Friendship Story In Tamil

 சுஜாதாவின் நூறு நண்பர்கள்







யார் பக்கத்தில் யார் பயணி என்று அறியா வாழ்க்கையில் யாருமில்லா பாதையில் ஒரு நாள் நீங்கள் ஓர் அகதியாக நிற்பதாக நினையுங்கள். முகமூடியணியா  மர்மமான மனிதர்கள் நீங்கள் நிற்பதைக் கண்டும்  காணாமல் சுயநலமாக போகிறார்கள். ஆனால், அவர்கள் பேராசைப்படுகிறார்கள். மழையில் நனைகின்ற பூக்கள் கூட  மனிதர்களைப் போல கண்ணீரை மறைக்க முயல்கின்றன. இப்படி உள்ளாடைகளும், உள்ளுறுப்புகளும் விலை போகின்ற பூமியில்  உனது மனம் தொப்பை போடுவதால், இனி மேல் கனவுகள் காண்பதை நிறுத்திக்கொள். 

"பறவைகளைப் போல பறக்க நான் சுவரில் தலை கீழாக நடக்கிறேன்; பல வருடங்களுக்கு பின் எனது சிறகுகளை விட நான் பாரமானவன் என்று உணர்கிறேன்; பறவையாய் என்றாவது ஒரு நாள் நான் பறக்க கண்ட கனவுகளை பொய்யாக்காமல் ஓர் உயரமான கட்டத்தில் தலை கீழாக நடக்கிறேன். ஆனால், நான் இறந்து விட்டேன்". இப்படி ஒரு தற்கொலைக் கவிதையை வாசித்து என்னிடம் ஒரு பைத்தியக்காரன்  யாசகம் கேட்கிறான். ஆனால்,  'என்னிடமுள்ள மனிதாபிமான பெறுமதியை நான் என்றோ இழந்து விட்டேன்' என்பதினை அவன் அறிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.   

தன்னந்தனியாக நிற்கின்ற போது தனிமை என்ற போரைக் கொல்ல  நீயே  போராளியாகிறாய். கண்களின் வினாக்களுக்கு கண்ணீர் விடை என்றால், காயங்களின் வினாக்களுக்கு மருந்து தான் விடை. ஆனால், இங்கே பலரது வாழ்க்கை ஏக்கமென்ற வட்டிக்கடையில் ஏக்கர் கணக்காய் புதைக்கப்பட்டிருக்கிறது. நூறு பட்டாம்பூச்சிகளைக் கொன்று ஒரு நச்சுப் பாம்பு இச்சை  தீர்ப்பது போல காதல் சுருங்கி காமம் பிரம்பு போல நீள்கிறது. சின்னச் சின்னக் கனவுகளைக் கூட  சிற்பிக்குள் தேடுகின்ற விளம்பரமான வாழ்க்கை நாளுக்கு நாள் தீங்காகிறது. 

இன்று நான் நானாக இல்லை என்று உணர்கிறேன். இத்தனை வருடங்கள் ஏனென்று எதற்கென்று யோசித்து என் மண்டைக்குள் பூகம்பம் வெடிக்கிறது. வீதியை விட்டு ஓடி என் அறையினுள் ஒரு குழந்தை போல நான் எனக்குள் ஒளிந்து கொள்கிறேன். இருள் என்னுள் இமைகளை திறக்கின்ற போது முள்ளாக குத்துகிறது. நேற்று வரை நான் கட்டிப் பிடித்து தூங்கிய பொம்மைகள் இன்று என்னை கட்டிப் பிடிக்கின்றன. 'எனது தலையை  தீயினால்  கொன்று  இரவல் ஒளி வாங்கா வா' என்று மெழுகுவர்த்திகள் அழைக்கின்றன; ஆனால், ‘உன்னை அணைப்பேன்; நான் அழிப்பேன்’ என்று காற்று கூட   என்னோடு   சண்டை செய்கிறது. 

எனது தலையணைகள் தாய் போல என்னை தாங்குகின்றன. அன்று, ப்ரியமாய் பாதுகாத்த கூண்டுக்கிளிகள் என்னை விலகிச் சென்ற போது பறவைகளுக்கு வானம் சொந்தமென்று நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மின்னல்கள் வெட்டி, இடிகள் இசையமைக்க மழை வருமென்று நினைத்து  நான் செய்து விட்ட காகிதக்கப்பல்கள் இலக்கை அடையாமல் தண்ணீருக்குள் மூழ்கிய போது இது தான் வாழ்க்கையென்று நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பத்து, பதின்மூன்று வருடங்கள் பெண் சிறுமியாக நானிருந்தேன். அன்று, நுரைமுட்டைகள் போல ரணங்களின்றி பறந்தேன்; ஏனென்று, எதற்கென்று தெரியாமல் ஒரு நாள் கன்னிப் பெண்ணாக மாறினேன். இன்று, யாரோ ஒருத்தன் என் உடமை என்று என்னை அவன் ப்ரியப்படும் போதெல்லாம் புல்லாங்குழல் போல வாசிக்கிறான். ஒரு சில தடவைகள் நான் இசையாகிறேன்; ஆனால், பல தடவைகள் வெறுமென நான் முனகல்கள் தான் என்று அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி, மெளனமே முள்ளானால் மூச்சுக்காற்றில் மரணம் நெருங்கலாம். 

இன்று மட்டும் தான் உலகமென்று  இறைவன் அறிக்கை விட்டால் மலைகள் வியக்கும் படி கும்பம் கும்பமாய் மனதுக்குள் புதைக்கப்பட்ட பேராசை எண்ணங்களால் கொலை செய்யப்பட்டு   மனிதன் குவிக்கப்படுவான். இனி மேல் நான் என்ன செய்வேன் என்று இறைவன் யோசிக்க, குவிக்கப்பட்ட சடலங்களின் கர்ப்பபைகளுக்குள் நீங்காமல் தூங்குகின்ற சேய்களால் பூமி பிறக்கும். காலங்கள் ஓட மனம் தேயத்தேய நிறம், பணம், மதம், இனம், ஜாதி, காதல், காமம், கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு என்று இன்றை விட நூறு மடங்கு மோசமாய் புதுப்பூமி மாறும் என்பதில் ஒரு துளி ஐயமில்லை. போதைப் பொருள் போன்ற எண்ணங்கள் மனதினுள் புதைக்கப்படுகின்ற போது இன்று நீங்கள் மனிதனாக இருக்கலாம்; ஆனால், நாளை நீங்கள் கொடியவனாக அறுவடை செய்யப்படலாம்.  

ஒரு கானகத்தில் நான் வாழ்வாதார பணிக்காக தங்கியிருந்த போது எனது கூடாரத்திற்கு சற்று தூரமாக ஒரு விமானம் விழுந்து நொறுங்கியது. பறவைகளின் இன்னிசைகளை கேட்டு மனனம் செய்து பழகிய செவிகள் மானிடர்களின் கதறல்களை கேட்டு யாது செய்வதென்று அறியாமல் நான் தயங்கி நின்றேன். 

எனது கூடாரத்திற்குள் ஓடிச் சென்று மீதமாகயிருந்த ஒரு சொட்டு நீரை ஊற்றி பற்றுகின்ற நெருப்பை அணைக்க முடியாது என்றறிந்தும் எனக்குள்ளிருந்த பேரன்பு  ஊற்றிப்   பாரென்று   போராடியது. மரணத்தின் கதறல்களை கேட்கின்ற போது ஒரு வெடிகுண்டு புத்திக்குள் வெடிப்பது போல மனம் கதறுகிறது. நான் யாரையும் காப்பாற்ற முடியாத பாவியாகி வாழ்க்கையில் தோற்று விட்டேன். எனது கூடாரத்தில் இருந்து நதியருகே வேகமாக ஓடிச் சென்று தண்ணீரள்ள குறைந்தது பத்து நிமிடங்கள் தேவைப்படும். ஏன் இப்படி என்று மெளனமாக இறைவனிடம் கேட்கிறேன்.

ஒரு கைக்குழந்தையின் மழலை அழைப்பு என் காதுகளில் கேட்க அங்குமிங்கும் ஓடிச் சென்று கடைசியில் அவனைக் காண்கிறேன். அன்னைக்கோ இல்லையென்றால் தந்தைக்கோ முத்தமிட துடிக்கின்ற இதழ்களால் என்னைக் கண்டதும் புன்னகைக்கிறான். என் கண்கள் கலங்குகின்றன; ஓடிச் சென்று அவனை கட்டிப் பிடித்துக் கொண்டேன். 

நாட்கள் சில ஓட என்னோடு ஒட்டிக் கொண்டான். ஏதேதோ அழகான இதழ்களால் என்னோடு பேசுவான்; நான் கூறும் கதைகள் முடியும் முன்னே அவன் எனது மார்பினுள் தூங்கிடுவான். விடுமுறை கிடைத்து நான் வீட்டிற்கு போகின்ற போது  அவனை என்னோடு தூக்கிச் சென்றால், ‘ஒரு வேளை நான் ஆணாக இருந்தால் உலகம் என்னைப் புகழும்; பெண்ணாக இருந்தால் 'எவனோடு படுத்து ஈன்றாய்' என்று என்னை இகழும்’. ஏனென்றால், நீங்களும் நானும் இப்படிப்பட்ட மனிதர்கள் நடுவில் சிக்கிக் கொண்ட கூண்டுகளில்லா சிறைப் பறவைகள் தான்.  

பாம்புச் சட்டைகள் போல நேற்று என்பதினை கழற்றி விட்டு விட்டு நாளையை தேடி ஓடுகின்ற கடிகார யுத்தத்தில் மனம்  தற்கொலைக்காக காத்திருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் கானல் நீர் மீது தங்கமீன்கள் பிடிப்பதென்று தூக்குக் கயிறுகள் புன்னகைக்கின்றன. பல கோடி  மனிதர்களின் வாழ்க்கை நினைப்பது போல ஒரு நாள் என்ற கற்பனையில் மரணம் வரை தொடர்கிறது. 

மழைத்துளிகளின் ஈர வாக்கியங்களைப் போல காயங்கள் காயாமல் வெள்ளமாக தலையை தாண்டிப் போகின்ற போது வாழ்க்கை மீதான பிடிமானம் இல்லாமல் போகிறது. கைக்குழந்தைக்கு பாதுகாப்பில்லா மனிதர்கள் மத்தியில் கேடுகெட்டவனை  கண்டுபிடித்து  ஒரு முறையாவது என் கைகளால் துண்டுதுண்டாக வெட்ட பேராசைப்படுகிறேன். நீங்கள் யார் மீதாவது எல்லையற்ற அன்பு வைத்திருந்தால் நிச்சயம் ஒரு நாள் கோழையாக மாறி விடுவீர்கள். 

கண்ணாடியில் முகம் பார்க்கின்ற போதெல்லாம் இது போன்ற எண்ணங்கள் என்னுள் அலை போல வந்து வந்து மோதுகின்றன. ஆனால், கண்ணாடி உடையவில்லை; மாறாக, நான் உடைந்து விட்டேன்.  

தந்தையில்லா பிள்ளைக்கு செங்கல் தூக்கி இல்லையென்றால்  பூக்கள் கட்டி விற்று பாலூட்டுகின்ற அன்புள்ள அம்மா, சப்பாத்து கட்டி வருகின்ற வருமானத்தில் தனது குழந்தையின் கல்விக்காக பென்சில் வாங்குகின்ற அன்புள்ள அப்பா இப்படிப்பவர்களின் புன்னகையில் இறைவன் நிம்மதியை ஒளித்து வைத்திருக்கிறான். “இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்வதை விட இல்லாத ஒன்றை நினைத்து அதற்காக பயணி! என்று கட்டளையிடுவது போல இந்தப் பூமியில்  விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.”

களவாடி மற்றும் கொலை செய்து  பிரமாண்டமாக வாழ்பவர்களை காண்கின்ற போது தானும் இப்படி போகலாம் என்று பலரது மனம் இயல்பாக நினைக்கலாம். ஆமாம், ஒரு நாளைக்கு ஓர் அழகி என்று இரவுகள் கழிப்பவர்களை கண்டு மெய்யாக நேசித்து தோற்றவர்கள் கூட  காமத்தை நாடலாம். ஏதோ ஒரு வகையில் பணம் மூச்சினை போல தோன்றலாம். ஆனால், “மற்றவர்களின் மனங்களில் புன்னகையாக இருப்பவர்களை விட மனக்காயத்தின் மீது புழுவாக ஊர்கின்றவர்கள் தான் அதிகம். இவற்றில் நீங்கள் எவ்வகை என்று உள்ளத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்.” 

ப்ரியமானவர்கள் நீங்கிச் சென்றால் கூட ஒரு சில மனங்கள் கடைசி வரை மனதினுள் வசித்தவர்களை மறப்பதில்லை. கண்களோடு கண்கள் பேசிய தருணங்களை நினைக்கின்ற போது ஓர் அடைமழை போல கண்ணீருக்குள் நினைவுகள் நீந்துகின்றன. இப்படி, அப்படி என்று கற்பனை பண்ணிய வாழ்நாட்கள் குழந்தை போல மனதினை துடிதுடிக்க வைக்கின்றன. 

“நீ என் நிழலானாய் என்ற நம்பிக்கையில் உண்ணுகின்ற உணவில் ஒரு வாய் எப்போதும் நான் உனக்காக ஊட்டி விடுகிறேன். மூன்று நாட்கள் நீ படுகின்ற வேதனை நான் உணர நீ ரணப்பட்டு கண்ணீர் சிந்தும் போதெல்லாம் ஒரு கருங்கல்லை வயிற்றில் கட்டி நடந்து பார்க்கிறேன். எந்தன், உந்தன் அம்மா, அப்பாக்காக நாம் வாழ நினைத்த நடுத்தர வருமான வாழ்க்கையில் ஒரு குட்டி உண்டியல் சேமிப்பில் இன்று கூட நீ சொன்னது போல நான் புத்தாடைகள் வாங்குகிறேன். எனக்குள் ஒரு சில அசிங்கங்கள் நீயில்லை என்றால்  கூட உந்தன் மீதான காமங்களை பிறக்க வைக்கின்றன; தப்பான நண்பர்களின் சகவாசத்தால் ஒரு நாளைக்கு ஐந்தாறு சிகரெட்கள் பற்ற வைக்கிறேன். குட்டிமா தயவு செய்து என்னை மன்னித்துக்கொள். சாவில் கூட ஒருமைப்பட நாம் நேசித்த வாழ்க்கையில் நீ  பக்கத்தில் இல்லையென்றால் கூட உந்தன் நினைவுகள் சேகரிக்கப்பட்ட இதயத்தை தூக்கிப்போட முடியவில்லை. ஏனென்றால் , நான் நிஜமாக வாழ்கிறேன்; நீ என்னுள் ஊசலாடுகிறாய்”.  

பயணங்களின் போது யாரென்று, எவரென்று  அறியாதவர்கள் பரிமாறுகின்ற புன்னகையில் ஏதோ ஒன்று இருப்பதாக உணர்கிறேன். சின்னச் சின்ன சந்திப்புக்கள் தருகின்ற அனுபவங்களால் டயரிகள் கூட கதைகளாக மாறுகின்றன. ஈருருளியில் தனது பிள்ளையை தாங்கி பூமியை சுற்றிக் காட்டுகின்ற ஒவ்வொரு அப்பாவையும் நான் அம்பானி என்று நம்புகிறேன். 

அலைகள் வருகின்ற போது கரையை நோக்கி ஓடுவதும், அலைகள் போகின்ற போது கடலை நோக்கி ஓடுவது போல நீங்களும் நானும் பாதை மீதமான பயணியாக இல்லையென்றால், பயணங்கள் மீதான பாதையாக காலங்களை கடத்துகின்றோம். ஆனால், வானம், பூமி ஒன்றாக காணப்படுகின்ற வாழ்க்கையில் மனம்  மட்டும் ஒருமைப்படுவது இல்லை. 

பல நாட்களாக ஏதோ ஒன்றை யோசித்து என் பொழுதுகள் காணாமல் போகின்றன.  தங்கமீன்கள் போல மனம் தத்தளிக்க  ஒரு குழந்தையை பத்து மாதங்கள் தாங்கி ஒரு நாள் கையில் எடுத்து முத்தமிடுகின்ற தாயைப் போல ஒவ்வொரு கதையையும் வாசகன் தாங்குகிறான். ஏதோ ஒரு தொடக்கத்திற்காக தவம் போல காத்திருக்கிறேன். ஆனால், 

“ஒரு கதை தொடங்கும் முன் எண்ணங்களுக்குள் கருவாகி சாகின்ற கதைக்கருக்களை  மட்டும் இங்கே கதையாக எழுதி இருக்கிறேன். ஆமாம், பூரணமாக ஒரு கதை தீர்வதற்குள் பல நூறு கதைகள் எழுதுகின்றவன் புத்திக்குள் மின்மினிகள் போல செத்துக் கிடக்கின்றன.  செத்துப் போன மின்மினிகளை போஸ்மாட்டம் செய்து ஒரு கதை என்று பல கதைக்கருக்களை  இது வரை நீங்கள் வாசித்தீர்கள். என் மீது சில நூறு வழக்குகள் போடப்பட்டு நான் சிறையில் வாசகர்களால் அடைக்கப்பட்டுக் கிடக்கிறேன். பாவம் எங்கள் கத்துக்குட்டி என்று சுஜாதாவும் அவரது நூறு நண்பர்களும் என்னை நாளை பிணையில் எடுக்க வருவார்கள் என்று நான் நம்பிக்கை கொள்கிறேன்.”      

***


Post a Comment

0 Comments