short stories in tamil

 அன்புக்கீறல் (சிறுகதை)





கத்தியில் ஒட்டியிருந்த பட்டரை பாணில் பூசியபடி தலையை நிமிர்த்தினாள் லதா. சத்தத்தைக் காணவில்லை. அதையும் காணவில்லை. அவள் செவிமடல் சத்தத்தை கூர்ந்து கவனித்தது. யன்னலோரம் அமைதியாக காட்சியளித்தது. அவள் பார்வையை நகர்த்தினாள். பாண்துண்டுகளை ஒன்றோடொன்று பொருத்தி உதடுகளை விரித்து சுவை பார்த்தாள். பாண்துண்டுகள் தொண்டைக்குள் இறங்கின. பட்டர் பெட்டியை மூடி தட்டில் வைத்தாள். கத்தியை கழுவினாள். கைகளை அலசியவாறு வெளியே வந்து நுரை பொங்கிய தேநீரை பருக எத்தனித்த போது அந்த சத்தம் கேட்டது. தேநீரில் பொங்கி கிடந்தது நுரை. அவள் மனதிலும் பொங்கி கிடந்தது சோக நுரை. பார்க்ககூடாது என்ற கட்டளையை அவள்  விழிகளுக்கு விதித்தாலும் விழிகள் அவற்றை பின்பற்றுவதில்லை. தலையை மெதுவாக நகர்த்தி அதைப் பார்த்தாள் அவள்.

சிறிய உடல். வெள்ளைதேகம். தலையில் மஞ்சல் நிற தொப்பி. கண்ணருகே சிவப்பு பொட்டு போன்ற ஒரு புள்ளி. இளஞ்சிவப்பு மெல்லிய கால்கள். தத்தி நடை போட்டுக் கொண்டிருந்தது அது. அதன் சின்னக் கால்கள் யன்னல்கட்டில் பதியும் போது கால்களுக்கு வலிக்குமோ தெரியவில்லை. பிஞ்சுக் கால்களால் அந்த அழகு தேவதை நடப்பதைப் பார்க்க விழிகள் வாடகைக்கு வேண்டும். ஆனால் லதாவின் விழிகள் அவற்றை பார்க்க போவதில்லை. லதா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

என்ன நடந்தாலும் சரி. மனதில் ஒரு புள்ளியளவேனும் சலனம் வரக்கூடாது. ஆறு மாதங்களாக கட்டுக்கோப்பாக பூட்டிவைத்த அவள் மனதை சாவி போட்டு திறக்கும் முயற்சியில் அது ஈடுபவது லதாவுக்கு தெரியும். அவ்வளவு சுலபமாக திறக்கமுடியுமா?? இரண்டு நாட்களாக அது எடுத்த முயற்சி தோல்வியில் தான் முடிய வேண்டும்.

அவசரமாக கைப்பைக்குள் பொருட்களைத் திணித்தவாறு கதவைப் பூட்டிவிட்டு வெளியேறுகிறாள் லதா. பச்சைத்தாவரங்களெங்கும் வெள்ளைப்பூக்களாய் பனித்துளிகள் படர்ந்திருந்தன. கன்பெரா நகரம் விழித்திருந்தது. எறும்புகளாய் மனிதர்கள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். இங்கு யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பரபரப்போடு பணிச்சுமையும் கூடவே பயணம் செய்யும். தொழில்நுட்பத்தின் கர்ப்பத்தில் பிறந்த மனிதர்களிடம் தொழில்நுட்ப மரபணுக்களே காணப்படுகின்றன.

அசுரனாய் உயர்ந்து நின்ற அந்த மாடிக்கட்டத்துக்குள் நுழைந்தாள் லதா. விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த கபேக்குள்( உயகé) நுழைந்து  ஏப்ரனையும் தொப்பியையும் அணிந்து கொண்டாள். மேசைகளில் மொய்த்துக்கிடந்தார்கள் மக்கள். அருகில் சென்று அவரவர் விருப்பம் அறிந்து அதற்கேற்ப உணவு வழங்குவது அவள் வேலை. ஆங்கிலத்தில் வெய்ட்டர; என்பார்கள்.

இயந்திரத்தோடு இயந்திரமாய் வேலை செய்வது எளிதல்ல. உடல் விடுமுறை கேட்கும். களைத்துப்போனாள் லதா. ஊழியர்களுக்கான அறைக்குள் நுழைந்து அமர்ந்தாள்.

“ என்ன டயர்ட்??” மேசைக்கெதிரே அவள். லதாவின் முகத்தைப் பார்த்தாலே புரிந்திருக்கும். வழிந்தோடிய வியர்;வை அவள் களைப்பை பறைசாற்றும்.

“லதா….. நானும்  பாக்கிறன் உன்ன. நீ சரியில்ல. யாரோடயும் கதைக்கிறல்ல சிரிக்கிறல்ல. லைவ்ல எல்லாருக்கும் புரொப்ளம் இருக்கு. டேக் இட்ஈஸி”

இலகுவாக சொல்லிவிட்டாள். உலகிலேயே இலகுவானது அடுத்தவர்க்கு அட்வைஸ் பண்ணுவது. லதா விழிகளை வேறுபக்கம் சுழலவிட்டாள்.

“ லதா.. அப்பாஅம்மாக்கு ஒரு கோல் பண்ணிக் கத..அவுஸ்ரேலியாவில தனியா இருக்கிறது ;ஈஸி இல்ல.இப்பிடியே நீ யாரோடயும் கதைக்காம இருக்கிறத பாத்தா எனக்கு பயமாருக்கு. எப்பிடியிருந்த நீ லதா???? உனக்கு நடந்த விசயங்கள் மறக்க ஏலாது தான். ஆனா வீ ஹாவ் டு மூவ் ஒன். இந்த சிட்டியிலேயே உன்னோட கதைக்கிற நான் மட்டு;ம்தான. என்னோடயும் நீ அவ்வளவா மூவ் பண்ணாம இருந்தா என்ன அர்த்தம்?”

லதா எழுந்தாள். தொப்பியை சரியாக்கினாள். அவளைத்தாண்டி வரும்போது அவள் லதாவின் கைகளைப் பிடித்தாள்.

“இப்பிடி கதைக்காம இருந்தா என்ன அர்த்தம்?”

“ எனக்கு யாரோடயும் கதைக்கப் பிடிக்கல்ல. வாழவே பிடிக்கல்ல” கைகளை உதறிவிட்டு நடந்தாள் லதா. அவள் குரலின் உ‘;ணம் அந்த இடத்தை விட்டு கடந்து செல்ல நேரமானது. சூடு தாங்காமல் அவள் விழிகள் துளிகளை உதிர்த்தன. லதா………….. சிறகடிக்கும் சிட்டுக்குருவியாய் இருந்தவள். கவலைப்புழுக்களே லதாவின் மனப்பூவை அரித்திருக்கும்.

லதா என் நண்பி. அவளைப் பற்றி சொல்ல வேண்டும். இலங்கையில் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவள் அவள். சாதாரண ஒரு குடும்பத்தில் இரண்டு அண்ணன்களுக்கு தங்கையாக வலம்வந்தவள். சுமாராக படித்து பல்கலைக்கழகம் சென்றவள். அங்கு தான் பாலா அறிமுகமானான். சந்திப்புகளை பற்றி சிந்தித்து திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தார்கள். காதல் இலகுவில் முற்றுப் பெறுமா?? இல்லையே……. வீட்டில்  எதிர்ப்பு அலை உருவாக இருவரும் இலங்கையிலிருந்து வெளியேறுவதே சரி என்று வந்து சேர்ந்த இடம் தான் இந்த கன்பெரா நகரம்.தலைநகராய் இருந்து இரண்டு தலைகளை காத்தது கை கொடுத்தது எல்லாம் கன்பெராதான்

மணவாழ்வு மகிழ்ச்சியாகவே கடந்தது. ஒரே சுவையை நீண்டநாட்களுக்கு சாப்பிடமுடியாது அல்லவா?இனிப்பாய் இருந்த வாழ்வு கசக்கத் தொடங்கியது. பாலா புற்றுநோயால் அவதியுற்று லதாவை தவிக்க விட்டு சென்ற காட்சி இன்னும் பதிந்து கிடக்கிறது. மயங்கி மூர்ச்சையாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்தாள். இனி வாழ்வில் என்ன இருக்கிறது??? இருவர; வாழ்க்கைக்கும் ஒளியு+ட்ட குழந்தை இருக்கவில்லை. இலங்கையில் இருந்திருந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்லியே வாழ்க்கை முடிந்திருக்கும். விஞ்ஞான விளக்கங்களும் மருத்துவ முறைகளும் கனவிலும் வந்து நச்சரித்திருக்கும். நல்ல வேளை………

பாலா இறந்ததன் பின் லதாவின் வாழ்வு வெறுமையாகியிருந்தது. எங்கு பார;த்ததாலும் அவன் விம்பப்பொட்டுக்கள் தெறித்துக் கிடந்தன. பார;த்த இடங்கள் பேசிய வார்த்தைகள் செய்த செயல்கள் எல்லாம் லதாலை கொலை செய்யத் தொடங்கின. ஒரு வருடம் உருண்டோடியிருக்க எல்லாவற்றையும் மறந்து விடுவாள் என்ற நம்பிக்கை பொய்க்கத் தொடங்கியிருந்தது. மனநோயாளியாக மாறியிருந்தாள் என்றே சொல்லலாம். யாருடனும் பேசுவதில்லை….. சிரிப்பதில்லை…..வீட்டில் நிரம்பியிருந்த தனிமையோடு கை கோர்த்தது அவள் வாழ்வு. அவள் மனம் விட்டு சிரி;த்ததில்லை…..அந்த நாள் வருமோ தெரியவில்லை……

சாவியை உள்நுழைத்து கதவைத் திறந்தாள் லதா. சப்பாத்துக்களை கழற்றி வைத்தாள்.வீட்டை நோட்டமிட்டாள். குளியலை முடிக்கலாம் என்ற முடிவோடு அறைக் கதவை திறந்தாள். திறக்க முன் மனதில் ஒரு எண்ணம். எங்கே அது? என்ற கேள்வி. கண்ணாடி யன்னலின் அருகே சென்று வெளியுலகைப் பார்த்தாள்  வந்து போன தடங்கள் தெரியவில்லை. ஆனாலும் சப்தங்களை உணர முடிகிறது. மனப்பிரமை….

என்னை ஏன் தேடி வர வேண்டும்? நான் என்ன உறவா? நட்பா? நான் ஏன் அதைப் பற்றி யோசிக்க வேண்டும்?  யாரும் என்னை தேடி வரத் தேவையில்லை. என் அகராதியில் பொய்த்துப்போன அன்பு பாசம் இரக்கம் கருணை போன்ற வார்த்தைகளுக்கு உயிர; கொடுக்க யாரும் வர வேண்டாம். இறைவனிடம் கூட நான் கையேந்துவதில்லை.  ஏந்திய என் கைகளையே வெட்டியவனாயிற்றே இறைவன்…………

லதா நாத்திகவாதியல்ல. பலரைப்போல பிரச்சனைகள் வரும்போது நாத்திகம் பேசுவாள். கடவுளை வணங்கினால் பக்தர்களை காப்பாற்ற வேண்டியது அவர்; கடமையல்லவா???

லதா குழம்பிக்கொண்டாள். குளியல் முடிந்தது. அடுத்தது உணவு.. ஒருத்திக்கு உணவு தயாரிக்க ஒரு அறை…காதல் கலந்து சமைத்த உணவின் ருசி நினைவில் வந்து போனது. காளான்களை ஒலிவ் எண்ணெய் பூசி எலுமிச்சம்சாறு பிழிந்து உப்பு சேர்த்து சூடாக்கும் போது அந்தச் சத்தம். அவளுள்ளும் ஏதோ ஒரு மாற்றம். எட்டிப்பார்த்தாள் லதா.

மழையில் நனைந்திருக்க வேண்டும். வெள்ளை உடலில்; நீர;ச்சொட்டுக்கள். அலகால் இறகுகளை கோதி உலர்த்திக்கொண்டிருந்தது. மஞ்சல் முடிகள் கீழே விழுந்திருந்தன. பயம் அதன் முகத்தில் அப்பிக் கிடந்தது அதன் கண்கள் பேசத் தொடங்கின. லதாவக்கு அதன் மொழி தெரியும். அதற்கு உதவி தேவை. இருக்கட்டும். இங்கு யார்; உதவி செய்கிறார்கள்? உதவி செய்ய முடிந்தாலும் செய்ய மாட்டார்கள். நான் செய்ய வேண்டும் என நீ எதிர்பார்ப்பது தவறு. மனிதனுக்கே உதவி செய்ய தயங்கும் போது……….

யன்னலோர இருக்கையில் அமர்ந்தாள் லதா. கொஞ்சம் துhரத்தில் நின்றிருந்தது அது. தன் இறகுகளை சிலுப்பிவிட்டது. தன் அலகை விரித்து ஒலியை எழுப்பியது அந்த ஒலி அவளை எங்கோ அழைத்தச்சென்றது. இல்லை யாரையும் இனிவாழ்வில் நேசிக்ககூடாது என்ற உறுதியை அசைத்துப் பார்க்கிறதே இது.

இது கொக்காடெய்ல் பறவை. கிளி இனத்தைச் சார்ந்தது. பல் வர்ணங்களில் பார்வைக்கு விருந்தளிக்கும். அதன் இறகுகளைவைத்து அதன் உணர்வுகளை கண்டுபிடிக்கலாம். இசைக்கு ஏற்றாற்போல் நடனம் ஆடக்கூடியது இந்நாட்டின் செல்லப்பறவை என்றழைக்கப்படுவது. எத்தனையோ கண்ணாடிக்கதவுகள் யன்னல்கள் திறந்த கிடக்க இங்கு வந்த நோக்கம்????????

உயிரற்ற பொருட்களால் நிறைந்திருந்த அறைக்குள் உயிரின் ஒலி. புகைப்படத்தில் பாலாவோடு  அன்று சிரித்தது. பிணைப்புகள் எதுவுமில்லா இந்த வாழ்க்கை லதாவின் உள்ளத்தை கருமையாக்கியிருந்தது.

லதாவின் எண்ண அலைகள் தடைப்படுகின்றன. மீண்டும் அது ஒலி எழுப்புகிறது. மனிதர்களோடு தான் பேசக்கூடாது. அதனோடு பேசலாம் என்ற முடிவில் அதனருகே செல்கிறாள் லதா. தன் நீண்ட வாலை கோதிவிட்டு சின்னக்கண்களால் பேசுகிறது அது. உடனே சமையலறைக்கு சென்று கொஞ்சம் தானியங்களை கையில் கொட்டி அதனிடம் நீட்டுகிறாள். தானியங்களை அது அலகால் பொறுக்கி பசியை ஆற்றிக்கொள்கிறது. உற்சாகக்குரலால் வித்தியாசமாய் ஒலி எழுப்பியது. இப்போது அதன் இறகுகள் வேறுவடிவில் காட்சியளிக்கின்றன. சுருட்டை முடியை முன்னுக்கு விட்டு சூப்பர் ஸ்டார் போன்று தன்னை நிலைப்படுத்திய அதை லதா பார;த்தாள்.

நரம்புகள் ஏதோ செய்தி அனுப்புகி;ன்றன. மூளை விழித்துக் கொள்கிறது. உதடுகள் விரிகின்றன. லதா புன்னகைத்தாள். சிரிக்க மறந்த உதடுகள் சிரிப்பை கற்றுக் கொண்டன. அவள் சிரித்ததும் அதுவும் சிரித்தது. பறவையால் எப்படி சிரிக்க முடியும்? அது லதாவைப் பாரத்;து சிரித்தது உண்மை தான். லதா பேசத் தொடங்கினாள்.

“ உனக்கு யாருமில்லயா?”

“இல்ல”

“அப்பா அம்மா”

“என்ன விட்டுத்து பொயிட்டாங்க”

பிரெண்;ட்ஸ் கூட இல்லயா?”

“இல்ல”

“நான் யாரயும் இங்க தங்க சொன்னதில்ல.  ஆனா உன்னட்ட கேக்கிறன்”

“ ……………”

“ நான் இந்த வீட்டில ஒரு பிணமா வாழுறன். எனக்கெண்டு யாருமேயில்ல. யாரிட்டயும் நான் கதைக்க விரும்பல்ல. சிரிப்பு சந்தோசம் எண்டதெல்லாம் தொலஞ்சுபொயிட்டு.கொஞ்சம் சாப்பாடு நித்திரை…….. மனம் முழுக்க சோகம். வீடு பூரா தனிமை. எதுக்காக நான் வாழணும?? யாருக்காக? பாலா போனப்ப நானும் போயிருந்தா……..” பொத்தி வைத்த அழுகை வெடித்தது.

இசையுடன் கூடிய அதன் சிரிப்புச்சத்தம் லதாவின் அழுகைக்கு மேலாக கேட்டது.யாரது? என்று கேட்கவே தேவையில்லை.கொக்காடெய்ல் அமைதியாய்….. பேசியது.

“லதா….நான் பசியாயிருக்கும்போது எனக்கு சாப்பாடு தந்து நான் சாப்பிடுறத பாத்து சந்தோசப்பட்டவள் நீ. ஒரு சின்னப் பறவைக்கு தேவையான ஒரு வேள சாப்பாட கொடுக்கிறது உனக்கு இவ்வளவு சந்தோசத்த குடுத்தா…… உன் முகத்தில சிரிப்பக் கொண்டுவந்தா…. உலகத்தில தேவையோட எத்தனயோ பேர; இருக்காங்க. நம்மளால முடிஞ்சத மத்தவங்களுக்கு குடுப்பது தான் உண்மையான சந்தோசம். அன்பு தான் இறைவன்”

லதாவின் கருமை உள்ளத்தை வெண்மையாக்கி வௌ;ளைச்சிறகை நீட்டி பரந்த வானில் பறந்தது அது. கொக்காடெய்ல் பேசுமா??????????

 

                                                                                                         (முற்றும்)
 
ஆக்கம் - திருமதி.ஹரண்யா பிரசாந்தன்
                    ஆசிரியை
 
 

 

 

 

 

 

Post a Comment

0 Comments