண்டு. ஐ.டி. கம்பெனிங்கிறது நிச்சயமில்லா பொழப்பு. எப்ப வேலை போகும்னே தெரியாது.. அதனால வேலயவுடுற பேச்சே வேணாம். வேற ஏதாவது யோசனை இருந்தா  சொல்லு.” கறாராகப் பேசினார்.

 

      “நீங்க என்ன அண்ணி சொல்லுறீங்க?” சின்ன அண்ணியைக் கேட்டான்.

 

      “அவங்களுக்கு ஒரு சட்டம். எனக்கு ஒரு சட்டமா? என்னாலயும் வேலயவுட முடியாதுப்பா. நீங்க ஒங்க அம்மாவ என்ன வேணா பண்ணிக்கிங்க. எங்க வேணா கொண்டுபோயி சேருங்க. ஆனா என்னவுட்டுடுங்க.”

 

        “நாளைக்கே ஒங்க அம்மாவுக்கு இதே போல ஒரு நெலம வந்தா என்ன செய்வீங்க? ரெண்டு அண்ணியயும் தான் கேட்கிறேன்.”

 

       “வர்றச்ச பாத்துக்கலாம்” என்றனர் கோரஸாக இருவரும்.

 

       “சரி ரொம்ப சந்தோசம். என் அம்மாவ நான் பாத்துக்கிறேன். இனிமே அவங்களப்பத்தி நீங்க யாரும் கவலைப்படவேண்டாம். நான் வேலைக்குப் போகப் போறதில்ல. ஐ. டி. கம்பெனியில வேலை பாக்காதவங்க எல்லாரும் வாழாமலா இருக்காங்க. எப்படியோ நான் அம்மாவப் பாத்துக்கிட்டு என் வாழ்க்கையையும் பாத்துக்கிறேன். நீங்க எந்த கவலயுமில்லாம ஒங்க பொழப்பப் பாருங்க”. கோபத்தை அடக்கிக்கொண்டு தீர்மானமாகப் பேசினான் சிவக்குமார்.

 

       “சாரிடா குமாரு. எங்கள மன்னிச்சுடுடா. ஒனக்கு எப்படி  நன்றி சொல்லுறதுன்னே தெரியல, அம்மாவோட பென்ஷனையும், அப்பாவோட குடும்ப பென்ஷனையும் நீயே வாங்கிக்க. அத வச்சிக்கிட்டு அம்மாவ எப்படியாவது பாத்துக்க. அம்மாவுக்குப் பிறகு, இந்த வீட்ட நீயே எடுத்துக்க. நாங்க எதயுமே கேட்கல.” என்று உருகி வழிந்தனர் மேகநாதனும், சரவணனும்.

 

         அதன்பிறகு சகோதரர்கள். “அம்மா நல்லா இருக்காங்களா”ன்னு ஆரம்பத்துல வாரத்துக்கு ஒரு முறை போனில் விசாரித்து வந்தனர். மேகநாதன் ஞாயிற்றுக்கிழமையன்று பேசுவான், சரவணன் புதன்கிழமையன்று பேசுவான் நாளடைவில் மாசம் ஒரு முறை என்ற அளவுக்கு சென்றனர். இப்போது வேற வேலை எதுவும் இல்லாத நாளில் மட்டும் அஞ்சு நிமிஷம் அம்மாவப்பத்தி விசாரிக்கிற அளவுக்கு வந்து விட்டனர். அது ரெண்டு மாசத்துக்கு ஒரு முறையோ மூனு மாசத்துக்கு ஒரு முறையோ நடக்கும். வருசத்துக்கு ஒரு முறை வந்து பார்ப்பதென்று முடிவெடுத்து மேகநாதன் பொங்கலுக்கு குடும்பத்துடன் வருவான். சரவணன் தீபாவளிக்கு வருவான்.

 

         ஆரம்பத்தில் அம்மாவைப் பார்த்துக்கொள்வது பெரும் சவாலாக இருந்தது சிவக்குமாருக்கு. ஆரம்பத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் உதவிசெய்தனர். அதுவும் மெல்ல மெல்ல குறைந்து வந்தது. சில நாட்களிலேயே தானே எப்படி பார்த்துக்கொள்வது என்பதில் ஒரு தெளிவுக்கு வந்துவிட்டான். யாரையும் உதவிக்கு கூப்பிடுவதில்லை.

 

        முதலில் ஒரு சக்கரநாற்காலியை வாங்கினான். பாத்ரூமில் வெஸ்டர்ன் டாய்லெட்டாக மாற்றினான். ஹீட்டர் ஒன்றை வாங்கிப் பொருத்தினான். அம்மாவை சக்கர நாற்காலியில் தூக்கி உட்காரவைத்து பாத்ரூமிற்கு  தள்ளிச்செல்வான். வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர வைப்பான். இடதுகை செயல்படுவதால் மலம் கழித்தபிறகு கற்பகமே கழுவிக் கொள்வார். பின்னர் வெந்நீரில் குளிக்கவைப்பான். அம்மாவின் உடைகளை மாற்றி விடுவான். புடவை கட்டிவிடுவது, ஜாக்கெட் போட்டுவிடுவது என்பதெல்லாம் ஒத்துவரவில்லை. இரவு பகல் எந்நேரமும் நைட்டியிலேயே இருக்குமாறு உடையை மாற்றினான். தலைக்கு எண்ணெய் வைத்து வாரிவிடவும் கொண்டை போட்டுவிடவும் கற்றுக்கொண்டான். பகலில் படுத்துக்கொள்ள ஹாலில் ஒரு கட்டிலையும் அதன் மீது இலவம்பஞ்சு மெத்தையையும் போட்டான். “பெட்சோர்” வராமலிருக்க படுக்கையறையில் தண்ணீர் மெத்தை ஒன்றை வாங்கிப்போட்டான். ஹாலில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை அம்மா படுத்துக்கொண்டே பார்ப்பதற்கு வசதியாக  திருப்பி வைத்தான். படுக்கையறையிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி வைத்தான். இரவில் பாத்ரூம் எழுந்து செல்லாமல் இருக்க “டயாபர்” அணிவித்து விடுவான். அவன் ஏற்கனவே கல்லூரியில் படிக்கும்போது அறை எடுத்து தங்கி நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்டதால், சமையல் செய்வது ஒன்றும் பிரச்சினையாக  இருக்கவில்லை. ஆனால் பாத்திரங்களை கழுவுவது, வீடு பெருக்குவது போன்றவற்றைச் செய்ய கொஞ்சம் சிரமப்பட்டான். நாளடைவில் அதுவும் பழகிவிட்டது. சாப்பாட்டை மூன்று வேளையும் ஊட்டிவிடுவான். மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீரை வாயில் கொடுப்பான்.              

 

               ஆனால், காப்பி, டீ, தண்ணீர் போன்றவற்றை நாற்காலியில் உட்காரவைத்து இடது கையில் கொடுத்து குடிக்க வைப்பான். சில சமயங்களில் கீழே சிந்தி விடும். ஆனால் அதற்காக அவனுடைய செயல் முறைகளை மாற்றிக்கொள்ள மாட்டான். உட்கார்ந்து குடிக்க பழகவேண்டும் என்பதற்காக, அப்படி தொடர்ந்து செய்தான். கற்பகம் அவனது செயல்களில் நெகிழ்ந்து போய் ஏதோ சொல்ல வருவார். ஆனால், வார்த்தைகள்தான் வரமறுத்தன. குழறினப் பேச்சைப் புரிந்து கொள்ள அவனும் முயன்று வந்தான். அவ்வப்போது வார இதழ்களிலுள்ள நகைச்சுவைத் துணுக்குகளையும். சிறுகதைகளையும் படித்துக் காண்பிப்பான். கற்பகமும் அவைகளை விரும்பிக்கேட்பார்.

 

        தினசரி அம்மாவிற்கு செய்யவேண்டிய பணிவிடைகளை செய்துவிட்டு, குளித்து வருவான். லலிதாம்பிகை படத்தின்முன் தீபமேற்றி லலிதா சகஸ்ரநாமம் படிப்பான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் லலிதாம்பிகை கோவிலுக்கு சென்று வருவான். பல நாட்களில் அம்மாவை தனியே விட்டு விட்டுப் போக மனமின்றி, வீட்டில் சகஸ்ரநாமம் படிப்பதோடு நிறுத்திக்கொள்வான். அதன்பிறகே சாப்பாடு. பிறகு மதியத்திற்கான வேலைகள். அவ்வப்போது மடிக்கணினி, கைப்பேசி என்று பொழுதுகள்  கழிந்தன. தினமும் இரவு பத்துமணிக்கு அம்மாவின் கட்டிலுக்கு அருகிலேயே தரையில் பாய்போட்டு படுத்துக்கொள்வான். இரவு விளக்கை எரியவிட்டு விடுவான்.

 

           ஏதாவது தேவையென்றால் அம்மா எழுப்புவதற்கு வசதியாக சாவி கொடுக்கும் மணி ஒன்றை வாங்கி அம்மாவின் இடதுகைப்பக்கம் வைத்தான். எப்போதாவது மணியை அமுக்கி அவனை எழுப்புவார் கற்பகம்.

 

          “ஒரு முடியாத பொம்பளய எப்படி பாத்துக்கணும்னு ஒங்கிட்டதான் பயிற்சி எடுத்துக்கணும் குமாரு” அடிக்கடி சொல்வார் சுசீலா.

 

          “அட போங்க சின்னம்மா, எப்படியாவது எங்கம்மாவ பழையபடி நடமாட வச்சிட்டா போதும். அப்புறம் எனக்கு கவலையேயில்லை” என்பான் சிவக்குமார்.    

 

         ஆனால், இன்று நடப்பதோ வேறு மாதிரியாக இருக்கிறதே! அம்மா இனி பிழைக்கமாட்டாரா? மனசுக்குள்  கவலைத் தொற்றிக்கொண்டது. மேகநாதனுக்கும், சரவணனுக்கும் கைப்பேசியில் தகவலைத் தெரிவித்தான்

 

         “ஏய் குமாரு! சும்மா எங்கள அலையவுடாத. யாராவது ஒரு டாக்டர அழச்சிக்கிட்டு வந்து பாரு. அவரும் இனிமே தாங்காதுன்னு சொல்லிட்டா, அப்புறமா சொல்லு நாங்க வர்றோம்” இரண்டு பேரும் ஒரே மாதிரி பேசினார்கள்.

 

         “இப்பல்லாம் எந்த டாக்டரும் வீட்டுக்குவந்து பாக்குறதில்லையே! என்ன செய்யுறது? பேசாம ஆம்புலன்ஸ அழச்சிடுவமா? எதுக்கும் சின்னம்மா வரட்டும். கேட்டுக்கிட்டு முடிவு பண்ணிக்கலாம்.”

 

         “அம்மா….அம்மா..“  வேகமாக இரண்டு தடவை அழைத்தான். கற்பகத்தின் விழிகள் சட்டென்று இயல்பு நிலைக்கு வந்தன. அடுத்த சில நொடிகளில் பழையபடி குத்திட்டு நின்றன. மனசுக்கு கொஞ்சம் தெம்பாக இருந்தது.

 

           சகஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சு இன்றோடு 1006 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் இரண்டுமுறை படித்தால் 1008 மந்திரங்களையும் 1008 முறை படித்த நிறைவாகிவிடும். “என் அம்மா குணமடைய வாழ்நாள் முழுவதும்கூட படிக்கலாம். லலிதாம்பிகையே நல்ல வழி காட்டும்மா” மனமுருக வேண்டினான்.

 

           சுசீலா வந்ததும், சகோதரர்கள் கூறியதைச் சொல்லி ஆம்புலன்ஸை அழைக்கலாமா என்று  கேட்டான்.

 

             “அட நீ ஒன்னு குமாரு. சின்னப்புள்ளைங்கிறது சரியாத்தான் இருக்கு. இன்னிக்கி ராத்திரிய தாண்டாதுன்னு நெனைக்கிறேன். மூனு வருசமா பாத்துப்புட்டு இப்பப் போயி எங்க தூக்கிக்கிட்டு அலையப்போற?. அவனுங்கக்கிட்ட நான் பேசுறேன். போனைப் போட்டுக்குடு” என்றார் சுசீலா. பிறகு போனில் பேசி வரச்சொன்னார்.

 

         சிவக்குமார் பேரளம் சென்று வங்கியிலிருந்து பணம் எடுத்துவந்தான். மாலையில் ஒருமுறை சகஸ்ரநாமம் படித்தான். இரவு முழுவதும் சிவக்குமாருடன் சுசீலாவும் விழித்திருந்தாள்.

 

          விடியும் வேளையில் மேகநாதனும் சரவணனும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர். “எல்லாரும் கொஞ்சம், கொஞ்சம் பால் ஊத்துங்கப்பா” என்றாள் சுசீலா.

 

          வந்தவர்கள் அனைவரும் கற்பகத்தின் வாயில் பால் ஊற்றினர். இப்போதும் பால் உள்ளே சென்றது. “குமாரு! நீயும் வந்து ஊத்துப்பா” என்றழைத்தாள் சுசீலா.

 

          .ஆனால் சிவக்குமார் வரவில்லை. குளித்துவிட்டு சகஸ்ரநாமம் படித்துக்கொண்டிருந்தான். 1008வது முறையை நிறைவு செய்துவிட்டு எழுந்து வந்தான்.

 

          “அம்மா! இன்னியோட 1008 முறை லலிதா சகஸ்ரநாமம் படிச்சு முடிச்சிட்டேம்மா! லலிதாம்பிகை நம்மைக் கைவிடமாட்டாம்மா! நீ பழையபடி எழுந்திரிச்சி நடக்கத்தான் போறேம்மா! இது நிச்சயம் நடக்கும்மா!” கற்பகத்தின் வலதுகையைப் பிடித்தபடி  பேசினான் சிவக்குமார்.

 

          இதுவரை துவண்டு கிடந்த கற்பகத்தின் வலதுகை குமாரின் கைகளை இறுகப்பற்றியது. அந்தப்  பிடிப்பில் ஓர் அழுத்தத்தை உணர்ந்தான் சிவக்குமார். இது எப்படி சாத்தியமானது? அம்பாளோட கருணைதான்! “அம்மா நீங்க நல்லாயிட்டீங்கம்மா, நல்லாயிட்டீங்கம்மா” சந்தோசத்தில் கூவினான்.

 

        அம்மாவை நிமிர்த்தி உட்காரவைத்தான். கற்பகத்தால் வலதுகாலை நன்றாக நீட்டி உட்காரமுடிந்தது. இதுவரை சோர்ந்து கிடந்த வலது கையிலும், வலது காலிலும் ரத்தம் வேகமாக பாய்ந்தது. கற்பகத்தால் எழ முடிந்தது. சிவக்குமாரின் தோளில் கைவைத்தபடி எழுந்து நின்றார்..

 

       “அம்மா! நான் கும்பிட்ட லலிதாம்பாள் நம்மள கைவிடலம்மா!” கோவிலிருக்கும் திசை நோக்கி கை கூப்பினான் சிவக்குமார்.



  க. இராஜசேகரன்.

Post a Comment

0 Comments